சீஷெல்ஸ் – இலங்கை உறவுகள் பலமாக வளர்ச்சியடைந்து வருவதாக ஜனாதிபதி தெரிவிப்பு

சீஷெல்ஸ் – இலங்கை உறவுகள் பலமாக வளர்ச்சியடைந்து வருவதாக ஜனாதிபதி தெரிவிப்பு

சீஷெல்ஸ் – இலங்கை உறவுகள் தற்போது பலமாக வளர்ச்சியடைந்து வருவதாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.

அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் என்ற வகையில் இந்த ஒத்துழைப்பின் மூலம் கிடைக்கும் நன்மைகள் இரண்டு நாட்டினதும் மக்களின் நலன்களுக்கு காரணமாக அமையும் என்றும் ஜனாதிபதி அவர்கள் மேலும் தெரிவித்தார்.

சீஷெல்ஸில் வாழும் இலங்கையர்களுடன் நேற்று (09) பிற்பகல் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார்.

சீஷெல்ஸில் பல்வேறு துறைகளில் தொழில் செய்கின்ற இலங்கையைச் சேர்ந்த தொழில் வல்லுனர்கள் மற்றும் கல்வி கற்கின்ற மாணவர்கள் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டதுடன், அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஜனாதிபதி அவர்களை வரவேற்றனர்.

இலங்கைக்கும் சீஷெல்ஸ் நாட்டுக்கும் இடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்துவது தொடர்பில் புதிய பொருளதார, வர்த்தக உறவுகளை ஏற்படுத்தும் வகையில் தனது இரண்டு நாள் அரசமுறை பயணத்தின்போது பல்வேறு முக்கிய தீர்மானங்களை  மேற்கொண்டதாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

அனைத்து நாடுகளுடனும் உறவுகளை கட்டியெழுப்பி நாட்டினதும் மக்களினதும் அபிவிருத்திக்காக நன்மைகளை பெற்றுக்கொள்வதே தனது நோக்கமாகும் என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

சீஷெல்ஸ் நாட்டின் சர்வதேச மாநாட்டு மத்திய நிலையத்திலேயே இச்சந்திப்பு இடம்பெற்றது. சீஷெல்ஸ் நாட்டிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தையும் ஜனாதிபதி அவர்கள் இதன்போது ஆரம்பித்து வைத்தார்.

சீஷெல்ஸ் பௌத்த சங்கத்தின் இணையத்தளமும் ஜனாதிபதி அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கடந்த 30 வருட காலத்தில் சீஷெல்ஸில் வாழ்ந்து வருவதுடன், இலங்கைக்கும் சீஷெல்ஸுக்கும் இடையிலான உறவுகளை பலப்படுத்துவதற்கு பங்களிப்பு செய்த இலங்கை தொழில் வல்லுனர்களை பாராட்டி ஜனாதிபதி அவர்களினால் நினைவுச் சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

ஜனாதிபதி அவர்களின் சீஷெல்ஸ் விஜயத்தை நினைவுகூரும் வகையில் சீஷெல்ஸிலுள்ள இலங்கை ஒன்றியத்தினால் ஜனாதிபதி அவர்களுக்கு விசேட நினைவுச் சின்னமொன்று வழங்கி வைக்கப்பட்டது.

அமைச்சர் லக்ஷ்மன் செனவிரத்ன, இராஜாங்க அமைச்சர்களான பியசேன கமகே, மொஹான் லால் கிரேரு ஆகியோரும் சீஷெல்ஸிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் டிகிரி ஹேரத் குணதிலக ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

சீஷெல்ஸ் நாட்டில் வசிக்கும் இலங்கையர்களை சந்தித்தபோது ஜனாதிபதி அவர்கள் ஆற்றிய உரை
2018.10.09 சீஷெல்ஸ் சர்வதேச மாநாட்டு மண்டபம்

