பேண்தகு அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்கான முன்னுரிமை நடவடிக்கையாக வன அடர்த்தியை அதிகரிப்பதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் உள்ளது – ஜனாதிபதி

பேண்தகு அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்கான முன்னுரிமை நடவடிக்கையாக வன அடர்த்தியை அதிகரிப்பதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் உள்ளது – ஜனாதிபதி

பேண்தகு அபிவிருத்தி இலக்கினை அடைந்துகொள்வதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையாக இலங்கை அதன் தற்போதைய வனப் பிரதேசத்தை பாதுகாப்பதற்கும் அதனை 32 வீதமாக அதிகரிப்பதற்கும் சிறந்த நடைமுறைகளை பின்பற்றுவதற்கு மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது என்று ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.

உலக வன வாரத்தை முன்னிட்டு நடைபெறும் உலக வனப் பாதுகாப்பு குழுவின் 24வது கூட்டத்தொடரில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார்.

இம்மாநாடு ரோமில் உள்ள ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய தாபனத்தின் தலைமை அலுவலகத்தில் இன்று (16) முற்பகல் ஆரம்பமானது.

இந்த மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி அவர்கள், காடுகள் அடிப்படை மனிதத் தேவைகளான உணவு, சக்தி வளம் மற்றும் உறைவிடம் உள்ளிட்ட பல்வேறு சமூக பொருளாதார நன்மைகளை வழங்குகின்றன எனக் குறிப்பிட்டதுடன், இந்த தேவைகளையும் ஏனைய தேவைகளையும் அடைந்துகொள்வதற்கு உதவுகின்ற உற்பத்திகள் மற்றும் சேவைகளை நிலையாக பேணுவதற்கு காடுகள் பேண்தகு அடிப்படையில் முகாமைத்துவம் செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

பூகோள வனத்துறையின் முன்னேற்றத்திற்கான தீர்மானங்களை மேற்கொள்ளவும் அது தொடர்பான அறிவை பகிர்ந்துகொள்ளவும் மேலும் கலந்துரையாடல், விவாதங்களை மேற்கொள்ளவும் வனப்பாதுகாப்பு தொடர்பான இந்த மாநாடு ஒரு சிறந்த தளமாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், இனி வருகின்ற நிகழ்ச்சி நிரல் விரிவானதாகவும் சவால் மிக்கதாகவும் இருந்த போதும் அதனை வெற்றிகொள்வதற்கு அனைத்து நாடுகளும் அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும் என்றும் தெரிவித்தார்.

சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் 50 வீதத்திற்கும் மேற்பட்ட பகுதிகள் வனப் பிரதேசங்களாகவே இருந்து வந்துள்ளன என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், தற்போது நாட்டின் மொத்த வன அடர்த்தியானது மொத்த நிலப்பிரதேசத்தில் 29 வீதமாக குறைவடைந்துள்ளது என்று தெரிவித்தார். பாரியளவிலான விவசாய முயற்சிகள் மற்றும் குடியேற்றங்களுக்காக காணிகள் பயன்படுத்துவதால் காடுகள் அழிக்கப்பட்டதன் காரணமாக நாட்டின் வனப் பிரதேசம் குறைந்து வருகின்றது என்றும் இதன் காரணமாக பல சூழல் பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கவேண்டி ஏற்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

மீள்காடாக்கல் அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாக மேற்கொள்ளப்பட்டுவருவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், 2020ஆம் ஆண்டாகும்போது நாட்டில் ஐந்து மில்லியன் மரங்களை நடும் திட்டம், சூழலையும் நீர் நிலைகளையும் பாதுகாக்கின்ற வகையில், கடல்மட்டத்திலிருந்து 5,000 அடி உயர நிலப்பகுதியில் இருக்கின்ற மரங்களை வெட்டுவதை தடை செய்தல் மற்றும் அனைத்து பாடசாலை பிள்ளைகளும் குறைந்தது ஒரு மரக்கன்றை நாட்டுவதற்கு ஊக்குவிக்கின்ற நிகழ்ச்சித்திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அபிவிருத்தி தாபனம் இலங்கைக்கு தொடர்ச்சியாக வழங்கிவரும் உதவிகளுக்கு ஜனாதிபதி அவர்கள் நன்றி தெரிவித்தார்.

பேண்தகு அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்கு காடுகளின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கில் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய தாபனத்தினால் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் José Graziano da Silva இந்த மாநாட்டில் உரையாற்றும்போது உறுப்பு நாடுகளுக்கு பேண்தகு அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்கு உதவுவது தமது அமைப்பின் நோக்கமாகுமென்று தெரிவித்தார்.

உலக வன பாதுகாப்பு குழுவுக்கான நிகழ்ச்சி நிரல் 2016ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதுடன், அந்நிகழ்ச்சித்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு அந்நோக்கங்களை அடைந்துகொள்வதற்காக உறுப்பு நாடுகளுக்கு முடியுமான உதவிகளை வழங்கி வருவதாக பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

சுற்றாடலை பாதுகாப்பதற்கு மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வரும் தலைவர் என்ற வகையில், இந்த மாநாட்டில் இலங்கை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் பங்குபற்றுவதை பணிப்பாளர் நாயகம் பாராட்டினார்.

