ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் பதவியேற்பு நிகழ்வின் நான்கு ஆண்டு பூர்த்தி இன்று

ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் பதவியேற்பு நிகழ்வின் நான்கு ஆண்டு பூர்த்தி இன்று

நான்கு வருட கால அனுபவங்களுடன் மக்கள் நேய செயற்திட்டங்கள் வெற்றியை நோக்கி முன்னெடுக்கப்படுவதாக ஜனாதிபதி தெரிவிப்பு

  • ஜனாதிபதிக்கு ஆசி வேண்டி பல்வேறு சமய நிகழ்வுகள்

  • அமரர் பண்டாரநாயக்கவின் உருவச் சிலைக்கு ஜனாதிபதி மலரஞ்சலி

  • லக்கல புதிய பசுமை நகரம் மக்களிடம் கையளிப்பு

  • தும்பர பள்ளத்தாக்கை வளமாக்கும் களுகங்கை நீர்த்தேக்கம் மக்களிடம் கையளிப்பு

இன்றைக்கு நான்கு வருடங்களுக்கு முன்னர் தன்னை இந்த நாட்டின் அரச தலைவனாக தேர்ந்தெடுத்த மக்கள், தன்மீது கொண்ட எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்காக முன்னெடுக்கப்பட்ட பல வேலைத்திட்டங்கள் வெற்றியடைந்துள்ளதைப் போலவே சில வேலைத்திட்டங்கள் தோல்வியடைந்த சந்தர்ப்பங்களும் காணப்படுகின்றன என்றும், அதனூடாக பெற்றுக்கொண்ட வெற்றிகளை மேலும் உறுதிப்படுத்த நடவடிக்கை எடுப்பதை போன்றே தோல்விகளை வெற்றியை நோக்கி வழி நடத்த வருங்காலத்தில் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி அவர்கள் வலியுறுத்தினார்.

லக்கல புதிய பசுமை நகரத்தை இன்று (08) முற்பகல் மக்களிடம் கையளித்ததன் பின்னர் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மக்களின் ஜனநாயகம், சுதந்திரம் ஆகியவற்றை உறுதிசெய்து சகல இன மக்களும் அச்சமும் சந்தேகமுமின்றி வாழக்கூடிய சூழலைக் கட்டியெழுப்பவும் ஊடக சுதந்திரம், நீதிமன்றத்தின் சுயாதீன தன்மை, பக்கச்சார்பற்ற அரச சேவை ஆகியவற்றை கட்டியெழுப்பவும் தேசிய பொருளாதாரத்தை பலப்படுத்தவும் கடந்த நான்கு வருட காலத்தில் பல முக்கியமான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டதை ஜனாதிபதி அவர்கள் இதன்போது நினைவுகூர்ந்தார்.

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு முக்கிய சவாலாக காணப்படும் இலஞ்சம், ஊழல், மோசடி ஆகியவற்றை இல்லாதொழிப்பதற்கு கடந்த நான்கு வருடகாலத்தில் சிறப்பான அர்ப்பணிப்பை செய்ததோடு, அதனூடாக பெற்றுக்கொண்ட அனுபவங்களை ஆசீர்வாதமாக கருதி ஊழல், மோசடியை இல்லாது ஒழிப்பதற்கான வலுவான வேலைத்திட்டத்துடன் கைகோர்த்துக்கொள்ள ஜனாதிபதி அவர்கள் அனைத்து மக்களுக்கும் அழைப்பு விடுத்தார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், கட்சி வேறுபாடுகளுடன் அதிகாரத்தை பெற்றுக்கொள்வதற்காக தனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கமைய செயற்படுபவர்களன்றி பொதுவான நிகழ்ச்சி நிரலுக்கமைய நாட்டின் நலன்கருதி சிந்தித்து செயலாற்றுபவர்களே தற்போது நாட்டுக்கு அவசியமாகும் எனவும் புதிய எண்ணங்களோடு, புதிதாக திட்டமிட்டு, புதிய பயணம் ஒன்றினை மேற்கொள்ள பிறந்துள்ள இந்த புத்தாண்டில் அனைவரையும் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அவர்கள் இதன்போது கேட்டுக்கொண்டார்.

