வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு 762 சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு…

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு 762 சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு…

• வரலாற்றில் முதல் முறையாக பொது மன்னிப்பு நிகழ்விற்கு ஜனாதிபதி ஒருவர் பங்கேற்பு…

• குற்றங்கள் அதிகரிப்பதற்கான சமூக சூழ்நிலைகளை மாற்றுவது தொடர்பில் அதிக அர்ப்பணிப்புடன் செயற்படுவேன். – ஜனாதிபதி

குற்றங்கள் அதிகரிப்பதற்கான சமூக சூழ்நிலைகளை மாற்றியமைப்பதற்கு தான் அதிக அர்ப்பணிப்புடன் செயற்படப் போவதாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி அவர்களின் பொது மன்னிப்பு வழங்கலின் கீழ் 762 சிறைக்கைதிகளை விடுதலை செய்யும் நிகழ்வு இன்று (18) முற்பகல் வெலிக்கடை சிறைச்சாலை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றபோதே ஜனாதிபதி அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பொது மன்னிப்பின் கீழ் கைதிகளை விடுதலை செய்யும் நிகழ்விற்கு ஜனாதிபதி ஒருவர் கலந்துகொண்ட முதல் சந்தர்ப்பம் இதுவாவதுடன், சிறைச்சாலை வளாகத்திற்குள் சிறைக்கைதிகள் முன்னிலையில் உரையாற்றிய முதல் சந்தர்ப்பமும் இதுவாகும். அத்துடன் சிறைக்கைதிகளின் கோரிக்கைகளையும் ஜனாதிபதி அவர்கள் செவிமடுத்தார்.

26 பெண் கைதிகள் உள்ளிட்ட 762 சிறைக்கைதிகள் இன்று விடுதலை பெற்றதோடு, தன்னிடமிருந்து விடுதலை கடிதங்களை பெற்றுக்கொண்ட சிறைக்கைதிகளிடம் அவர்கள் பற்றிய விபரங்களையும் ஜனாதிபதி அவர்கள் கேட்டறிந்தார். இன்று பெற்ற விடுதலையினூடாக தத்தமது வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக அமைத்துக்கொள்ளுமாறு அவர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

இன்று விடுதலை பெற்றவர்கள் மீண்டும் சிறைச்சாலைக்குள் வருவதை தான் காண விரும்பிவில்லை எனத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், இன்றைய தினம் விடுதலை பெற்ற அனைவரினதும் எதிர்காலத்தை கட்டியெழுப்ப தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு தான் தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார். இன்றைய தினம் விடுதலை பெற்றவர்களிடையே சுயதொழிலில் ஈடுபட விரும்பும் நபர்கள் மற்றும் அவர்களுக்கு தேவையான வசதிகள் தொடர்பாகவும் கண்டறிந்து அது தொடர்பிலான அறிக்கை ஒன்றையும் துரிதமாக தன்னிடம் சமர்ப்பிக்குமாறு சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை விடுத்தார்.

சிறைக்கைதிகளை சிறந்த பிரஜைகளாக சமூகமயமாக்குவது தொடர்பில் தொடர்ச்சியாக கவனம் செலுத்தி வருவதாகவும் தன்னை கொலை செய்ய முயன்று நீதிமன்றத்தினால் குற்றவாளியாக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நபரை கடந்த 2016 ஜனவரி மாதம் 08ஆம் திகதி அன்று விடுதலை செய்ததாகவும் தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், சிறைச்சாலையை நிரப்புவது தனது நோக்கமல்ல எனவும் அனைத்து பிரஜைகளையும் சிறந்த பிரஜைகளாக சமூகமயப்படுத்தலும் நாட்டினுள் குற்றங்கள் அதிகரிப்பதற்கு காரணமாக அமையும் சமூக பின்புலத்தை மாற்றியமைப்பதுமே தனது நோக்கமாகுமெனத் தெரிவித்தார்.

சிறைக்கைதிகளுக்கு தொழிற் பயிற்சியை வழங்குதல் உள்ளிட்ட அவர்களது அறிவையும் உழைப்பையும் வினைத்திறனாக பயன்படுத்துவதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், தான் சிறைக்கைதியாக கழித்த நாட்களின் அனுபவங்களையும் நினைவுகூர்ந்ததுடன், சிறைச்சாலையில் நாட்களை கழிக்கும் இந்த சந்தர்ப்பத்தில் தத்தமது வாழ்க்கையை மறுசீரமைத்துக் கொள்வதற்காக உறுதிப்பாட்டுடன் அறிவையும் ஆற்றலையும் மேம்படுத்திக் கொள்வதற்கு பயன்படுத்திக்கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்தார்.

