புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளுக்காக பிள்ளைகளை தொந்தரவு செய்ய வேண்டாம் – ஜனாதிபதி

புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளுக்காக பிள்ளைகளை தொந்தரவு செய்ய வேண்டாம் – ஜனாதிபதி

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை பிள்ளைகளின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஒரேயொரு தடை தாண்டல் பரீட்சை என்று பெற்றோர்கள் நம்புகின்ற காரணத்தினால் நாட்டின் சிறுவர் தலைமுறை பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தாலும் சித்தியடையாவிட்டாலும் தொந்தரவுகளின்றி பிள்ளைகளை அரவணைப்பது எவ்வாறு என்பது பற்றி ஒவ்வொரு வருடமும் புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் பெற்றோர்களுக்கு அறிவூட்டும் நிகழ்ச்சித் திட்டமொன்றை தயார்படுத்துமாறு அனைத்து அதிபர்களுக்கும் ஆலோசனை வழங்கினார்.

கண்டி முன்மாதிரி பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் இன்று (06) முற்பகல் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இதனைத் தெரிவித்தார்.

புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளைத் தொடர்ந்து கடந்த காலங்களில் நாட்டின் பிள்ளைகள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்ததை நினைவுகூர்ந்த ஜனாதிபதி அவர்கள், இது பற்றி அனைத்து கல்வித்துறை அதிகாரிகளும் கவனம் செலுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

இன்றைய தினம் அனுஷ்டிக்கப்படும் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அனைத்து ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், ஆசிரியர்கள் மேற்கொண்டுவரும் உன்னதமான பணியை பாராட்டினார்.

இலவசக் கல்வியின் மூலம் சமூகத்திற்கு பயனுள்ள பிரஜைகளை உருவாக்குவதற்கு ஆசிரியர்கள் மேற்கொண்டுவரும் அர்ப்பணிப்பை பாராட்டிய ஜனாதிபதி அவர்கள், ஆசிரியர் தொழிலின் உரிமைகள், சலுகைகளை வெற்றி கொள்வதற்கும் ஆசிரியர்களுக்கு உயர்ந்த கௌரவத்தை பெற்றுக்கொடுக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.

கல்லூரிக்குச் சென்ற ஜனாதிபதி அவர்களை மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

“அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இரண்டு மாடி விஞ்ஞான ஆய்வுகூட கட்டிடத்தையும் மூன்று மாடி வகுப்பறைக் கட்டிடத்தையும் ஜனாதிபதி அவர்கள் மாணவர்களிடம் கையளி்த்தார்.

கல்லூரியின் 2017ஆம் ஆண்டில் விசேட திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்களுக்கான விருதுகள் மற்றும் பரிசல்களையும் ஜனாதிபதி அவர்கள் வழங்கி வைத்தார்.

கல்லூரியின் முன்மாதிரி பயிர்ச்செய்கை நடவடிக்கைகளையும் ஜனாதிபதி அவர்கள் பார்வையிட்டார்.

மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏகநாயக்க, கல்லூரியின் அதிபர் ஆர்.எம்.தேசப்பிரிய ரத்நாயக்க உள்ளிட்ட ஆசிரியர் குழாம், பெற்றோர், பழைய மாணவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

கண்டி மாதிரி பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் ஆற்றிய உரை – 06.10.2018

இன்றைய நிகழ்வில் உரையாற்ற எண்ணியிராதபோதிலும் சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சிறிய உரையொன்றினை ஆற்ற வேண்டுமென நினைக்கின்றேன்.

கடந்த திங்கட்கிழமை சர்வதேச சிறுவர் தினமும் முதியோர் தினமும் ஒரே நாளிலேயே கொண்டாடப்பட்டது. அன்று சிறுவர்கள் தொடர்பிலும் முதியோர், பெற்றோர் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. ஆசிரியர் தினமான இன்று தினம் எமது ஆசிரியர்கள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டிய முக்கிய நாளாகும்.