ரஜரட்ட மக்களின் நீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் முகமாக மொரகஹகந்த – களுகங்கை பாரிய நீர்ப்பாசனத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதைப் போன்று வடக்கு மக்களின் நீர்ப் பிரச்சினைக்கும் உரிய தீர்வொன்றினை பெற்றுக்கொடுக்கும் தினத்திலேயே தன்னால் உண்மையான மகிழ்ச்சியை உணர முடியுமென ஜனாதிபதி அவர்கள் இதன்போது குறிப்பிட்டார்.

சுதந்திரம், ஜனநாயகம், பொருளாதார சுபீட்சம் மற்றும் மக்கள் அச்சமும் சந்தேகமுமின்றி வாழக்கூடிய சூழலைக் கட்டியெழுப்புவதற்கான விரிவான செயற்பணிகளை நிறைவேற்றும் அதேவேளை, இனங்களுக்கிடையே சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவதற்கு தேவையான சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி அவர்கள் வலியுறுத்தினார்.

பொதுமக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றி, அமைதியானதொரு தேசத்தையும் பேண்தகு அபிவிருத்தியையும் கட்டியெழுப்பும் நோக்குடன் 2015 ஜனவரி 08ஆம் திகதி இந்த நாட்டின் 62 இலட்சத்துக்கும் அதிகமான மக்களின் வாக்குகளின் மூலம் ஜனாதிபதி பதவிக்கு தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் பதவிக்கு தெரிவுசெய்யப்பட்டு இன்றுடன் நான்கு ஆண்டுகள் நிறைவடைகின்றன.

அதனை முன்னிட்டு ஜனாதிபதி அவர்களுக்கு ஆசி வேண்டி பல்வேறு இடங்களில் சமய கிரியைகள் இடம்பெற்றதுடன், நேற்றிரவு ஜனாதிபதி அலுவலகத்தில் பிரித் பாராயணமும் இடம்பெற்றது.

இன்று முற்பகல் மகா சங்கத்தினருக்கான அன்னதான நிகழ்வொன்றும் இடம்பெற்றது.

இதேநேரம் இன்று காலை ஜனாதிபதி அவர்கள் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகர் அமரர் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க அவர்களின் உருவச்சிலைக்கு மலரஞ்சலி செலுத்தி தனது பணிகளை ஆரம்பித்தார். காலஞ்சென்ற பிரதமர் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் 120ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு காலி முகத்திடலிலுள்ள பண்டாரநாயக்க அவர்களின் உருவச்சிலைக்கு அருகில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி அவர்கள் உருவச்சிலைக்கு மலரஞ்சலி செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து “மைத்ரி ஆட்சி – பேண்தகு யுகம்” பொருளாதார, கலாசார மறுமலர்ச்சியின் ஐந்தாண்டு பிரவேசத்தை முன்னிட்டு மொரகஹகந்த – களுகங்கை திட்டத்தினால் நீரில் மூழ்கிய லக்கல நகரத்திற்கு பதிலாக நிர்மாணிக்கப்பட்டுள்ள லக்கல புதிய பசுமை நகரத்தை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் ஜனாதிபதி அவர்கள் கலந்துகொண்டார்.

மொரகஹகந்த நீர்த்தேக்கத்துடன் தொடர்புபடும் அடுத்த பாரிய நீர்த்தேக்கமான களுகங்கை நீர்த்தேக்கத்தையும் ஜனாதிபதி அவர்கள் மக்களிடம் கையளித்தார்.

நவீன வசதிகளுடன் கூடிய புதிய லக்கல நகரமானது ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் ரஜட்ட மக்களுக்காக கண்ட கனவினை நனவாக்கி நான்கு தசாப்தங்களுக்கு பின்னர் இந்த நாட்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பாரிய பல்நோக்கு திட்டமான மொரகஹகந்த – களுகங்கை நீர்த்தேக்கத் திட்டத்தின் மற்றுமொரு பெறுபேறாக அம்மக்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

மொரகஹகந்த – களுகங்கை திட்டத்தின் மூலம் இடம்பெயர்ந்த 3.000 குடும்பங்களின் தேவைகளை நிறைவேற்றி களுகங்கை நீர்த்தேக்கத்தினால் நீரில் மூழ்கிய லக்கல நகரத்திற்கு பதிலாக களுகங்கை நீர்த்தேக்கத் திட்டத்திற்கு அண்மித்ததாக புதிய லக்கல நகரம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. எதிர்கால தேவைகளை கருத்திற்கொண்டு புதிய நகர எண்ணக்கருவான பூங்கா நகர எண்ணக்கருவிற்கு அமைய இந்த நகரம் திட்டமிடப்பட்டுள்ளதுடன் இதற்காக மொத்தமாக 4,500 மில்லியன் ரூபா முதலீடு செய்யப்பட்டுள்ளது.