விடுதலை பெறும் 05 கைதிகளுக்கு ஜனாதிபதி அவர்கள் சுய தொழிலுக்கான உபகரணங்களையும் வழங்கி வைத்தார்.

சிறைக்கைதியான லக்மின இந்திக பமுனுசிங்க ஜனாதிபதி அவர்களிடம் முன்வைத்த கோரிக்கையை நிறைவேற்றுவதற்கும் நடவடிக்கை எடுத்தார்.

சிறைச்சாலையில் இருந்தவாறே சமூக விஞ்ஞான முதுமானிப் பட்டப்படிப்பை நிறைவு செய்து களனி பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டப்படிப்பை மேற்கொண்டு வருவதுடன், 2005ஆம் ஆண்டு இலங்கை குத்துச் சண்டை மெய்வல்லுனராக முடிசூட்டிய அவர், இவ்வருட தேசிய குத்துச் சண்டை மெய்வல்லுனர் போட்டியிலும் கலந்துகொள்ள எண்ணியுள்ளார். தனது பட்டப்படிப்புக்குத் தேவையான செயற்திட்ட அறிக்கையை தயாரிப்பதற்கு தேவையான நிதியுதவியை வழங்குமாறும் மெய்வல்லுனர் போட்டியில் பங்குபற்றுவதற்கு வாய்ப்பளிக்குமாறும் ஜனாதிபதி அவர்களிடம் கோரிக்கை விடுத்தார், செயற்திட்ட அறிக்கைக்கு தேவையான பணத்தை துரிதமாக வழங்குவதாக தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், போட்டியில் கலந்துகொள்வதற்கான சாத்தியங்கள் தொடர்பில் கண்டறிந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலாதா அத்துகோரலவிடம் பணிப்புரை விடுத்தார்.

அமைச்சர் தலதா அத்துகோரல உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்ன, நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் பதிற் கடமை செயலாளர் பியுமந்தி பீரிஸ், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் டி.எம்.ஜே.டப்ளியு.தென்னகோன் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

சிறைக்கைதிகள் மற்றும் நிகழ்ச்சியில் பங்குபற்றியவர்களுக்கு சிறைச்சாலைகள் திணைக்களத்தின் பௌத்த சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வெசாக் அன்னதான நிகழ்வை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி அவர்கள், இன்றைய தினம் விடுதலை பெற்ற சிறைக்கைதிகளுக்கான விருந்துபசார நிகழ்விலும் கலந்துகொண்டார்.


2600 வருடங்கள் பழமைவாய்ந்த பௌத்த நாகரிகத்தினால் நாம் பெற்ற நல்லொழுக்கம் காரணமாகவே உங்களுக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டுமென்ற சிந்தனை என் மனதில் தோன்றியது. வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு உங்களை விடுதலை செய்யக் கிடைத்ததையிட்டு நான் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன்.
போதைப்பொருளினால் சமூகத்திற்கு ஏற்படும் தீமைகளை கருத்திற்கொண்டே நாடு தழுவிய போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்தினை ஆரம்பித்தேன். அதன்போதே பல்வேறு குற்றங்களுக்காக சிறைப்படுத்தப்பட்டிருக்கும் குற்றவாளிகளின் எண்ணிக்கையை தேடிப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் என்னுள் ஏற்பட்டது. போதைப்பொருளுடன் சம்பந்தப்பட்ட பெருமளவு குற்றவாளிகள் சிறைவாசம் அனுபவிப்பதை அறியக் கிடைத்ததுடன், சிறைவாசம் அனுபவிக்கும் பெரும் எண்ணிக்கையான குற்றவாளிகளின் ஒரு பிரிவினரை விடுவிக்க வேண்டும் என்ற எண்ணம் என்னுள் ஏற்பட்டது.