சீஷெல்ஸ் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் வருகைதந்து இன்று உங்கள் அனைவரையும் சந்திப்பதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன். இம்மாதத்துடன் இலங்கைக்கும் சீஷெல்ஸ் நாட்டிற்குமிடையிலான உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு முப்பது வருடங்கள் பூர்த்தியாகின்றன. அதற்கமைய இந்நாட்டு ஜனாதிபதியால் விடுக்கப்பட்ட அழைப்பின்பேரிலேயே நான் இங்கு வருகை தந்துள்ளேன். பல்வேறு துறைகளின் ஊடாக ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ள இருதரப்பு தொடர்புகளுக்கு நாம் வலு சேர்த்துள்ளோம். அதனூடாக பல வெற்றிகரமான நன்மைகளை நாம் அடைந்துள்ளோம். இயற்கை வளங்களுடன் கூடிய ரம்மியமான இத்தேசத்தில் சட்டம், கல்வி, சுகாதாரம், வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் பணிபுரியும் வியாபாரிகள், அறிஞர்கள் உள்ளிட்ட அனைவரும் பாக்கியசாலிகள் என்று நான் கருதுகின்றேன். இலங்கையர் என்ற வகையில் அவர்கள் தமது அறிவு, அனுபவம் என்பனவற்றை ஏனைய சமூகத்தினருடன் பகிர்ந்துகொள்வது ஒரு உன்னத பணியாகும். அத்தோடு அது இலங்கைக்கும் பெருமையாகும். நீங்கள் அப்பணியை ஆற்றி வருகின்றீர்கள். அதற்காக எனது வாழ்த்துக்களையும் ஆசீர்வாதத்தையும் தெரிவிக்கின்றேன். கடந்த காலங்களில் இலங்கை மற்றும் சீஷெல்ஸ் நாடுகளிடையே ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட உறவுகள் தற்போது முன்னேற்றமடைந்து வருவதை காணக்கூடியதாகவுள்ளது. அது தொடர்பில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம். அபிவிருத்தி அடைந்துவரும் நாடென்ற வகையில் சீஷெல்ஸ் மிகவும் அழகுடன்கூடிய கண்ணியமிக்க நாடாகும். இங்கு வருகை தந்தபோது சீஷெல்ஸ் அரசாங்கத்தால் எனக்கு வழங்கப்பட்ட வரவேற்புக்கும் கௌரவத்திற்கும் நன்றி தெரிவிக்கின்றேன்.

நேற்றைய தினம் கல்வி, சுகாதாரம், விவசாயம், மீன்பிடி, தொழில்நுட்பம், சுற்றுலா மற்றும் பாதுகாப்பு ஆகிய சேவைகள் தொடர்பிலான இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்புகளை வலுவூட்டுதல் தொடர்பில் கலந்துரையாடினோம். அவை தொடர்பில் செயற்திறன்மிக்க பல முடிவுகள் எடுக்கப்பட்டது. நேற்றைய தினம் சீஷெல்ஸில் படித்த இளைஞர்களுக்கு எமது நாட்டில் தொழிற் பயிற்சி கற்கைகளுக்கான பத்து புலமைப்பரிசில்களை வழங்குவதற்கு நான் இணக்கம் தெரிவித்தேன். இலங்கையின் மிகப் பழமை வாய்ந்த தொழிற்பயிற்சி நிலையமான ஜெர்மன் தொழிற்பயிற்சி நிலையத்தினூடாக வருடந்தோறும் நடத்தப்படும் பரீட்சையின் மூலமாகவே மாணவர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர். அவர்களுக்கு நான்கு வருட தொழிற்பயிற்சி வழங்கப்படும். அவ்வாறு தொழிற்பயிற்சியை பெறும் மாணவர்களில் 90 சதவீதமானோர் வெளிநாடுகளில் பணியாற்றுகின்றனர். அந்நிறுவனத்தில் பயிற்சிகளை மேற்கொள்ளும் இலங்கை மாணவர்களில் அதிகமானோர் அவுஸ்திரேலியாவில் பணியாற்றி வருகின்றார்கள். அதனடிப்படையிலேயே சீஷெல்ஸ் இளைஞர்களுக்கு வருடாந்தம் பத்து புலமைப்பரிசில்களை வழங்குவதற்கு நாம் விருப்பம் தெரிவித்தோம்.