லக்கல புதிய நகரத்தில் 26 அரச நிறுவனங்களுக்கான கட்டிடங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், மக்களுக்கு சேவையை வழங்கும் அந்த அனைத்து நிறுவனங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபடக்கூடிய வகையில் திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இந்த வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள லக்கல புதிய பிரதேச வைத்தியசாலையை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வும் பல்லேகம மத்திய மகா வித்தியாலயத்தின் நிர்வாக கட்டிடத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வும் ஜனாதிபதி அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மேலும் புதிய நகரத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய வீடுகள், பாடசாலைகள், வைத்தியசாலைகள், பிரதேச செயலாளர் அலுவலகம், பொலிஸ் நிலையம், விளையாட்டு மைதானம், சந்தை, பஸ் தரிப்பிடம், தபால் அலுவலகம், சுகாதார மத்திய நிலையம், நெடுஞ்சாலைகள் முறைமை உள்ளிட்ட அரச சேவைகள் மற்றும் மக்கள் உட்கட்டமைப்பு வசதிகளை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வுகள் அமைச்சர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

அமைச்சர்கள் பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்த அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளும் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் ஜனாதிபதி பதவிக்கு தெரிவுசெய்யப்பட்டு நான்கு ஆண்டுகள் நிறைவடையும் இன்றைய தினத்தில் மக்கள் மயப்படுத்தப்பட்டிருப்பது, மக்கள் நலன் பேணலை கருத்திற்கொண்டு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் நான்கு வருடங்களாக முன்னெடுத்த அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களின் மற்றுமொரு உன்னத பெறுபேறுகளேயாகும்.

லக்கல புதிய பசுமை நகரத்தை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் ஆற்றிய உரை – 08.01.2019

எமது நாட்டின் தேசிய பொருளாதாரத்தில் பாரிய சக்தியாக விளங்கும் விவசாய மக்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதன் ஊடாக தேசிய பொருளாதரத்திற்கு பாரிய பக்க பலமாக அமையும் மொரகஹகந்த – களுகங்கை நீர்ப்பாசனத் திட்டத்தின் மற்றுமொரு முக்கிய மைல் கல்லாக அமையும் இன்றைய தினத்தில் இந்த அன்பான மக்களை சந்திக்க கிடைத்ததையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்.

இன்று ஜனவரி 08ஆம் திகதி. 2015 ஜனவரி 08ஆம் திகதி இந்நாட்டு மக்கள் என்மீது நம்பிக்கை வைத்து நாட்டின் அரச தலைவனாகவும் மக்களின் முதன்மை சேவகனாகவும் என்னை தேர்ந்தெடுத்து இன்றுடன் நான்கு வருடங்கள் பூர்த்தியடைகின்றன. இந்த நான்கு வருட காலத்தில் மக்களின் ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்தவும் சுதந்திரத்தை பலப்படுத்தவும் அச்சமும் சந்தேகமுமின்றி வாழ்வதற்கான சூழலைக் கட்டியெழுப்பவும் சுதந்திர ஊடகம், சுயாதீன நீதிமன்றங்கள் மற்றும் பக்கச்சார்பற்ற அரச சேவை ஆகியவற்றைக் கட்டியெழுப்பவும் பரந்தளவிலான பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு தேசிய பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்கான பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