இலங்கையில் உள்ள சிறைச்சாலைகளில் 11,000 சிறைக்கைதிகளுக்கு மாத்திரமே இடவசதி இருக்கின்றது. ஆனால் இன்று 9,285 சிறைக்கைதிகளும் 15,019 தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளோரும் என மொத்தமாக 24,304 கைதிகள் சிறைச்சாலைகளில் இருக்கின்றனர். 5 கைதிகள் அடைக்கக்கூடிய சிறைக்கூண்டில் 10 கைதிகளை அடைத்து வைத்திருக்கின்றனர். மானிட சுதந்திரத்தை மேலாகக் கருதும் பௌத்தம், இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் உள்ளிட்ட எந்தவொரு மதத் தத்துவங்களுக்கு அமையவும் இந்த நிலைமை ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. இதனால்தான் நீதி அமைச்சர் மற்றும் சிறைச்சாலைகள் ஆணையாளருடன் கலந்துரையாடி, அதிகபட்சம் எத்தனை கைதிகளுக்கு விடுதலை அளிப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதோ அவர்கள் அனைவருக்கும் விடுதலையளிப்போம் என்ற முடிவை மேற்கொண்டோம். அதற்கமையவே 762 கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது. அண்மையில் நீர்கொழும்பு சிறைச்சாலையை பார்வையிடச் சென்றிருந்தேன். அங்கு 139 கைதிகள் இருந்தார்கள். அதில் 100க்கும் மேற்பட்டோர் இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர்களை பார்க்கும்போது எனது சொந்த வாழ்க்கை அனுபவம் எனக்கு நினைவுக்கு வந்தது. எந்தவித தவறும் இழைக்காத எனக்கு, எனது 19வது வயதில் 15 மாதங்களுக்கு மேலாக மட்டக்களப்பு சிறைச்சாலையில் கழிக்க நேர்ந்தது. 1971 ஆம் ஆண்டு எனது பாடசாலை அதிபர் என்மீது பொய் குற்றம் சுமத்தியதனாலேயே எனக்கு இத்தகைய இன்னல் ஏற்பட்டது. அந்த காலத்தில் சேகுவேரா என்று ஒரு இயக்கம் இருந்தது. சேகுவேரா இயக்கத்துடன் எந்த தொடர்பும் இல்லாத என்னை குறும்புத்தனம் உடையவன் என்ற ஒரே காரணத்திற்காக அந்த இயக்கத்துடன் தொடர்புடையவன் என பாடசாலை அதிபர் பொய் குற்றஞ்சாட்டினார். அதையடுத்து மூன்று மாதங்கள் ஒரு இருட்டறையில் என்னை அடைத்து வைத்திருந்தார்கள். மூன்று பேரை சிறையிடக்கூடிய அந்த அறையில் 7 பேரை அடைத்திருந்தார்கள். 400க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் அந்த காலகட்டத்தில் சிறைப்பிடிக்கப்பட்டிருந்தார்கள். 1971 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நான் உயர்தரப் பரீட்சைக்கு தோற்ற இருந்தேன். ஆயினும் என்னை 1971 ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி கைது செய்தார்கள்.

அந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நாட்டில் ஏற்பட்ட கலவரத்தால் உயர்தரப் பரீட்சை இடம்பெறவில்லை. 1972 ஆம் ஆண்டு எனது கரங்களில் விலங்குகள் பூட்டப்பட்ட நிலையில் இரத்தம் கசியும் கரங்களுடனேயே உஹன மகா வித்தியாலயத்திற்கு சென்றே பரீட்சை எழுதினேன். எந்த தவறும் செய்யாத என்னை இருட்டு அறையில் அடைத்து கொடிய குற்றவாளிக்கு அளிக்கும் தண்டனையை எனக்கு அளித்துள்ளார்களே என எண்ணிப்பார்த்தபோது எனது கண்களிலிருந்து கண்ணீர் வடிந்தது. எனது வினாத்தாளில் கண்ணீரும் இரத்தக்கறையும் கலந்தே விடை எழுதப்பட்டிருக்கின்றது. மாணவ பருவத்தில் அளவில்லாத எனது குறும்புகளும் அதிகப்பிரசங்கிதனமான பேச்சுமே 15 மாத சிறைவாசத்தை எனக்கு பெற்றுக்கொடுத்தது. இந்த 15 மாத காலத்தில் ஒரு நாள் கூட என்னை அறையைவிட்டு வெளியே எடுக்கவில்லை. என்னோடு ஆசிரியர்கள், சட்டத்தரணிகள் ஆகியோரும் அந்த அறைகளில் சிறையடைக்கப்பட்டிருந்தார்கள். அம்பாறை ஹாடிக் வித்தியாலயத்தின் நன்கு படித்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள். அவர்கள் சிறையிலிருந்தவாறே பாடங்களை நடத்தினார்கள். சிறைச்சாலைக்கு மேலே இருக்கும் சல்லடை விரிசல்கள் வழியே அவர்களது குரல் கேட்கும். நாங்கள் தரையில் அமர்ந்தவாறே அந்த பாடங்களை செவிமடுப்போம். அந்த காலகட்டத்தில் நான் எவ்வளவோ கண்ணீர் சிந்தி அழுதபோதிலும் கற்பதைக் கைவிடவில்லை. வீட்டிலிருந்து கொண்டுவந்து தரும் அனைத்து புத்தகங்களையும் வாசித்து முடித்தேன். இலக்கிய நூல்களை மனப்பாடம் செய்தேன். உயர்தரத்தில் விஞ்ஞானப் பிரிவில் தோற்ற இருந்த எனக்கு சிறைச்சாலையில் இருந்தவாறே விஞ்ஞான பாடங்களை கற்க முடியாத காரணத்தினால் கலைப் பிரிவில் படித்து உஹன வித்தியாலயத்திற்கு சென்று உயர்தரப் பரீட்சையை எழுதினேன்.
ஒன்றரை வருடங்களாக சிறைச்சாலை கதவிற்கு கீழாக வழங்கப்படும் உணவை மாத்திரமே உண்டேன். இயற்கை காற்றினை சுவாசிக்கக்கூட சிறையிலிருந்து வெளியே செல்ல அனுமதி கிடைக்கவில்லை. கழிவறைத் தேவைகளுக்கும் குளிப்பதற்கும் மாத்திரமே ஒரு நாளைக்கு இரண்டு தடவை சிறையிலிருந்து வெளியே செல்ல அனுமதி கிடைத்தது. என்னைக் கைது செய்தபோது நான் அணிந்திருந்த சேட்டையும் சாரத்தையுமே அன்றிலிருந்து மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக அணிய நேர்ந்தது.