எமது நாட்டில் இலவசக் கல்விக்கொள்கை சிறந்த முறையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. சிறந்த பெறுபேறுகள் கிடைக்கின்றன. ஜனாதிபதி என்ற வகையில் ஆசிரியர் தினத்தில் சகல ஆசிரியர்களுக்கும் அவர்களின் உன்னத பணிக்காக பாராட்டு தெரிவிக்கின்றேன். சி.டபிளியு.டபிளியு.கன்னங்கரா அவர்கள் இலவசக் கல்வியை நடைமுறைப்படுத்தி 70 வருடங்களுக்கும் மேலாகின்றது. இதனூடாக எத்தனையோ புத்திஜீவிகளும் கல்விமான்களும் உருவாக்கப்பட்டுள்ளனர். அந்த கௌரவம் ஆசிரியர்களையே சாரும். பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் அடிப்படை வசதிகள்கூட அற்ற நிலையிலும் எமது ஆசிரியர்கள் மிகச் சிறந்த சேவையை ஆற்றுகின்றனர். சர்வதேச நாடுகளின் தலைவர்களுடன் உரையாடும்போது அவர்கள் எமது கல்விக்கொள்கை தொடர்பாகவே குறிப்பிடுகின்றனர். எமது நாட்டில் சிறந்த தரத்திலான கல்வி வழங்கப்படுவதாக தெரிவிக்கின்றனர். அதேபோல் சர்வதேசத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இலவச சுகாதார சேவை காணப்படுவதாகவும் பாராட்டுகின்றனர்.

இவ்வருட புலமைப்பரிசில் பரீட்சையில் வேயங்கொட மற்றும் பிலியந்தல பிரதேசங்களை சேர்ந்த இரு மாணவர்களே 199 புள்ளிகளை பெற்றுள்ளனர். இரண்டாம் இடத்தில் மூன்று தமிழ் பிள்ளைகள் எனது நினைவுக்கெட்டியபடி அவர்கள் வட பகுதியை சேர்ந்தவர்கள்.

எமது நாட்டில் பெற்றோர் அளவுக்கதிகமாக சினமடையும் தினம் புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளிவரும் தினமாகும். பரீட்சையில் சித்தியடைந்தவர்களின் தாய்மார் மிகவும் சந்தோஷமடைவார்கள். ஏனெனில் தினமும் அவர்களே பிள்ளைகளை வகுப்புகளுக்கு கூட்டிச் செல்கின்றனர். சிலவேளை உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம் 2016ஆம் ஆண்டில் புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியான அன்று பரீட்சையில் சித்தியடையாதமையினால் ஒரு மாணவியை அவளது தந்தை காலால் எட்டி உதைத்திருந்தார். 2015ஆம் ஆண்டிலும் இதேபோன்று ஒரு மாணவனை விடியும் வரை வீட்டுக்கு வெளியே நிற்க வைத்திருந்தனர். சில பெற்றோர் பரீட்சையில் சித்தியடையாமையினால் தகாத வார்த்தைகளால் ஏசுகின்றனர். காலால் எட்டி உதைக்கின்றனர். பரீட்சை முடிவுகள் வெளியாகி சில நாட்கள் செல்லும் வரை இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றன. இத்தகைய சம்பவங்களால் சிறுவர்களின் மனம் பெரிதும் பாதிக்கப்படும்.

