தடைகளை நீக்கி சுதேச கைத்தொழில் துறையை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்குமாறு  அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை

தடைகளை நீக்கி சுதேச கைத்தொழில் துறையை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்குமாறு  அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை

தடைகளை நீக்கி சுதேச கைத்தொழில்துறையையும் மற்றும் முதலீட்டாளர்களையும் ஊக்குவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

கைத்தொழில் துறையை ஆரம்பிப்பதற்கும் அவற்றை பேணி வருவதற்கும் தடையாக உள்ள பிரச்சினைகளை இனங்காணுதல் மற்றும் பல்வேறு பிரதேசங்களிலும் உள்ள விசேட வாய்ப்பு வளங்கள் குறித்து ஆராய வேண்டியதன் அவசியம் பற்றியும் கைத்தொழில்துறை, தொழில் முயற்சி அபிவிருத்திக்கான அமைச்சுக்களுக்கிடையிலான செயலணியுடன் இன்று (17) பிற்பகல் இடம்பெற்ற சந்திப்பின்போது ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

மோட்டார் வாகனங்களை ஒன்றுசேர்த்தல், உலோகங்கள், பாதணிகள், தோற் பொருட்கள், ஆடைகள், மருந்துப் பொருட்கள், வாசனைத் திரவியங்கள், மின்சார உபகரணங்கள், தளபாடம் மற்றும் அழகு சாதன உற்பத்திப் பொருட்கள், கைத்தொழில் துறையைச் சேர்ந்தவர்கள் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

உற்பத்தியாளர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் வரி மற்றும் சுங்க நடவடிக்கைகளில் முகங்கொடுக்க வேண்டியுள்ள பிரச்சினைகள் மற்றும் சுற்றாடல் சார்ந்த பிரச்சினைகள் ஜனாதிபதி அவர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. முறையானதொரு திட்டத்தின் கீழ் கைத்தொழிலை ஆரம்பிக்கும்போது பல்வேறு தரப்பினாலும் முன்வைக்கப்படும் சுற்றாடல் மற்றும் ஏனைய பிரச்சினைகள் நாட்டின் அபிவிருத்திக்கு பாரிய தடையாகும். முறையற்ற மற்றும் சட்ட ரீதியற்ற நடவடிக்கைகளுக்கு மத்தியில் சுற்றாடல் அமைப்புகளும் சமூக ஊடகங்களும் அமைதியாக இருப்பது கவலைக்குரியதாகும். நாட்டின் முன்னேற்றத்திற்காக உரிய தெளிவுடன் முதலீட்டு வாய்ப்புகளுக்கு உதவுவது அணைத்து தரப்பினரினதும் பொறுப்பாகுமென்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

அமைச்சர் விமல் வீரவங்ச, இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பி.பீ.ஜயசுந்தர ஆகியோர் உள்ளிட்ட அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

Share This Post