இன்று நான் ஏன் இந்த விடயங்களை உங்களிடம் கூறுகின்றேன். எனது இந்த சொந்தக் கதையைப் பற்றி நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும். இன்று நான் இதை மீண்டும் கூறுவது இன்று விடுதலை பெறும் உங்களுக்காகவே ஆகும். அன்று நான் சிறையில் அடைக்கப்பட்டபோதிலும் பாரிய குற்றங்களை செய்தவர்களுடன் நான் இணைந்து கொள்ளவில்லை. அவர்களுடன் பேசிப் பழகவும் இல்லை. சிறைவாசத்தை அனுபவிக்கும் காலகட்டத்தில் எனது வாழ்க்கையை நல்ல விதத்தில் அமைத்துக்கொள்ள வேண்டும் என்ற தன்னம்பிக்கையும் உறுதியும் என்னிடம் இருந்தது. அதனாலேயே கண்ணீரை சிந்தியபோதிலும் கல்வியை தொடர்ந்தேன். பாடவிதானங்களுக்கு அப்பால் சென்று கையில் கிடைத்த எல்லா புத்தகங்களையும் வாசித்தேன். இன்றும் கூட நான் அரசியல் மேடைகளில் பேசுகின்ற பல விடயங்களும் அவ்வப்போது பாடும் கவிதைகளும் அவ்வாறு நான் சிறையிலிருக்கையில் மனப்பாடம் செய்தவையாகும்.

