பொலன்னறுவை மாவட்டத்தின் பல்வேறு விகாரைகளின் அபிவிருத்தி பணிகளை ஜனாதிபதி ஆரம்பித்து வைத்தார்

பொலன்னறுவை மாவட்டத்தின் பல்வேறு விகாரைகளின் அபிவிருத்தி பணிகளை ஜனாதிபதி ஆரம்பித்து வைத்தார்

“எழுச்சிபெறும் பொலன்னறுவை” மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பொலன்னறுவை மாவட்டத்தில் பல்வேறு விகாரைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்தி பணிகளை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று (28) திறந்து வைத்தார்.

பொலன்னறுவை பளுகஸ்தமன வித்யாசார பிரிவெனாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய சமய உரை மண்டபத்துடன்கூடிய இரண்டு மாடி மகாசங்கத்தினருக்கான தங்குமிட கட்டிடத்தை ஜனாதிபதி அவர்கள் மகாசங்கத்தினரிடம் கையளித்தார்.

பிக்கு கல்வியை மேம்படுத்தும் நோக்கில் 138 இலட்ச ரூபா செலவில் இந்த இரண்டு மாடி கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

விகாரைக்குச் சென்ற ஜனாதிபதி அவர்கள் சமய கிரியைகளில் ஈடுபட்டு ஆசிர்வாதங்களை பெற்றுக்கொண்டதுடன், நினைவுப் பலகையை திரைநீக்கம்செய்து கட்டிடத்தை திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வை நினைவூட்டும் வகையில் ஜனாதிபதி அவர்களினால் மரக்கன்றொன்றும் நடப்பட்டது.

பளுகஸ்தமன வித்யாசார பிரிவெனாதிபதி சங்கைக்குரிய போலேனே சோமானந்த நாயக்க தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினரும் வடமத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க, வடமேல் மாகாண ஆளுநர் பேசல ஜயரத்ன, பொலன்னறுவை நகரபிதா ஷானக சிதத் ரணசிங்க உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதேநேரம் தமன்கடுவ ஸ்ரீ பூர்வாராம வெஹெரகொடெல்ல விகாரையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மகாசங்கத்தினருக்கான இரண்டு மாடி தங்குமிட கட்டிடத்தை மகாசங்கத்தினரிடம் கையளிக்கும் புண்ணிய நிகழ்வு இன்று ஜனாதிபதி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

சங்கைக்குரிய உடகம தம்மானந்த நாயக்க தேரரின் தலைமையில் இடம்பெற்ற இந்த புண்ணிய நிகழ்வில் விகாராதிபதி சங்கைக்குரிய நிஸ்ஸங்கமல்லபுர ஜினாநந்த தேரரினால் ஜனாதிபதி அவர்களுக்கு நினைவுச் சின்னமொன்று வழங்கி வைக்கப்பட்டது.

லங்காபுர பிரதேச செயலக பிரிவில் புலஸ்திகம ஷாக்ய பிம்பாராம விகாரையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய அன்னதானசாலையை மகாசங்கத்தினரிடம் கையளிக்கும் புண்ணிய நிகழ்வில் ஜனாதிபதி அவர்கள் கலந்துகொண்டார்.

விகாரைக்குச் சென்ற ஜனாதிபதி அவர்களுக்கு விகாராதிபதி சங்கைக்குரிய யடிஹலகல உபதிஸ்ஸ நாயக்க தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினர் பிரித் பாராயணம் செய்து ஆசிர்வதித்தனர்.

மேலும் சேவாகம கௌத்தம போதிருக்காராமயவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய அன்னதானசாலை கட்டிடத்தை ஜனாதிபதி அவர்கள் மகாசங்கத்தினரிடம் கையளித்தார்.

சங்கைக்குரிய கல்லேல்லே ஆரியவங்ச நாயக்க தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினரும் வடமேல் மாகாண ஆளுநர் பேசல ஜயரத்ன, தமன்கடுவ பிரதேச சபை உறுப்பினர் ஜயந்த பண்டார உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Share This Post

NEW