கடந்த நான்கு வருட காலத்தில் நாட்டு மக்கள் எதிர்பார்த்த குறிக்கோள்களை அடைவதற்கு நாம் பெரிதும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளோம். அதன் பல பெறுபேறுகள் கிடைத்துள்ளன. அவற்றுள் பல சாதகமானவையாகவும் சில தோல்விகளாகவும் காணப்படுகின்றன. வெற்றியை போன்றே தோல்விகளும் காணப்படுகின்றன. பெற்றுக்கொண்ட வெற்றிகள் தொடர்பாக உரையாடுவதைப்போலவே தோல்விகளையும் கருத்திற்கொண்டு அவற்றை வெற்றியடைவதற்காக எதிர்வரும் காலத்தில் உங்களுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என நான் உறுதியாக கூறிக்கொள்கின்றேன். பெற்றுக்கொண்ட வெற்றிகள் தொடர்பாக தொடர்ச்சியாக நான் உரையாற்றப் போவதில்லை. நல்லாட்சி அரசியல் எண்ணக்கருவின் அடிப்படை அம்சமாக கருதப்பட்ட அரச மற்றும் அரச பொறிமுறையில் இலஞ்சம், ஊழல், மோசடி, வீண்விரயம் ஆகியவற்றை இல்லாதொழிக்கும் முயற்சியில் நாம் தோல்வி அடைந்துள்ளோம். இதனையே நான் கடந்த காலத்தில் சந்தித்த தோல்வியாக கருதுகின்றேன். இந்த தோல்வியினை வெற்றிகொள்ள நாம் அனைவரும் மீண்டும் உறுதிப்பாட்டுடன் ஒன்றிணைவோம். கடந்த நான்கு வருட கால அனுபவங்களை கருதுகையில் நாட்டை கட்டியெழுப்ப நாட்டின் தேசிய வருமானத்தை அதிகரிக்க, மக்களுக்கு சிறந்த பொருளாதாரத்துடன் சுபீட்சமிக்க சமூகத்தை கட்டியெழுப்ப, தற்போது எம்முன் காணப்படும் பாரிய சவாலாக இருப்பது இலஞ்ச, ஊழல், மோசடி வீண்விரயம் ஆகியவையாகும். அரசியல்வாதிகள் முதல் சகல துறைகளிலும் காணப்படும் இந்த பாரிய அழிவினை நாட்டிலிருந்து இல்லாது செய்ய நாம் அனைவரும் கைகோர்க்க வேண்டும்.

இன்று இலங்கையின் முதலாவது பசுமை நகரமாக லக்கல புதிய நகரம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. நான் அறிந்தவகையில் மன்னர் ஆட்சி காலத்தின் பின்னர் பரிபூரண நகரமாக நிர்மாணிக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கும் வரலாற்று முக்கியத்துவமிக்க முதலாவது பசுமை நகரம் இதுவாகும். அதனையிட்டு நான் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன். எமது நாட்டின் வரலாறு தொடர்பில் நாம் அறிவோம். 1948ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றதன் பின்னர் டி.எஸ்.சேனாநாயக்க அவர்கள் வெற்றிகரமான விவசாய குடியேற்றம் அபிவிருத்தி செயற்திட்டங்கள் ஆகியவற்றை கட்டியெழுப்பவதில் முன்னணி வகித்தார் என்பதை நாம் அறிவோம்.

எனது தந்தையும் விவசாய குடியேற்றத்தில் வாழ்ந்த ஒரு சாதாரண விவசாயி என்பதை நீங்கள் அறிவீர்கள். பராக்கிரம சமுத்திரத்தின் நீரோட்டத்தினால் வளம்பெற்ற விவசாய பொருளாதாரத்தினால் போஷிக்கப்பட்டவனே நான். மண்வெட்டி, கோடரி ஆகியவற்றை உபயோகித்து பழக்கப்பட்டவன் நான். எனது வாழ்க்கை விவசாய பொருளாதாரத்துடனேயே வடிவமைக்கப்பட்டது. நீர்ப்பாசனம், கலாசாரம் மற்றும் பாரிய சமூக சக்தியுடனேயே நான் வளர்ந்தேன். மகாவலி அபிவிருத்தி திட்டமே இறுதி நீர்த்தேக்கத் திட்டத்தினையே தற்போது பூர்த்தி செய்யப்பட்டுள்து. கொத்மலை, விக்டோரியா, ரன்தம்மை, மாதுறு ஓயா போன்ற நீர்த்தேக்க திட்டங்கள் ஆரம்பிக்கப்படுவதற்கு பொல்கொல்ல திருப்பத்திலிருந்து 5 பாரிய நீர்த்தேக்கங்களை நிர்மாணிக்கும் செயற்திட்டத்தில் இறுதி திட்டமாகவே மொரகஹகந்த களுகங்கை நீர்ப்பாசன திட்டம் அமைந்துள்ளது.

