வரலாற்று சிறப்புமிக்க கண்டி எசெல பெரஹெர வெற்றிகரமாக நிறைவடைந்ததை அறிவிக்கும் பத்திரம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

வரலாற்று சிறப்புமிக்க கண்டி எசெல பெரஹெர வெற்றிகரமாக நிறைவடைந்ததை அறிவிக்கும் பத்திரம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

உலகவாழ் பௌத்த பெருமக்களின் வணக்கத்திற்குரிய புனித பூமியாக கருதப்படும் கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசெல பெரஹெர, பாரம்பரிய முறைப்படி இவ்வருடமும் வெற்றிகரமாக நிறைவடைந்தது என்பதை அறிவிக்கும் பத்திரம் தலதா மாளிகையின் தியவடன நிலமே நிலங்க தேலவினால் சம்பிரதாயபூர்வமாக இன்று (15) பிற்பகல் கண்டி ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

ஊர்வலமாக ஜனாதிபதி மாளிகைக்கு வருகை தந்த தியவடன நிலமே உள்ளிட்ட நாற்பெரும் தேவாலயங்களினதும் கிராமிய தேவாலயங்களினதும் நிலமேமார்களை ஜனாதிபதி மாளிகையின் பிரதான வாயிலில் ஜனாதிபதி அவர்கள் வரவேற்றார்.

அதனைத்தொடர்ந்து சம்பிரதாய முறைப்படி தியவடன நிலமேயினால் பத்திரம் ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

இதன்போது உரையாற்றிய ஜனாதிபதி அவர்கள் எமது அபிமானமிக்க கலாசாரத்தின் முக்கியமான அம்சமாக விளங்கும் இந்த வரலாற்று சிறப்புமிக்க உற்சவம் இந்நாட்டின் கலாசார பழக்க வழக்கங்களை எடுத்துக்காட்டும் ஒரு நிகழ்வாகும் என தெரிவித்தார்.

இவ்வருட ஊர்வலத்தினை வெற்றிகரமாக நடத்துவதற்கு பூரண அரச அனுசரணை பெற்றுக்கொடுக்கப்பட்டதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், பிரசித்திபெற்ற கண்டி எசெல பெரஹெரவிற்காக விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளும் தமது ஆலோசனைக்கமைய முன்னெடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

நாட்டின் தேசிய பாதுகாப்பினை உறுதிசெய்து அனைத்து இனங்களுக்கிடையிலும் சமாதானம் நிலை நிறுத்தப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் தேசிய பாதுகாப்பு பலவீனமடைந்துள்ளதாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஒரு சிலரே வெளியிடும் கருத்துக்கள் தொடர்பிலும் இதன்போது வருத்தம் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், தமது குறுகிய அரசியல் இலாபங்களுக்காக நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பான முறையற்ற பிரகடனங்களையும் தேவையற்ற விமர்சனங்களையும் முன்வைக்க வேண்டாம் என தான் அவர்களிடம் கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்தார்.

இதனால் மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சமும் சந்தேகமும் ஏற்படுவதோடு இது நாட்டின் அபிவிருத்தி, பாதுகாப்பு உள்ளிட்ட சகல செயற்பாடுகளுக்கும் தடையாக அமையும் என்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள் குறுகிய அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கமைய நாட்டை தவறாக வழிநடத்த எவரும் முயற்சிக்கக்கூடாது என்றும் தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள் கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி தாக்குதலின் பின்னர் நாட்டின் தேசிய பாதுகாப்பினை உச்ச அளவில் உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கமும் பாதுகாப்பு பிரிவினரும் முறையான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளதாகவும் உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் மீண்டும் அத்தகையதொரு பயங்கரவாத தாக்குதலுக்கு இலங்கை முகங்கொடுக்காதிருப்பதற்கு அதுவே காரணமாகும் எனவும் தெரிவித்தார்.

வரலாற்று சிறப்புமிக்க எசெல பெரஹெர ஊர்வலத்திற்காக கண்டி மாவட்டத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக சிரமங்களுக்கு மத்தியில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட முப்படையினர் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு படையினருக்கும் தனது நன்றியை ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

ஊர்வலத்தில் பங்கேற்ற கலைஞர்களுக்கு பாரம்பரிய முறைப்படி பரிசில்களும் விருதுகளும் இதன்போது ஜனாதிபதி அவர்களால் வழங்கப்பட்டதுடன், நாற்பெரும் தேவாலயங்கள் மற்றும் கிராமிய தேவாலயங்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான நிதியுதவியும் இதன்போது வழங்கப்பட்டன.

“புனித தலதா கலாசாரம்” எனும் நூல் இதன்போது ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டதோடு, “சிந்து” யானைக்குட்டிக்கு பழங்களை வழங்கி ஜனாதிபதி அவர்கள் உபசரித்தார்.

அதனைத்தொடர்ந்து பாரம்பரியமாக எடுக்கப்படும் நிலமேமார்களுடனான குழுப்புகைப்படத்திற்கும் ஜனாதிபதி அவர்கள் தோற்றினார்.

ஜயந்தி சிறிசேன அம்மையார், ஆளுநர்களான சரத் ஏக்கநாயக்க, ரஜித் கீர்த்தி தென்னகோன், ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனெவிரத்ன உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

Share This Post

NEW