சீஷெல்ஸுக்கான விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு ஜனாதிபதி நாடு திரும்பினார்.

சீஷெல்ஸுக்கான விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு ஜனாதிபதி நாடு திரும்பினார்.

சீஷெல்ஸுக்கும் இலங்கைக்கும் இடையில் புதிய வர்த்தக மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை ஏற்படுத்தும் நோக்கில் இரண்டு நாள் அரசமுறைப் பயணமொன்றை மேற்கொண்டு சீஷெல்ஸ் சென்றிருந்த ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தனது பயணத்தை வெற்றிகரமாக முடித்து கொண்டு இன்று (10) காலை நாடு திரும்பினார்.

சீஷெல்ஸ் ஜனாதிபதி டெனி போ அவர்களின் அழைப்பையேற்று ஜனாதிபதி அவர்கள் கடந்த 08ஆம் திகதி சீஷெல்ஸ் நாட்டுக்கான பயணத்தை ஆரம்பித்தார்.

ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும் சீஷெல்ஸ் ஜனாதிபதி டெனி போவுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு அன்றைய தினம் பிற்பகல் இடம்பெற்றது. இலங்கைக்கும் சீஷெல்ஸுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்தல் மற்றும் புதிய பொருளாதார வர்த்தக உறவுகளை ஏற்படுத்துதல் தொடர்பாக இதன்போது அரச தலைவர்கள் பல முக்கிய தீர்மானங்களை மேற்கொண்டனர்.

இரு நாடுகளுக்கும் இடையில் தகவல் தொழிநுட்பத் துறை மற்றும் தொழிற்பயிற்சி துறையில் புதிய இரண்டு புரிந்துணர்வு உடன்படிக்கைகள் இரு நாடுகளினதும் அரச தலைவர்களின் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டன.

இந்த விஜயத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கு அந்நாட்டின் உயர்ந்த கெளரவத்தை வழங்கி வரவேற்பதற்கான ஏற்பாடுகளை சீஷெல்ஸ் ஜனாதிபதி மேற்கொண்டிருந்தார். அந்நாட்டின் அரச மாளிகையில் ஜனாதிபதி அவர்கள் உள்ளிட்ட இலங்கைத் தூதுக்குழுவினருக்கு விசேட இராப்போசன விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது நட்புறவையும் கடந்த சகோதர பிணைப்புடன் இரு நாடுகளினதும் சுபீட்சத்திற்காக இணைந்து செயற்பட தலைவர்கள் உறுதியளித்தனர்.

இதேநேரம் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும் சீஷெல்ஸ் நாட்டின் உப ஜனாதிபதி வின்சன்ட மெரிடனுக்கும் இடையிலான சந்திப்பொன்றும் இடம்பெற்றது. சீஷெல்ஸ் தேசிய வைத்தியசாலை, சீஷெல்ஸ் சமுத்திர கற்கை நிறுவனம் ஆகியவற்றையும் பார்வையிட்ட ஜனாதிபதி அவர்கள், தனது விஜயத்தை நினைவுகூரும் முகமாக சீஷெல்ஸ் தலைநகரான விக்டோரியாவிலுள்ள தேசிய தாவரவியல் பூங்காவில் விதையொன்றையும் நாட்டினார்.

அத்துடன், சீஷெல்ஸில் வாழும் இலங்கையர்களுடனான சந்திப்பிலும் ஜனாதிபதி அவர்கள் கலந்துகொண்டார்.

சுற்றுலா, கைத்தொழில் மற்றும் மீன்பிடித் துறை மூலம் முறையான அபிவிருத்தியை அடைந்துள்ள சீஷெல்ஸ், ஆபிரிக்க வலயத்தின் உயரிய அபிவிருத்தியைக் கொண்ட நாடாகும். இந்நாட்டின் சனத்தொகை ஒரு இலட்சத்திற்கும் குறைவானது என்றபோதும் அந்நாட்டுக்கு வருகைதரும் சுற்றுலா பயணிகளின் வீதம் பன்மடங்கு அதிகம் என்ற காரணத்தினால் சீஷெல்ஸ் நாட்டுடன் வியாபார நடவடிக்கைகளை ஆரம்பிப்பதன் மூலம் இலங்கைக்கு அதிக நன்மைகள் கிடைக்கும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மேலும் இலங்கையின் சுகாதார சேவைக்கு சீஷெல்ஸில் அதிக கேள்வி இருந்து வருகின்றது. சுகாதாரம், கல்வி, சுற்றுலா, மீன்பிடி மற்றும் சமுத்திர பாதுகாப்பு தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்துவதன் மூலம் இலங்கைக்கு பல்வேறு நன்மைகளை பெற்றுக்கொள்வதற்கு ஜனாதிபதி அவர்களின் இந்த விஜயம் உதவும்.

சீஷெல்ஸ் நாட்டின் பெருமளவு நிலப்பரப்பு சரணாலயமாக உள்ளதுடன், உயிர்பல்வகை அதிகமாகக் காணப்படும் நாடாக சுற்றாடலை பாதுகாப்பதில் அந்நாடு உலகிற்கு முன்னுதாரணமாக விளங்குகின்றது. சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் பசுமை பொருளாதாரத்தை நோக்கி பயணித்தல் என்ற இரு நாடுகளினதும் நோக்கத்தை, இணைந்து வெற்றி கொள்வதற்கு புதியதோர் ஒத்துழைப்பு ஜனாதிபதி அவர்களின் இந்த விஜயத்தின் மூலம் உருவாகியுள்ளது.

இதேநேரம் சீஷெல்ஸுக்கான இரண்டு நாள் விஜயத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்த இலங்கை ஜனாதிபதி அவர்களுக்கு பிரியாவிடை நிகழ்வொன்றையும் சீஷெல்ஸ் அரசாங்கம் ஏற்பாடு செய்திருந்தது. இன்று அதிகாலை சீஷெல்ஸ் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இலங்கை திரும்பிய ஜனாதிபதி அவர்களை வழியனுப்பி வைப்பதற்கு அந்நாட்டின் சிரேஷ்ட அமைச்சரான மெக்சுசி மொன்டன் உள்ளிட்ட விசேட பிரதிநிதிகள் விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தனர்.

Share This Post

NEW