எதிர்காலத்திலும் தேரவாத பௌத்த சமயத்தை உலகிற்கு வழங்கும் மத்திய நிலையமாக இலங்கையை ஆக்க வேண்டும் -ஜனாதிபதி

எதிர்காலத்திலும் தேரவாத பௌத்த சமயத்தை உலகிற்கு வழங்கும் மத்திய நிலையமாக இலங்கையை ஆக்க வேண்டும் -ஜனாதிபதி

எமது நாட்டை அன்று போன்று இன்றும் எதிர்காலத்திலும் உலகிற்கு தேரவாத பௌத்த சமயத்தை வழங்கும் மத்திய நிலையமாக ஆக்குவதற்கு தற்போதைய அரச தலைவர் என்ற வகையில் தனது பொறுப்பை நிறைவேற்றுவதாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்..

பேராதனை ஈரியகம ஸ்ரீ சுபோதாராம விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள புத்தகயா தூபியை திறந்து வைக்கும் புண்ணிய நிகழ்வு இன்று (02) பிற்பகல் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எமது நாட்டின் வரலாறு, கலாசாரம் மற்றும் பௌத்த மரபுரிமைகள் பற்றி பெருமையுடனும் கௌரவத்துடனும் பேச முடியுமாக இருப்பது தேரவாத பௌத்த சமயத்தின் மத்திய நிலையமாக அன்று எமது நாடு இருந்ததன் காரணத்தினாலேயே ஆகும். அந்த உன்னத பங்களிப்பை பாதுகாத்து உலகெங்கிலும் உள்ள அனைத்து மக்கள் மத்தியிலும் பௌத்த சமயத்தை கொண்டு செல்வது இன்றுள்ள பொறுப்பாகுமென்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

பர்மாவில் வசிக்கும் இலங்கை பிக்குகளுக்கு தங்குவதற்கு ஒரு இடம் இல்லாமல் இருப்பது பற்றி மகா சங்கத்தினர் ஜனாதிபதியிடம் முன்வைத்த கோரிக்கை பற்றி கவனம் செலுத்திய ஜனாதிபதி அவர்கள், இது பற்றி பர்மா அரசாங்கத்துடன் இராஜதந்திர மட்டத்தில் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இன்று பிற்பகல் பேராதனை ஈரியகம ஸ்ரீ சுபோதாராம விகாரைக்கு சென்ற ஜனாதிபதி அவர்கள் விகாராதிபதி சங்கைக்குரிய வத்தேகம தம்மாவாச நாயக்க தேரரை சந்தித்து அவரது சுகதுக்கங்களை கேட்டறிந்தார்

அதனைத் தொடர்ந்து புத்தகயா தூபியை திறந்து வைக்கும் முகமாக நினைவுப் பலகையை ஜனாதிபதி அவர்கள் திரைநீக்கம் செய்து வைத்து, புத்தபெருமானின் உருவச்சிலைக்கு முதலாவது மலர் பூஜையை செய்தார்.

இந்தியாவின் புத்தகயா விகாரையில் தாபிக்கப்பட்டுள்ள புத்த பெருமானின் சிலையைப் போன்ற புத்தர் சிலையும் இங்கு நிர்மாணிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த புண்ணிய நிகழ்விற்கு தலைமை தாங்கிய அமரபுர மகா நிக்காயவின் மகா நாயக்க தேரர் சங்கைக்குரிய கொட்டுகொட தம்மாவாச மகா நாயக்க தேரரிடம் இந்த புத்தகயா தூபியை திறந்து வைத்ததை குறிக்கும் சன்னஸ் பத்திரத்தை ஜனாதிபதி அவர்கள் வழங்கி வைத்தார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட விசேட நினைவு மலர் ஜனாதிபதிக்கு வழங்கி வைக்கப்பட்டது.

இந்த தூபியின் நிர்மாணப் பணிகளுக்கு பங்களிப்பு செய்த கலைஞர்களுக்கு ஜனாதிபதி அவர்களினால் நினைவுச் சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

விகாரதிபதியினால் ஜனாதிபதி அவர்களுக்கு விசேட நினைவுச் சின்னமொன்று வழங்கப்பட்டது.

மகா சங்கத்தினர் உட்பட மத்திய மாகாண ஆளுநர் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்ரி குணரத்ன, வடமத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க, இராஜாங்க அமைச்சர் லக்கி ஜயவர்தன மற்றும் மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட பெருந்திரளான பொதுமக்களும் இப்புண்ணிய நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Share This Post

NEW