ஆகையால் இத்தருணத்தில் அன்புடன் ஒரு விடயத்தை இன்று நான் உங்களிடம் கூறவிரும்புகின்றேன். ஜனாதிபதி பொது மன்னிப்பை பெற்று விடுதலை பெறும் நீங்கள் மீண்டும் குற்றம் புரிந்தால் அல்லது தீயசக்திகளுடன் இணைந்து கொண்டால் அதற்காக இந்த சமூகம் நிந்திப்பது உங்களை மாத்திரம் அல்ல. அதேபோல் நீங்கள் இந்த சமூகத்தில் ஏதேனும் தவறுகளை புரிந்ததால் உங்களைக் கைது செய்து விசாரிக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கூட ஜனாதிபதி பொதுமன்னிப்பை பெற்று விடுதலையானவர்களே அக்குற்றங்களை செய்கின்றார்கள் என்பதை தெரிந்துகொள்ளும் பட்சத்தில் அந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் திட்டுவது உங்களை அல்ல. என்னையே திட்டுவார்கள். காரணம் உங்களை விடுதலை செய்யும் பொறுப்பை நானே ஏற்றுள்ளேன். கைதிகளாக இருக்கும் உங்கள் எவருடனும் ஒருநாளாவது நான் பழகியதில்லை. இருந்தும் முன்பின் அறிமுகமற்ற உங்கள் மீது இந்த நாட்டு மக்களின் பிரதான சேவகன் என்ற வகையிலும் ஒன்றரை வருடத்திற்கும் மேலாக பல சிரமங்களுக்கு மத்தியில் சிறைவாசம் அனுபவித்த ஒரு மாணவன் என்ற வகையிலும் எனது மனசாட்சிக்கு அமைய உங்கள் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையினாலேயே உங்களை இன்று விடுதலை செய்கின்றேன். ஆகையால் சமூகத்தில் தவறான பாதையில் சென்றுவிடாதீர்கள். நல்ல சமூகத்தில் இணைந்து கொள்ளுங்கள். உங்கள் பெற்றோர், குழந்தைகள், மனைவி. சகோதரர்கள் மீது அன்பு செலுத்துங்கள். சமூகத்தின் தீய திசைக்கு திரும்பாதீர்கள் எனக் கேட்டுக்கொள்கின்றேன். அதற்காக உறுதி கொள்ளுங்கள். எஞ்சியிருக்கும் உங்கள் எதிர்காலத்தில் மீண்டும் நீங்கள் சிறைச்சாலைக்கு வர வேண்டுமா, காவல் துறை உள்ளிட்ட ஏனையவரின் தாக்குதலுக்கு உள்ளாக வேண்டுமா, சிறைச்சாலையின் ஒழுக்கமற்ற நடத்தைக்காக சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் தண்டனைகளுக்கு ஆளாக வேண்டுமா என நன்றாக சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் எந்த மதத்தவராக இருப்பினும் அந்த எல்லா மதங்களும் போதிக்கின்ற தர்மத்தின்படி வாழ்வதே நல்லது. காரணம் ஒரு மனிதனின் வாழ்க்கையை நல்வழிப்படுத்த அதுவே அடித்தளமாக அமைகின்றது.
எல்ரீரீஈ யுத்த காலத்தில் நான் ஐந்து பயங்கரவாத தாக்குதல்களுக்கு முகங்கொடுத்திருக்கின்றேன். இருந்தும் எனக்கு எந்தவித தீங்கும் ஏற்படவில்லை. ஆனால் என்னை தாக்கி அழிக்க வந்த 6,7 பயங்கரவாதிகள் சயனைட் அருந்தி தம்மை மாய்த்துக்கொண்டார்கள். இருவர் குண்டுகளை வெடிக்க வைத்துக்கொண்டு இறந்து போனார்கள். உயிரோடு கைதுசெய்யப்பட்ட ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவருக்கு மன்னிப்பு வழங்கி, மீண்டும் அவரை சமூகத்தில் இணைத்தேன். சில மாதங்களின் பின்னர் அவரது வீட்டிற்கு சென்று அவரது பெற்றோரையும் சந்தித்தேன். அவர் எப்படி வாழ்க்கை நடத்துகின்றார் என ஆராய்ந்து பார்த்து வாழ்க்கையை முன்னெடுப்பதற்கு ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் என்னிடம் கூறுங்கள். நான் உதவி செய்கின்றேன் எனக் கூறினேன். இன்று விடுதலை பெறும் நீங்களும் ஏதாவது ஒரு சுயதொழிலை மேற்கொள்ள விரும்பினால் அது தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொலிசாருக்கு நான் பணிப்புரை விடுத்துள்ளேன்.

நீங்கள் மீண்டும் ஏதாவது ஒரு குற்றத்தை செய்துவிட்டு நீதிமன்றத்தில் குற்றவாளி கூண்டில் நின்றீர்களேயானால் உங்களைவிட எனக்கே அதிக மனவேதனை ஏற்படும். நீங்கள் விடுதலைபெற்று சமுதாயத்தில் எவ்வித பிரச்சினையுமின்றி வாழ்ந்தீர்களேயானால் உங்களைப் போன்று சிறைச்சாலைகளில் தண்டனை அனுபவிக்கும் மேலும் ஆயிரக்கணக்கான கைதிகளுக்கு என்னால் மன்னிப்பு வழங்கக்கூடியதாக இருக்கும். ஆகையால் நல்லொழுக்கமுடைய சமூகத்துடன் இணைந்துகொள்ளுங்கள்.

நீங்கள் இன்று குற்றவாளியாக சிறையிலடைக்கப்பட்டதற்கு நீங்கள் மாத்திரம் காரணமல்ல. இந்த சமூகத்தில் காணப்படும் விசமத்தனத்தின் காரணமாகவே நீங்கள் குற்றவாளிகளாக ஆக்கப்பட்டிருக்கின்றீர்கள். அறம் அற்ற சமூகம், கோபம், போட்டி, பொறாமை போன்ற சமூக காரணிகளும் உங்களை இந்த இக்கட்டான நிலைக்கு தள்ளக் காரணமாக இருந்திருக்கின்றது.

