பேண்தகு அபிவிருத்தியுடன் இணைந்த கட்டிட நிர்மாணத்துறையின் தேவையை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்

பேண்தகு அபிவிருத்தியுடன் இணைந்த கட்டிட நிர்மாணத்துறையின் தேவையை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்

பேண்தகு அபிவிருத்தியுடன் இணைந்த கட்டிட நிர்மாணத்துறையின் தேவை முதன்மையானதாக காணப்படுவதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

இன்று (23) முற்பகல் “Construct – 2019” சர்வதேச கட்டிட நிர்மாண கண்காட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தேசிய நிர்மாணத்துறை சங்கத்தினால் 19வது முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கண்காட்சி ஓகஸ்ட் 23, 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் தொடர்ந்து கொழும்பு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க கண்காட்சி மண்டபத்தில் நடைபெறும்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், அபிவிருத்தி மற்றும் கட்டிட நிர்மாணத்துறை சுற்றாடல் பாதுகாப்பிற்கு ஏற்படுத்தும் அச்சுறுத்தலை கடந்த காலங்களில் எவரும் கவனத்திற்கொள்ளவில்லை எனவும் குறிப்பிட்டார்.

அவ்விடயம் தொடர்பில் அறிஞர்களும் துறைசார் நிபுணர்களும் கடந்த சில வருடங்களாக விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும் சுற்றாடல் பாதுகாப்பிற்கான தனிநபர் பொறுப்பை யாரும் மறந்துவிடக் கூடாதெனவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

பெருந்தெருக்கள் மற்றும் பாரியளவிலான கட்டிடங்களை நிர்மாணிக்கும்போது நாட்டின் சனத்தொகை, அபிவிருத்தி, பின்புலம், நிலபரப்பு போன்ற விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை தெளிவுபடுத்திய ஜனாதிபதி அவர்கள், இலங்கையில் நிர்மாணிக்கப்படும் கட்டிடங்கள் சூழல், சம்பிரதாயம், கலாசாரம், நாட்டின் தனித்துவம் மற்றும் கட்டிட கலை முறைமைகளுக்கு அமைவாக நிர்மாணிக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

நிர்மாணப் பணிகளின்போது வினைத்திறனான வலுசக்தி பாவனை, பேண்தகு நிலத்திட்டமிடல் மற்றும் முகாமைத்துவம், மூலப்பொருட்கள் மற்றும் வளங்களின் முகாமைத்துவம், கட்டிட வளாகத்தினுள் சூழற் பண்புகள், நீர் முகாமைத்துவம், பசுமை புத்தாக்கம் போன்ற சமூக, கலாசார நியமங்களுக்கமைய செயற்பட வேண்டுமென்பதையும் ஜனாதிபதி அவர்கள் தெளிவுபடுத்தினார்.

கட்டிட நிர்மாணத்துறையின் சிறப்புக்களை பாராட்டிய ஜனாதிபதி அவர்கள், அத்துறையில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் என்ற வகையில் கூடிய தலையீட்டினை மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

தெற்காசியாவில் அதிக நன்மதிப்பினை பெற்றுள்ள “Construct – 2019” சர்வதேச கட்டிட நிர்மாணக் கண்காட்சி கட்டிட நிர்மாண பொறியியல், வீட்டு நிர்மாணக்கலை, கட்டிடக்கலை மற்றும் தகவல் தொழிநுட்பம் ஆகிய பல்வேறு துறைகளில் 250க்கும் மேற்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டு விற்பனை கூடங்களைக் கொண்டுள்ளது.

கண்காட்சியை திறந்து வைத்த ஜனாதிபதி அவர்கள், அதனை பார்வையிட்டதுடன், பணிக்குழாமினருடன் சுமூக கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, பாராளுமன்ற உறுப்பினர் மஹந்த அமரவீர, இலங்கை தேசிய கட்டிட நிர்மாணத்துறை சங்கத்தின் தலைவர் சுசந்த லியனாரச்சி, கைத்தொழில் வணிக சபையின் தலைவர் பொறியியலாளர் மேஜர் ரஞ்சித் குணதிலக்க, ஆசிய மற்றும் மேற்கு பசுபிக் நிர்மாணத்துறை சங்கத்தின் தலைவர் மொஹமட் அலி, அலுமெக்ஸ் PLC முகாமைத்துவ பணிப்பாளர் பிரமுக் தெதிவல உள்ளிட்ட விசேட அதிதிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Share This Post

NEW