அன்று முதல் இன்று வரையான காலப்பகுதியில் புதிய நீர்வள நாகரீகம், மகாவலி விவசாய கலாசாரத்துடன் நாட்டின் தேசிய பொருளாதாரத்தை பலப்படுத்த பெரும் அர்ப்பணிப்பு செய்த பொறியியலாளர்கள், தொழிலாளர்கள், அதிகாரிகள் பலர் காணப்படுகின்றனர். இலங்கையின் முதலாவது மகாவலி அமைச்சரான சி.பி.த சில்வா, மைத்ரிபால சேனாநாயக்க, காமினி திசாநாயக்க, காமினி அத்துகோரல போன்றோரை ஒருபோதும் எம்மால் மறந்துவிட முடியாது. சி.பி.த சில்வாவை தவிர்ந்த ஏனைய அனைவரோடும் நான் மிக நெருக்கமாக பழகி இருக்கின்றேன். சி.பி.த சில்வாவுடன் நெருக்கமாக பழகியிருக்கவிடினும் பாடசாலை மாணவனாக, கிராமத்து இளைஞனாக, கிராமத்தின் பிரச்சினைகளை முன் வைப்பதற்காக மனுக்களை எழுதிக்கொண்டு சி.பி.த சில்வா அவர்களை சந்தித்துள்ளேன்.

அன்று முதல் இன்று வரையான காலத்தில் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட முதன்மை பல்நோக்கு அபிவிருத்தி திட்டமென்ற வகையில் தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் பாரிய பயனுறுதிமிக்க பல பெறுபேறுகளை மகாவலி திட்டம் பெற்றுக்கொடுத்துள்ளது. தனது அறிவு, முயற்சி தேசிய அடையாளத்திற்காக தமது வாழ்வினை தியாகம் செய்த கீர்த்திமிக்க பொறியியலாளரான மகாவலி திட்டத்திற்கு பாரிய சக்தியாக விளங்கிய கலாநிதி ஏ.என்.எஸ். குலசிங்க அவர்களை இங்கு நான் விசேடமாக நினைவுகூர வேண்டும். 90களின் இறுதிப் பகுதியில் மொரகஹகந்த – களுகங்கை வனாந்தரத்திற்கு பிரதி அமைச்சர் என்ற வகையில் என்னை அழைத்துச் சென்று நீர்த்தேக்கம், சுரங்கக் கால்வாய் போன்றவற்றை எந்தெந்த இடங்களில் அமைக்க வேண்டுமென்பதை எனக்கு சுட்டிக்காட்டிய கலாநிதி குலசிங்க அவர்களின் பெயரினை மொரகஹகந்த நீர்த்தேக்கத்திற்கு சூட்டுவதற்கு இந்த நாட்டின் தொழிநுட்ப துறைக்கு அவர் ஆற்றிய சேவையையும் அர்ப்பணிப்பையும் கௌரவிப்பதற்கும் நாட்டிற்காக செயற்படும் சகல பொறியியலாளர்களுக்கும் மதிப்பளிப்பதற்கும் ஆகும்.

இன்று காலை எமது இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அரசாங்கத்தின் சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தேன். பலரும் வருகை தந்தனர். இன்று பாராளுமன்ற தினம் என்பதால் அவர்கள் அனைவரும் அந்த செயற்பாட்டினை நிறைவு செய்து பாராளுமன்றத்திற்கு சென்றுவிட்டனர். இன்று இங்கு வருகை தந்து திறப்பு விழாவில் கலந்துகொண்டு எனக்கும் இந்த மக்களுக்கும் அவர்கள் வழங்கிய ஒத்துழைப்பிற்காக அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். வரட்சியால் வெடிப்புற்ற நிலங்களை ஈரமாக்கிய, துவண்டுபோன மனங்களைக் குளிர்வித்த மொரகஹகந்த – களுகங்கை நீர்த்தேக்கத் திட்டத்தை நாம் மக்களின் பாவனைக்கு கையளித்துள்ளோம்.

2016.07.25 ஆம் திகதி களுகங்கை அணைக்கட்டின் நிர்மாணப் பணிகள் நிறைவு செய்யப்பட்டன. இந்த பாரிய நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு 200,000 ஏக்கர் அடிகளாகும். மொரகஹகந்த நீர்த்தேக்கத்தில் 460,000 ஏக்கர் அடி கொள்ளளவு உள்ளது. இலங்கையின் பாரிய நீர்த்தேக்கம் சேனாநாயக்க சமுத்திரமாகும். அதற்கு அடுத்ததாக இருப்பது இந்த மொரகஹகந்தை – களுகங்கை திட்டமென்பதை நீங்கள் அறிவீர்கள்.