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையும் மாணவர்களில் குறைந்தது 15 சதவீதத்தினர் கூட பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாவதில்லை. கடந்த சில ஆண்டுகளின் அறிக்கைகளுக்கமைய 12 – 13 சதவீதமளவிலான புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தவர்களே பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகியுள்ளனர். மிகுதி 85 சதவீதமானோர் பல்கலைக்கழகங்களுக்கு செல்லவில்லை. போதுமான புரிந்துணர்வும் அறிவும் இல்லாதமையினால் சில பெற்றோர் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையே தமது பிள்ளைகளின் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் நிர்ணயிக்கின்றது என எண்ணுகின்றனர். ஐந்தாம் தர புலமைப்பரிசில் பெறுபேறுகள் வெளிவர ஒரு வாரத்திற்கு முன்னர் பெற்றோரை அழைத்து அவர்களுக்கு விரிவுரைகளை நடத்த வேண்டும். இதனை நான் கல்வி அமைச்சரிடமும் தெரிவித்தேன். பரீட்சையில் சித்தியடையும், தோல்வியடையும் மாணவர்களை எவ்வாறு ஏற்றுக்கொள்ள வேண்டுமென பெற்றோருக்கு அறிவுறுத்த வேண்டும். பிள்ளைகளை வெறுக்காது அவர்களுக்கு இடையூறு செய்யாது, சித்திரவதை செய்யாது வெற்றி பெற்றாலும் தோல்வியடைந்தாலும் அவர்களை அன்போடு அரவணைத்து அவர்களது எதிர்காலம் இந்த பெறுபேறுகளின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுவதில்லை என்பதையும் சிறந்தவொரு எதிர்காலத்திற்காக முயற்சியோடு பாடுபடுவோம் என அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டுமென்பதை பெற்றோருக்கு தெளிவுபடுத்த வேண்டும். சாதாரண தர, உயர்தர பரீட்சைகளில் சித்தியடைந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகுவோமென அவர்களிடையே எதிர்பார்ப்பினை ஏற்படுத்த வேண்டியதே பெற்றோர்களின் கடமையாகும். 

கடந்த வருடம் புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு வெளியாகிய தினத்தன்று பரீட்சையில் சித்தியடையாத மாணவன் ஒருவன் பெற்றோரின் கொடுமை தாங்காது தற்கொலை செய்து கொண்டான். அந்த செய்தியை நிட்டம்புவ சங்கபோதி வித்தியாலயத்தில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்துகொண்டிருந்தபோதே நான் கேள்வியுற்றேன். மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்ட அந்த வைபவத்தில் உரையாற்றும்போதும் நான் அவ்விடயத்தை தெரிவித்தேன்.

மாணவர்கள் பரீட்சையில் சித்தியடைவதைப் போன்றே வாழ்க்கையிலும் சித்தியடைய பெற்றோர் அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும். உற்சாகமளிக்க வேண்டும். பாடசாலையே மாணவர்களுக்கு பாதுகாப்பான இடமாகும். அது பாதுகாப்பற்ற இடமாக அமையும் சந்தர்ப்பங்களையும் நாம் கேள்வியுற்றுள்ளோம். எவ்வாறாயினும் மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பில் பெற்றோருக்கே முக்கிய பொறுப்பு காணப்படுகின்றது. இன்றைய போட்டித்தன்மைமிக்க வர்த்தகமயமான சமூகத்தில் ஒழுக்கமற்ற ,அறுவருப்பான சில சம்பவங்களும் இடம்பெறுகின்றன.

உலகில் அதிகளவிலான புற்றுநோயாளர்கள், உயர்போசணை மற்றும் உடற்பருமன் அதிகமானவர்கள் அமெரிக்காவிலேயே இருக்கின்றனர். உயர் தொழில்நுட்பம் காணப்படும் நாடுகளில் உளநலம் பாதிக்கப்பட்டவர்களும் அதிகமாக உள்ளனர். நான் கடந்த வாரம் அமெரிக்காவில் வாழும் இலங்கையர்களை சந்தித்தபோது அங்கு சேவையாற்றும் ஒரு வைத்தியர் அமெரிக்காவிலுள்ள தீர்க்கமுடியாத பிரச்சினை வைத்தியர்களின் தட்டுப்பாடாகுமென தெரிவித்தார். அமெரிக்காவில் சேவையாற்றும் 30 சதவீதமான வைத்தியர்கள் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களே. இலங்கை, இந்தியா போன்ற நாடுகளின் மிகச் சிறந்த வைத்தியர்கள் அத்தகைய நாடுகளிலிலேயே பணியாற்றுகின்றனர் ஆயினும் அந்த நாடுகளில் உளநல மருத்துவர்களின் தட்டுப்பாடு நிலவுகின்றது. நவீன தொழில்நுட்ப உபகரணங்களின் பாவனையினால் அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வீட்டில் பெற்றோர்கள் உள்ளனரா  எனப் பார்ப்பதில்லை. கையடக்கத் தொலைபேசி இருக்கின்றதா என்றே கவனிக்கின்றனர். பிள்ளைகள் கையடக்க தொலைபேசியோடு தமது அறைகளுக்குள் என்ன செய்வார்கள் என்பதை பெற்றோர்களும் அறிவார்கள்.