உலகமெங்கும் சிறைச்சாலைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு வறுமையே பிரதான காரணமாக அமைகின்றது. நமது நாட்டிலும் சனத்தொகையின் 40 சதவீதமானோர் வறுமையில் வாடுவதாகவும் 15 சதவீதமானோர் உச்சக்கட்ட வறுமையிலும் வாழ்ந்து வருவது தெரியவந்துள்ளது. மக்கள் இந்தளவிற்கு வறுமையில் வாடுவதற்கு இதுவரையில் ஆட்சிபுரிந்த அனைத்து அரசாங்கங்களும் பொறுப்புக்கூற வேண்டும்.
இந்த சவால்களை வெற்றிகொள்வதற்கு முதலில் வறுமையை ஒழிக்க வேண்டும். சிறைச்சாலைகளை மூடவேண்டுமானால் வறுமையை இல்லாதொழிக்க வேண்டும். மென்மேலும் பாடசாலைகளை திறக்க வேண்டும். ஒரு பாடசாலையை திறந்து வைப்பதன் மூலம் பல சிறைச்சாலைகளை மூட முடியுமென்பதே சமூக கருத்தாகும். பாடசாலைகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டிய அதேவேளை, சிறைச்சாலைகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். ஒரு நாட்டின் சிறைச்சாலை கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பது அந்த நாட்டின் வீழ்ச்சியையே எடுத்துக்காட்டுகின்றது. அதேபோன்று ஒரு நாட்டின் வறுமையும் நோயாளிகளும் அதிகரிப்பது அந்த நாட்டின் வளர்ச்சியை பின்னடையச் செய்யும் பிரதான காரணிகளாக அமைகின்றன.

எனவேதான் அரசாங்கம் என்ற வகையிலும் தனிப்பட்ட முறையிலும் சிறந்ததோர் சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்காக நாம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றோம். சிறந்த சமூகத்தைக் கட்டியெழுப்பும் வகையில் சிறைச்சாலைகள் பக்கம் எமது கவனத்தை திருப்பியுள்ளோம். சிறைச்சாலைகளிலுள்ள சிறைக்கைதிகளின் எண்ணிக்கையையும் சிறைச்சாலைகளின் எண்ணிக்கையையும் குறைப்பதைப் பற்றி சிந்திக்கத் துவங்குகின்றோம். இது இலகுவான விடயமல்ல. சவால்மிக்கதாகும்.

பொருளாதார நிபுணர்கள் எதைக் கூறினாலும் ஒரு நாட்டில் வறுமை அதிகரிப்பதற்கு செல்வந்தர்களுக்கும் வறியவர்களுக்கும் இடையிலான இடைவெளியே முக்கிய காரணமாகும். இந்த நாட்டில் அநேகமான பொதுமக்களுக்கு புலப்படாதிருக்கும் ஒரு ரகசியம் இருக்கின்றது. இந்த நாட்டின் மொத்த பொருளாதாரத்தையும் 15 முன்னணி வர்த்தகர்களே கட்டுப்படுத்துகின்றனர் என்பதே அந்த ரகசியமாகும். இந்த நாட்டின் மொத்தப் பொருளாதாரமும் எங்கள் 15 பேரின் கைகளிலேயே இருக்கின்றது என அந்த 15 பேரில் ஒருவரே என்னிடம் கூறினார். இந்த நாட்டில் நிலவும் இந்த வறியவர்களுக்கும் செல்வந்தர்களுக்குமிடையிலான இடைவெளியின் காரணமாக வறுமை ஏற்படுகின்றது. வறுமை சிறைச்சாலைகளை நிறைக்கின்றது. திருட்டு உட்பட பல்வேறு சமூகவிரோத செயல்களில் ஈடுபடுவதற்கு முக்கிய காரணம் என்ன? பாடசாலைகளைத் திறந்து சிறைச்சாலைகளை மூட வேண்டும் என நான் ஏன் கூறுகின்றேன்? குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றவர்களில் ஒன்றில் கல்வியை முழுமைப்படுத்தாதவர்கள் அல்லது குறைந்த கல்வியைப் பெற்றவர்களே பெருமளவு இருக்கின்றனர். சிலவேளைகளில் அவர்கள் அறநெறிப் பாடசாலைகளுக்கோ சமய ஸ்தானங்களுக்கோ சென்றிருக்க மாட்டார்கள். பெரும்பாலும் பெற்றோரினால் கைவிடப்பட்டவர்களாகவே இருப்பார்கள். இத்தகைய நிலைமைகளில் தான் பாரிய குற்றங்கள் இடம்பெற வழி பிறக்கின்றது. இந்த விடயங்களை கருத்திற்கொண்டே நாம் இந்த ஜனாதிபதி பொதுமன்னிப்பை உங்களுக்கு வழங்குகிறோம். சிறந்ததோர் சமூகத்தில் உங்களை வாழவைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடனேயே இதை செய்கின்றேன். சிறைச்சாலைகளில் கைதிகளாக வாழ்ந்துவந்த உங்களை சுதந்திரமான திறந்த சமூகத்தில் வாழ வைப்பது மீண்டும் நீங்கள் சிறைச்சாலைக்கு வராமல் இருக்கவேண்டும் என்பதற்காகவேயாகும். இந்த பிரச்சினை ஒரு சிக்கலான சமூக, பொருளாதார பிரச்சினையாகும். இது ஒருவர் குற்றம் புரிந்ததனால் சிறைச்சாலைக்கு சென்றார் என்பதைவிட வித்தியாசமான ஒரு கதையாகும்.