இந்த திட்டம் பற்றி குறிப்பிடுகின்றபோது லக்கல பசுமை நகரத்திற்கு மட்டும் நாம் 215 கோடி ரூபாவுக்கும் அதிகம் செலவிட்டுள்ளோம். 112 புதிய கட்டிடங்களை அமைத்துள்ளோம். இப்பிரதேசத்தில் வீதி அபிவிருத்திக்காக 955 கோடிக்கு மேல் செலவிடப்பட்டுள்ளது. குடிநீர் திட்டத்திற்காக 450 கோடி ரூபா முதலிடப்பட்டுள்ளது. தற்போது மொரகஹகந்த – களுகங்கை பாரிய நீர்த்தேக்கத் திட்டத்தின் கீழ் இகல எலஹர, மினிப்பே கால்வாய், வயம்ப கால்வாய் போன்றவற்றின் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவை அனைத்திற்காகவும் 26,000 கோடி ரூபா முதலிடப்பட்டுள்ளது.

இத்தகைய பாரிய முதலீடு இலங்கையில் இதுவரையில் எந்தவொரு அபிவிருத்தி திட்டத்திற்கும் முதலீடு செய்யப்படவில்லை. நாட்டின் தேசிய அபிவிருத்திக்காக இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட பாரிய முதலீடு இதுவாகும். இதன் மூலம் முக்கியமாக நாம் எதிர்பார்ப்பது இங்கு வாழும் லக்கல பிரதேச மக்களினதும் ஐந்து மாகாணங்களில் வாழும் மக்களினதும் பொருளாதாரத்தை பலப்படுத்துவதும் சிறந்ததோர் எதிர்காலத்தை ஏற்படுத்தி கொடுப்பதுமாகும். நாட்டின் வறுமையை போக்குவது எம்முன் இருக்கும் முக்கிய சவாலாகும். வறுமையிலிருந்து விடுபடுவதற்கு இலங்கையில் ஊழல், மோசடி, வீண்விரயம் ஆகியவற்றை ஒழிக்க வேண்டும். பொருளாதார அபிவிருத்தி ஏற்பட வேண்டும். வருமானம் அதிகரிக்க வேண்டும். விவசாயத்துறையை போன்று கைத்தொழிற்துறை உற்பத்திகளும் அதிகரிக்க வேண்டும். நாட்டில் படித்த கல்விமான்களை கொண்ட சமூகமொன்றை உருவாக்க வேண்டும் தேசத்தின் எதிர்காலத்திற்காக கற்றவர்களை கொண்ட சமூகத்தை உருவாக்க வேண்டும். இதற்காகவே நாம் அனைத்தையும் அர்ப்பணிக்கின்றோம். நான் இவ்விழாவிற்கு வருகை தந்த போது இந்த பாடசாலையின் பிள்ளைகள் என்னை சூழ்ந்து கொண்டனர். நான் அந்த பிள்ளைகளிடம் உங்களுக்கு என்ன குறைபாடுகள் உள்ளன, நாம் இன்று உங்களுக்கு சிறந்ததோர் பாடசாலையை அமைத்து தந்திருக்கிறோம் எனக் கூறினேன். அதற்கு அப்பிள்ளைகள் பாடசாலை கிடைத்திருக்கிறது. ஆனால் எமக்கு கதிரை, மேசைகளோ, கணனி வசதிகளோ, விளையாட்டு உபகரணங்களோ கிடையாது எனக் கூறினர்.