நாங்கள் பாடசாலை சென்றபோது தொழில்நுட்ப வசதிகள் காணப்படவில்லை. பாடசாலை விட்டு வீடு வந்ததும் வயல் வெளிகளிலேயே சென்று விளையாடுவோம். பொலன்னறுவையில் வீடுகளுக்கு காட்டு வழியாகவே செல்வோம். இன்று காணப்படுவதைப்போன்று அழகிய மைதானங்கள் இருக்கவில்லை. கிராமங்களுக்கு பாதைகளோ, பஸ்களோ, மின்சாரமோ அன்று ஒழுங்காக இருக்கவில்லை. இதனால் இயற்கையான அழகிய சூழல் எமக்கு காணப்பட்டது. நான் பொலன்னறுவை றோயல் கல்லூரிக்கு செல்லும்போது தினமும் வரலாற்று புகழ்பெற்ற கல்விகாரை, கிரி விகாரை ஆகியவற்றையே காண்பேன். காலையும் மாலையும் பராக்கிரம சமூகத்திலிருந்து வீசும் குளிர்காற்றையும் அனுபவிப்பேன். நவீன தொழில்நுட்பம் காரணமாக இன்றுள்ள சவால்கள் அன்று எமக்கு காணப்படவில்லை. பாடசாலை செல்வதற்கு போக்குவரத்து வசதி இல்லாமையே அன்று எமக்கு காணப்பட்ட பிரச்சினையாகும்.

லக்ஸ உயன கிராமத்து பாடசாலைக்கு செல்லும்போது கால்களுக்கு செருப்புகூட அணிவதில்லை. றோயல் கல்லூரிக்கு சென்ற பின்னே சப்பாத்து அணியத் தொடங்கினேன். அன்று இந்த சமூகம் பௌதீக ரீதியில் எவ்வளவு பின்தங்கியிருந்தது. நீங்கள் எவ்வளவு அதிர்ஷ்டமானவர்கள். பாடசாலை சீருடை அணிந்துள்ளீர்கள். அழகிய சப்பாத்துக்களை அணிந்துள்ளீர்கள். சில குறைபாடுகள் காணப்படலாம். குடும்பத்தின் பொருளாதார நிலை காரணமாக உங்களது கவனங்கள் சிதறிப் போகலாம். சிலர் தமது குடும்ப நிலையைக் கருதி கவலையடையலாம். சில குடும்பங்களில் அப்பாக்கள் குடிபோதையில் வீடுகளில் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். சிலரது வீடுகளில் பொருளாதார நெருக்கடி அதிகம். பெற்றோர் கடன்பட்டுள்ளனர். வாழ்வதே போராட்டமாக இருக்கும். சில குடும்பங்களில் சமூக பிரச்சினைகள் காணப்படுகின்றன. இவ்வாறு வெளியிலிருந்துவரும் சகலவிதமான சவால்களையும் வெற்றிகொண்டே நீங்கள் கல்வியை பெற்றுக்கொள்ள வேண்டும். பரீட்சையில் சித்தியடைவதைப் போன்றே வாழ்க்கையிலும் சித்தியடையவேண்டும். அதற்காக உங்களது ஆசிரியர்கள் வழிகாட்டுவார்கள். உங்களது அன்புக்குரிய பெற்றோர் பல்வேறு எதிர்பார்ப்புகளோடு உங்களை பாதுகாக்கின்றனர்.

