ஜனாதிபதி சீஷெல்ஸில் பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களில் பங்கேற்பு.

ஜனாதிபதி சீஷெல்ஸில் பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களில் பங்கேற்பு.

ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் சீஷெல்ஸ் விஜயத்தை நினைவுகூரும் வகையில் அந்நாட்டின் தேசிய தாவரவியல் பூங்காவில் இன்று (10) முற்பகல் விதை ஒன்றினை நாட்டினார்.

இலங்கைக்கும் சீஷெல்ஸுக்கும் இடையிலான பொருளாதார, வர்த்தக உறவுகளை பலப்படுத்தும் நோக்கில் சீஷெல்ஸ் ஜனாதிபதியின் விசேட அழைப்பையேற்று இரண்டு நாள் அரசமுறை பயணமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் சீஷெல்ஸுக்கு விஜயம் செய்துள்ளார்.

தனது விஜயத்தின் இரண்டாவது நாளான இன்றைய தினம் காலை சீஷெல்ஸின் தலைநகரான விக்டோரியா நகரிலுள்ள தேசிய தாவரவியல் பூங்காவிற்கு சென்ற ஜனாதிபதி அவர்களை, சீஷெல்ஸ் நாட்டின் சுறு்றுலா துறை அமைச்சர் வெய்லா பீ கொக்ரோவ் (Waila Pe Cocrow), தேசிய தாவரவியல் பூங்கா மன்றத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி ரெய்மன்ட் பிரியோச்சி (Raymond Brioche) ஆகியோர் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

சீஷெல்ஸ் நாட்டுக்கே உரிய விசேட தாவர இனமான கொகோ டீ மெர் தாவர இனத்துக்குரிய விதையொன்றை ஜனாதிபதி அவர்கள் இதன்போது பூங்காவில் நாட்டினார்.

அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி அவர்கள் உள்ளிட்ட தூதுக்குழுவினர் பூங்காவை சுற்றிப் பார்வையிட்டனர்.

1901ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட இப்பூங்கா சுமார் 15 ஏக்கர் நிலப்பரப்பை கொண்டதாகும். அந்நாட்டின் சுற்றுலா துறையின் கவனத்தை ஈர்க்கின்ற முக்கிய இடமான இப்பூங்கா, சுற்றாடல் கல்வி, தாவர பாதுகாப்பு மற்றும் நில முகாமைத்துவம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்குகின்றது.

அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி அவர்கள் சீஷெல்ஸ் நாட்டின் சமுத்திர கல்வி நிறுவனத்தையும் பார்வையிட்டார்.

சர்வதேச நியமங்களுக்கேற்ப தரமான சமுத்திர பயிற்சியையும் தொழில் தகைமைகளையும் வழங்கும் சர்வதேச மத்திய நிலையமாக இந்த நிறுவனம் நடைமுறைப்படுத்தப்படுவதுடன், இதன் முகாமைத்துவப் பணிகள் இலங்கை சர்வதேச கடல்சார் பொறியியல் கல்வி நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படுகிறது.

அந்நிலையத்தின் நடவடிக்கைகளை பார்வையிட்ட ஜனாதிபதி அவர்கள், அங்கு கல்வி கற்கும் மாணவர்களுடனும் சுமூகமாக கலந்துரையாடினார்.

இலங்கைக்கும் சீஷெல்ஸுக்கும் இடையில் சமுத்திர, பொருளாதார அபிவிருத்தியுடன் தொடர்புடைய பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதுடன், அது தொடர்பாகவும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

இலங்கை சர்வதேச கடல்சார் பொறியியல் உயர்கல்வி நிறுவனத்தின் தலைவர் கெப்டன் அஜித் பீரிஸ், கெப்டன் தாரக தெல்வத்த ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி அவர்கள் உள்ளிட்ட தூதுக்குழுவினர் இதனைத் தொடர்ந்து சீஷெல்ஸின் பிரஸ்லின் (Praslin) தீவிலுள்ள யுனெஸ்கோ மரபுரிமைகளில் ஒன்றான இயற்கை சரணாலயத்தையும் பார்வையிட்டார்.

Share This Post

NEW