எனவே இந்த அனைத்து விடயங்களையும் கருத்திற்கொண்டு நீங்கள் வெளியே சென்று சிறந்த பிரஜைகளாக வாழ வேண்டும் என உங்களிடம் நான் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொள்கிறேன். ஒருபோதும் மோசமானவர்களுடன் சேர்ந்து விடாதீர்கள். மீண்டும் சிறைச்சாலைகளுக்கு வந்துவிடாதீர்கள். அப்படி வர நேர்ந்தால், உங்களுக்கு பொதுமன்னிப்பு அளித்த ஜனாதிபதி நினைவுக்கு வரக்கூடும். ஜனாதிபதி குறிப்பிட்டதைப்போன்று நாம் இந்த தவறை செய்திருக்காவிட்டால் மீண்டும் இங்கு வரவேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது என்று நீங்கள் எண்ணக்கூடும்.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில் சிறைச்சாலைகளில் கைதிகளாக உள்ளவர்களிடம் பல்வேறு திறமைகள், ஆற்றல்கள், ஆக்கத்திறன்கள் இருக்கவே செய்கின்றன. அவர்களில் ஒரு பிரிவினரின் திறமையையே நாம் இன்று இந்த மேடையில் பார்த்தோம். இங்கு ஒரு பெண் கைதி கண்ணீர் வடித்தவாறே மேடையில் நடனமாடியதை பார்த்தேன். அவருக்கு தான் யார் என்பதும் எப்படி இங்கே வந்தேன் என்பதும் நினைவுக்கு வந்திருக்கக்கூடும். இவ்வாறானதொரு மேடையில் ஒரு கைதியாக நடனமாட நேர்ந்ததை, தனது வாழ்க்கையின் துர்பாக்கிய நிலை குறித்து அவர் சிந்தித்திருக்கக்கூடும். இங்குள்ளவர்கள் பல்வேறு தொழில்களை செய்தவர்களாக இருந்திருப்பீர்கள். சிறைச்சாலைகள் திணைக்களத்தினாலும் தொழிற்பயிற்சி, தொழிற்கல்வி ஆகியன வழங்கப்படுகின்றன. உங்களது திறமைகளை நாமும் இங்கு கண்டோம். உங்களில் சிலர் புத்தகங்களை எழுதுகின்றீர்கள், கல்வி கற்கின்றீர்கள். அதற்கு அரச கொள்கைக்கமைய சிறைச்சாலையில் இருப்பவர்களுக்கு வழங்கக்கூடிய அனைத்து உதவிகளும் வழங்கப்படுகின்றன. அவற்றை நாம் மேலும் பலப்படுத்துவோம். சிறைச்சாலையில் கைதியாக இருக்கும் லக்மின இந்திக பமுனசிங்ஹ ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளார். அவர் சிறைச்சாலையிலிருந்து சமூக விஞ்ஞானத் துறையில் பட்டப்பின் படிப்பை நிறைவுசெய்து களனிப் பல்கலைக்கழத்தில் கலாநிதி பட்டத்திற்காக படித்து வருகின்றார். அவரது ஆய்வுத்தலைப்பு “இலங்கையில் குற்றச்செயல்களைப் புரியும் கும்பல்களின் புதிய அணுகுமுறைகள்” என்பதாக இருக்கின்றது.