சர்வதேச ஆசிரியர் தினமான இன்று கண்டி மாதிரி பாடசாலையில் மாணவர்களையும் அதிபர் உள்ளிட்ட ஆசிரியர் குழாமினரையும் பெற்றோர் மற்றும் அதிதிகளான உங்கள் அனைவரையும் சந்தித்ததையிட்டு நான் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன்.

இந்த பாடசாலை மாணவர்களுள் சிலர் தேசிய மட்டத்தைப் போன்றே சர்வதேச மட்டத்திலும் வெற்றிகளை பெற்றுள்ளனர். அவை உங்கள் எதிர்காலத்திற்கு உறுதுணையாக அமையும். அவர்களுள் ஒரு மாணவன் மகாவலி பிரதேசத்தில் நான் வழங்கிய காணியில் விளையாட்டு மைதானத்தை அமைத்துத் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார். அதற்கான மதிப்பீடுகளை தயாரியுங்கள். தேவையான நிதியை நான் தருகின்றேன். பாடசாலையில் கட்டிட பற்றாக்குறை உள்ளதாகவும் அறியக் கிடைத்தது. கட்டிடங்களை நிர்மாணிக்கவும் நிதி ஒதுக்கீடு செய்ய முடியும். மாகாண சபையினால் மதிப்பீடுகளை மேற்கொண்டு எனக்கு அறியத்தாருங்கள். இந்த இரண்டு நிர்மாணப் பணிகளுக்கும் நான் நிதி ஒதுக்கீடு செய்கின்றேன். மதிப்பீட்டினை விரைவாக நிறைவு செய்தால் இந்த வருடத்திலேயே நிதி வழங்க முடியும். முதலமைச்சரும் இங்கு உள்ளார். எனவே இவ்விடயம் தொடர்பில் அவரும் கவனம் செலுத்துவார்.

தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் சில முக்கிய நாட்கள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. அவ்வனைத்து தினங்களில் மட்டுமே குறித்தவொரு விடயம் தொடர்பில் கவனம் செலுத்துகின்றனர். ஆசிரியர்களுக்கான வரப்பிரசாதங்களையும் உரிமைகளையும் பெற்றுக்கொடுக்கவும் கௌரவமளிக்கவும் ஆசிரியர் தினத்தில் மட்டுமே சகலரும் கவனம் செலுத்துகின்றனர். ஆனால் நாங்கள் அரசாங்கம் என்ற வகையில் ஆசிரியர் சேவையில் உள்ளவர்களுக்கும் இலவசக் கல்விக்கொள்கையின் கீழ் பெற்றுக்கொடுக்கக்கூடிய சகல உதவிகளையும் வழங்குவோமென தெரிவித்துக்கொள்கின்றேன்.

இன்று ஒக்டோபர் 06ஆம் திகதி. இன்னும் இரண்டு நாட்களில் மாகாண சபையின் ஆட்சிக்காலம் நிறைவடைகின்றது. முதலமைச்சர் சிறிது காலம் ஓய்வெடுக்கட்டும். மத்திய மாகாண சபையின் முதலமைச்சர் என்ற வகையில் நீண்டகாலமாக கல்வித்துறைக்கு அவர் சிறப்பான சேவைகளை ஆற்றியுள்ளார். ஒன்பது மாகாணங்களையும் சார்ந்த முதலமைச்சர்களிடையே அவர் சிறந்த முன்மாதிரியாக திகழ்கின்றார். அவரது விடயப் பரப்பிற்குரிய சகல பணிகளையும் சமூக அக்கறையோடும் ஒழுக்கத்தையும் ஆற்றுவதுடன் மத்திய மாகாணத்திற்கு அவர் வழங்கிவரும் தலைமைத்துவத்தை நான் மிகவும் பாராட்டுகின்றேன். அவர் உள்ளிட்ட மாகாண சபையின் அமைச்சர்கள் மற்றும் ஏனைய உறுப்பினர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதோடு எதிர்காலத்திற்காக மீண்டும் தயாராகுமாறு கோரிக்கை விடுப்பதுடன், அனைவருக்கும் இறைவனின் ஆசிவேண்டி எனது உரையை நிறைவு செய்கிறேன்.

நன்றி

 

Share This Post

NEW