பெற்றோர்களே! கதிரை, மேசைகளை விரைவாக தர முடியாது. அவற்றை செய்துதான் தர வேண்டும். நான் கடந்த வாரம் ஜனாதிபதி அலுவலகத்தின் மூலம் கதிரை, மேசைகளை செய்து பாடசாலைக்கு வழங்கும் டென்டர் ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டேன். மாகாண சபையில் அல்லது கல்வியமைச்சில் இருக்குமானால் அதனை உடனடியாக அனுப்ப முடியும். ஆனால் அதுபற்றி எனக்கு தெரியாது. இன்னும் சில மாதங்களில் அந்த கதிரை, மேசைகளை அனுப்பி வைப்பதை போன்று இன்னும் ஓரிரு வாரத்தில் இந்த பிள்ளைகள் கேட்ட அனைத்தையும் இந்த பாடசாலைக்கு அனுப்பி வைப்பேன் என்பதை குறிப்பிட விரும்புகிறேன். நாம் இந்த பசுமை நகரத்தை கட்டியெழுப்புவது எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்காகவே ஆகும். எனவே நாளைய தினத்தை சிறந்ததோர் நாளாக மாற்றுவதற்கு இந்த நாட்டு பிள்ளைகளின் கனவுகளை நனவாக்குவதற்கு நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். நாம் இந்த நீரை வழங்கி மகிழ்ச்சியடையும் அந்த நாளைப் போன்று உண்மையாகவே மகிழ்ச்சியடையும் நாள் வடக்கு மக்களின் நீர்ப் பிரச்சினையை தீர்க்கின்ற நாளிலே ஆகும் என்பதை நான் தெளிவாக குறிப்பிட வேண்டும். ஆறு, ஏழு மாதங்களுக்கு முன்னர் முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனியா பிரதேசங்களுக்கு சென்றிருந்தபோது வரட்சியுடன் அப்பிரதேசங்களில் நீர்ப் பிரச்சினை கடுமையாக இருந்தது. அப்பிரதேச மக்கள் வாரத்தில் ஒருமுறை உழவு இயந்திரங்களில் தூர இடங்களுக்கு குளிப்பதற்காக செல்கிறார்கள். பல கிராமங்களில் குடிநீர் கிடையாது. புதிதாக தண்ணீர் விற்பனையாளர்கள் உருவாகியிருக்கின்றார்கள். நீர் வழங்கல் அதிகார சபையினதோ மக்கள் சுகாதார அதிகாரிகளினதோ எவ்வித கண்காணிப்புமின்றி அவர்கள் பெரிய பெரல்களில் தண்ணீரை கொண்டு வந்து கிராமங்களுக்கு விற்பனை செய்கிறார்கள்.

ஒரு புறத்தில் குடிநீர் தட்டுப்பாடும் மற்றுமொரு புறத்தில் விவசாய, கைத்தொழில் உற்பத்திகளுக்கு தேவையான நீரின்றி அவர்கள் கஷ்டப்படுகிறார்கள். எனவே நான் ஜனாதிபதி பதவிக்கு தெரிவுசெய்யப்பட்டு நான்கு ஆண்டுகள் நிறைவடைந்து புதிய வருடத்தில் நுழைகின்ற இச்சந்தர்ப்பத்தில் சுதந்திரம், ஜனநாயகம், பொருளாதார சுபீட்சத்தை போன்று மக்களுக்கு அச்சம், சந்தேகம் இல்லாமல் வாழ்வதற்கு விரிந்ததோர் சமூகப் பணியை மேற்கொண்டு இனங்களுக்கிடையில் ஐக்கியத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கு முடியுமான அனைத்து அர்ப்பணிப்புகளையும் நாம் செய்வோம் என்று தெளிவாக குறிப்பிட விரும்புகிறேன். அதற்காக அரசியல் கட்சி பேதங்களை மறந்து நாட்டை கட்டியெழுப்புவதற்காக அனைவரும் ஒன்றுபட வேண்டும். கட்சிகளாக பிரிந்து நின்று அதிகாரத்திற்கு வருவது எப்படி என்ற நிகழ்ச்சி நிரலன்றி தனிப்பட்டவர்களின் நிகழ்ச்சி நிரல்களை பார்க்கிலும் நாட்டின் வறுமையை ஒழித்து நாட்டில் பொருளாதாரத்தையும் ஒழுக்கப் பண்பாடான சமூகத்தையும் ஆன்மீக மேம்பாட்டையும் கொண்ட சமூகமொன்றை கட்டியெழுப்பும் நிகழ்ச்சி நிரலே தேவையாகும். எனவே அனைவரும் நேர்மையான அர்ப்பணிப்புடன் அதற்காக ஒன்றுபட வேண்டும்.