2015ஆம் ஆண்டின் இலங்கை குத்துச்சண்டை வீரரான அவர் இவ்வருட தேசிய போட்டியில் பங்குபற்ற எதிர்பார்க்கின்றார். 2013ஆம் ஆண்டு சிறையிலடைக்கப்பட்ட அவருக்கு 2015ஆம் ஆண்டு தண்டனை நியமிக்கப்பட்டிருக்கின்றது. இங்கிருந்து விடுதலைப் பெற்று செல்கின்ற போது அவர் கற்றிருக்கும் கல்வி அவருக்கு பெரும் பயனளிக்கும். ஆகையால்தான் நான் எனது சொந்த வாழ்க்கை கதையையும் உங்களிடம் பகிர்ந்து கொள்கின்றேன். 15 மாதங்களுக்கும் மேலாக மிகுந்த கஷ்டங்களுக்கு மத்தியில் சிறைக்கைதியாக இருந்த என்னால் இந்த நாட்டின் ஜனாதிபதியாக வர முடிந்ததென்றால் உங்களாலும் சிறந்த முறையில் கல்வியை பெற்றுக்கொள்ள முடியுமாக இருப்பின் வெற்றி நிச்சயம் கிடைக்கும். கல்வியை பெற்று நல்லவராய் சமூகத்தில் வாழ்ந்தால் உங்களாலும் எதிர்காலத்தில் ஒரு சிறந்த மனிதராக வரமுடியும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. அதனை நான் உறுதியாக கூறவேண்டும். மனவுறுதியுடன் இருங்கள். உங்கள் இலக்கை காலையிலும் மாலையிலும் தியானமாக நினைவுகூருங்கள்.

தான் கலாநிதி பட்டப்படிப்புக்கு தேவையான ஆய்வு நூலை எழுதுவதற்கான நிதியுதவிகளையும் 2019ஆம் ஆண்டுக்கான தேசிய குத்துச்சண்டை போட்டியில் பங்குபற்றுவதற்கு தனக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பதுமே பமுனசிங்ஹ என்னிடம் முன்வைத்த கோரிக்கைகளாகும். கலாநிதி பட்டப்படிப்புக்குத் தேவையான ஆய்வு நூலை எழுதுவதற்கு தேவையான முழுமையான நிதியினை பெற்றுத்தருவேன் என்பதை குறிப்பிட விரும்புகிறேன். நாளை அல்லது நாளை மறுதினமே அதற்கான நிதி வழங்கப்படும். அதேபோன்று தேசிய குத்துச்சண்டை போட்டியில் பங்குபற்றுவது தொடர்பான சட்டதிட்டங்கள் பற்றி எனக்கு தெரியாததால் அந்த சட்டதிட்டங்களில் தடைகள் இல்லாவிட்டால் அவருக்கு குத்துச்சண்டை போட்டியில் பங்குபற்றுவதற்கு இடமளிக்க வேண்டுமென பரிந்துரை செய்வதில் எனக்கு எந்த எதிர்ப்பும் இல்லை.

நாம் அனைவரும் மனிதர்கள். எமது உடல் உறுப்புகளிலும் எந்த வேறுபாடுகளும் இல்லை. எமது எண்ணங்களிலும் அறிவிலும் சில சில வேறுபாடுகள் இருக்கக்கூடும். பிழையான விடயங்களை நாம் எமது வாழ்க்கையிலிருந்து ஒதுக்கிவிட வேண்டும். பௌத்த தத்துவத்திலும் கிறிஸ்தவம், இந்து, இஸ்லாம் சமயங்களில் சிறந்த மனிதர்களை உருவாக்கும் உன்னத பணிக்கு நாம் அனைவரும் ஒன்றுபடுவோம் எனக் கேட்டுக்கொள்வதுடன், இந்த நிகழ்வை ஏற்பாடு செய்வதில் நீதியமைச்சர், நீதியமைச்சின் செயலாளர் உள்ளிட்ட பணிக்குழாமினர், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் உள்ளிட்ட சிறைச்சாலை அதிகாரிகள், இதற்கு அனுசரணை வழங்கிய நிறுவனங்கள், ஊடக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆசிர்வாதங்களை தெரிவித்து உங்களது வாழ்க்கையை வெற்றிகரமாக்குவதற்கு நாம் எப்போதும் அர்ப்பணிப்புடன் இருக்கின்றோம் என்பதைக் கூறி விடைபெறுகிறேன்.

நன்றி

Share This Post

NEW