நேற்றைய கலந்துரையாடலின்போது கடற்கரை பாதுகாப்பு படகுகளை வழங்குமாறு எம்மிடம் கோரினர். எமது கப்பற்படை பொறியியல் பிரிவின் தொழில்நுட்ப பிரிவில் உயர்ரக பாதுகாப்பு படகுகள் தயாரிக்கப்படுவதை இலங்கையர்கள் என்ற வகையில் நீங்கள் அறிந்திருப்பீர்கள். யுத்தம் நிலவிய காலங்களில் எல்ரீரீஈ.யினர் கப்பல்கள் மூலம் துரித தாக்குதல்கள் மேற்கொள்ளும்போது அவற்றை எதிர்நோக்குவதற்காக பாதுகாப்பான தொழிநுட்ப படகுகளை எமது கப்பற் படையினர் தயாரித்தனர். இது தொடர்பில் கடற்படை தளபதியிடம் கலந்துரையாடியபோது இரு படகுகளை ஒரு மாதத்திற்குள் வழங்க முடியுமென்பதை அவர் தெரிவித்திருந்தார். சீஷெல்ஸின் கடற்கரை பாதுகாப்பு பணிகளுக்காக பெறுமதி வாய்ந்த தொழில்நுட்பத்துடன்கூடிய கடற்கரை பாதுகாப்பு படகுகள் இரண்டை ஒரு மாதத்திற்குள் சீஷெல்ஸ் அரசாங்கத்திற்கு நாம் வழங்குவோம்.

சுற்றாடல், கல்வி, சுகாதாரம் ஆகிய துறைகளை மேம்படுத்துவதற்கான பங்களிப்பை வழங்குமாறும் கேட்டுக்கொண்டர்கள். தற்போது “லங்கா ஹொஸ்பிட்டல்” மருத்துவமனையின் கிளையொன்றும் இங்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து சிகிச்சை பெறுவதற்காக அதிகளவான நோயாளிகள் இலங்கைக்கு வருகை தருகின்றனர். அதை அடிப்படையாகக் கொண்டு சுகாதாரத்துறையில் இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்பை மேம்படுத்தும் வகையில் பல முடிவுகள் எடுக்கப்பட்டன. அதற்கமைய எமது வெளிவிவகார அமைச்சுக்கு இப்பணிகளை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் நான் பணிப்புரை விடுத்துள்ளேன்.

பல்லாயிரக் கணக்கான வருடகால அபிமானமிக்க வரலாற்றைக்கொண்ட எமது தாயகத்திலிருந்து இங்கு வருகை தந்து உங்களால் ஆற்றப்படும் சேவையின் பெருமையை உங்களைப் போலவே நாமும் உணர்கிறோம். இலங்கையின் வரலாறு எந்த இடத்தில் ஆரம்பித்தது என்பதை வரலாற்று ஆய்வாளர்களால் கூட கண்டறிய முடியாதுள்ளது. உலகில் பாரிய தொழில்நுட்ப வளர்ச்சியை அடைந்திருக்கும் செல்வந்த நாடுகளின் வரலாறு 400, 500, 600, 700 ஆண்டுகளுக்கு உட்பட்டதென்பதை நீங்கள் அறிவீர்கள். எமது தாய் நாடு பல்லாயிரக் கணக்கான வரலாற்று சிறப்புக்கு உரிமை கோருவதுடன், அத்தகைய பெருமைமிக்க வரலாற்றினை உடைய இலங்கையர்களான உங்களால் ஆற்றப்படும் சேவையை நாம் மீண்டும் பாராட்டுகின்றேன். எமது உயர்ஸ்தானிகர் உள்ளிட்ட அதிகாரிகளால் ஆற்றப்படும் சேவைகளை நான் பாராட்டுகின்றேன். எமது தாய் நாட்டிற்காகவும் நீங்கள் பணியாற்றுகின்ற தேசத்தின் எதிர்காலத்திற்காகவும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென்ற வேண்டுகோளை உங்களிடம் முன்வைப்பதுடன், எனது நன்றியையும் ஆசீர்வாதத்தையும் தெரிவித்து உங்களிடமிருந்து விடைபெறுகின்றேன்.

நன்றி

மும்மணிகளின் ஆசிகள்

 

Share This Post

NEW