அரசியல் கட்சிகள், அரசியலில் இருக்கின்ற தலைவர்கள், அரசியலுக்கு புதிதாக வருகின்ற பிரதேச சபை உறுப்பினர்கள் என எல்லா இடங்களிலும் ஊழல் மலிந்து காணப்படுகின்றன. நாட்டை கட்டியெழுப்புவதில் உள்ள சவாலை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். மக்களுக்கு கிடைக்கின்ற வாய்ப்புகளில் மக்கள் மேற்கொள்கின்ற தீர்மானங்களில் மிகத் தெளிவாக நாட்டுக்கு தேவையாக இருக்கின்ற, நாட்டை கட்டியெழுப்புகின்ற, நாட்டை விரும்புகின்ற தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களையும் அரசியல் கட்சிகளின் அதிகாரத்திற்கான நிகழ்ச்சி நிரல்களையும் ஒதுக்கி, நேர்மையான, அர்ப்பணிப்புடன் செயற்படுகின்ற அரசியல்வாதிகளையே கருத்திற்கொள்ள வேண்டும். எனவே எமது பாரம்பரியங்களில் நல்லவற்றை நாம் பேணிப் பாதுகாப்பதைப் போன்று நவீன தொழிநுட்பத்துடன் எதிர்காலத்தில் உருவாகின்ற கற்ற இளம் தலைமுறைக்கு தேவையான சிறந்ததோர் எதிர்காலத்தை, சிறந்ததோர் நாட்டை கட்டியெழுப்புவதற்கு நாம் புதிதாக சிந்திக்க வேண்டும். புதிதாக திட்டமிட வேண்டும். புதியதோர் பயணத்தை மேற்கொள்ள வேண்டும். புதிதாக சிந்தித்து, புதிதாக திட்டமிட்டு, புதியதோர் பயணத்தை மேற்கொள்வதற்கு பிறந்திருக்கும் புத்தாண்டில் இந்த நாட்டு மக்கள் எம்முடன் கைகோர்க்க வேண்டும் என நான் கௌரவமாக அழைப்பு விடுக்கிறேன். மகாவலி அபிவிருத்தி திட்டத்தை போன்று நாட்டின் தேசிய பொருளாதாரத்திற்கு கிடைத்த பாரிய வெற்றியாக இந்த உன்னத பெறுபேற்றினை அனுபவிப்பதைப்போன்று அவற்றிலிருந்து உச்ச பயனை பெற்றுக்கொள்வதற்கு இந்த திட்டத்தில் எஞ்சியுள்ள 2,400 குளங்கள் மற்றும் மூன்று பாரிய கால்வாய்களை முழுமைப்படுத்த வேண்டியுள்ளது.

இன்று களுகங்கை நீர்த்தேக்கத்தை மக்களிடம் கையளிக்கும் சந்தர்ப்பத்தில் பொறியியலாளர் ஒருவரிடம் நீர்த்தேக்கத்தின் நீர் கொள்ளளவு பற்றி வினவினேன. இன்னும் சில மாதங்களில் மொரகஹகந்த நீர்த்தேக்கத்தை போன்று களுகங்கை நீர்த்தேக்கமும் நிரம்புவதற்கு இயற்கை உதவ வேண்டும் என நான் பிரார்த்திக்கிறேன். இந்த நாட்டின் ஏழை மக்களின் வறுமையை போக்கி சுபீட்சமானதொரு பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு அனைவருக்கும் சிறந்ததோர் பொருளாதாரத்தை ஏற்படுத்தி கொடுப்பதற்கும் எமக்கு சந்தர்ப்பமும் இயற்கையின் ஆசிர்வாதமும் கிடைக்க வேண்டும் என்றும் பிரார்த்திக்கிறேன்.

இன்று இந்த நடவடிக்கைகளில் பங்குபற்றி எமக்கு ஆசி வழங்கிய மகா சங்கத்தினருக்கும் ஏனைய சமயத் தலைவர்களுக்கும் அமைச்சர்களுக்கும் அரசாங்க அதிகாரிகளுக்கும் இங்கு வருகை தந்திருக்கின்ற உங்கள் அனைவருக்கும் அனுசரணை வழங்கிய அனைவருக்கும் அரசாங்கத்தின் சார்பிலும் தனிப்பட்ட முறையிலும் எனது நன்றியை தெரிவிக்கின்றேன். பிறந்திருக்கும் 2019ஆம் ஆண்டு மிகவும் சிறந்ததோர் ஆண்டாக அமைய வேண்டும் என பிரார்த்தித்து நாட்டின் எதிர்காலத்திற்காக முன்நோக்கி செல்வதற்கும் நாம் அனைவரும் ஒன்றுபடுவோம் என்ற கௌரவமான அழைப்பை விடுத்து உங்களிடமிருந்து விடைபெறுகின்றேன். நன்றி

 

 

 

 

Share This Post

NEW