உலக வனப் பாதுகாப்பு குழுவின் 24வது கூட்டத்தொடரின் ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் ஆற்றிய உரை – ரோம் நகரில் 2018.07.16

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் அவர்களே,

மேன்மைதங்கியவர்களே,
அதிதிகளே,

அவையோரே,

உலக வனப் பாதுகாப்பு குழுவின் 24வது கூட்டத்தொடரின் ஆரம்ப அமர்வில் உரை நிகழ்த்த என்னை அழைத்தமைக்காக ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய தாபனத்தின் பணிப்பாளர் நாயகத்திற்கு நன்றி தெரிவிக்க விரும்புகின்றேன்.

இதை இலங்கைக்கும் தனிப்பட்ட முறையில் எனக்கும் வழங்கப்பட்ட பெரும் கௌரவமாகவே நான் கருதுகின்றேன்.

விவசாயத்துறை அமைச்சர் என்ற வகையிலும் அதன் பின்னர் தற்போது சுற்றாடல் மற்றும் இயற்கை வளங்கள் அமைச்சர் என்ற வகையிலும் எனக்கு உணவு மற்றும் விவசாய தாபனத்துடன் நெருங்கிய தொடர்புகள் இருந்து வருகின்றன. இன்று நான் இந்த மதிப்பிற்குரிய சபையில் நாட்டின் தலைவர் என்ற வகையிலேயே உரையாற்றும் சந்தர்ப்பத்தை பெற்றிருக்கின்றேன்.

எமது நாட்டில் வறிய விவசாய சமூகங்களுக்கு பாரிய இழப்புகளை ஏற்படுத்திய வெள்ளம், வரட்சி மற்றும் மண் சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களின்போது எனது நாட்டுக்கும் மக்களுக்கும் உணவு மற்றும் ஏனைய அவசர உதவிகளை வழங்கியமைக்காக நான் உலக உணவு மற்றும் சுகாதார தாபனத்திற்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
மேன்மைதங்கியவர்களே,

இந்த கூட்டத்தொடரின் விடயதானத்திற்கு வருவோமேயானால், எமது நாட்டில் பெரும்பான்மையான மக்கள் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு விவசாயத்திலேயே தங்கியிருக்கின்றனர்.

சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் 50 வீதத்திற்கும் மேற்பட்ட பகுதிகள் வனப் பிரதேசங்களாகவே இருந்து வந்துள்ளன. தற்போது நாட்டின் மொத்த வன அடர்த்தியானது நாட்டின் மொத்த நிலப்பிரதேசத்தில் 29.7% வீதம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

பேண்தகு அபிவிருத்தி இலக்கினை அடைந்துகொள்வதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையான நில ஆட்சியை மேம்படுத்துவதற்கு சிறந்த நடைமுறைகளை பின்பற்றி, இலங்கை அதன் தற்போதைய வனப் பிரதேசத்தை பாதுகாப்பதுடன் அதனை 32 வீதமாக அதிகரிப்பதற்கு மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது.

ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட விவசாயம் மற்றும் பாரிய விவசாய குடியேற்றங்களின் பயன்பாட்டிற்காக காடுகள் அழிக்கப்பட்டதன் காரணமாக எனது நாட்டின் வனப் பிரதேசத்தில் 50% வீதத்திற்கு மேல் இழக்க நேர்ந்திருக்கின்றது.

காடழிப்பு நாட்டின் பல்வேறு பகுதிகளில் மோசமான சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கின்றது. அது மழை வீழ்ச்சியின் போக்கிலும் மண்ணரிப்பு, விவசாய உற்பத்திகளின் அழிவு போன்ற பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கின்றது.

மனிதனின் அடிப்படைத் தேவைகளான உணவு, சக்தி வளம் மற்றும் உறைவிடம் உள்ளிட்ட பல்வேறு சமூக, பொருளாதார நன்மைகளை காடுகள் பெற்றுத் தருகின்றன. இந்த பல்வேறு வகையான தேவைகளை அடைந்துகொள்வதற்கு உதவுகின்ற உற்பத்திகள் மற்றும் சேவைகளை நிலையாக பேணுவதற்கு காடுகள் பேண்தகு அடிப்படையில் முகாமைத்துவம் செய்யப்படல் வேண்டும்.

மீள்காடாக்கல் வன திணைக்களத்தின் பொறுப்பாக இருப்பினும் ஏனைய பல அரசாங்க அமைச்சுகள் உள்ளூராட்சி நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களுடன் இணைந்து 2020 ஆம் ஆண்டளவில் நாட்டில் ஐந்து மில்லியன் மரங்களை நடுவதற்கான ஒரு திட்டத்தை நாம் ஆரம்பித்திருக்கின்றோம்.

தற்போது இலங்கையில் சுமார் 4.3 மில்லியன் பிள்ளைகள் பாடசாலை செல்கின்றனர். அரசாங்கத்தின் அனுசரணையின் கீழ் பாடசாலை பிள்ளைகள் அவர்களது வீட்டுத் தோட்டங்கள், பாடசாலை வளாகங்கள் மற்றும் ஏனைய இடங்களில் குறைந்தது ஒரு மரக் கன்றையேனும் நட்டுவதற்கு ஊக்குவிக்கின்ற நிகழ்ச்சித்திட்டமொன்றையும் நாம் ஆரம்பித்துள்ளோம். அதற்கான நிதியுதவிகளை வழங்குவதன் மூலம் நாம் இந்த மரம் வளர்க்கும் திட்டத்தை ஊக்குவிக்கின்றோம். அதற்கான நிதி ஒதுக்கீடுகளை அவர்களது தனிப்பட்ட பெயர்களில் செய்ய இருக்கின்றோம். மரங்களை நடுவதன் மூலம் பிள்ளைகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் வருமானம் கிடைக்கப் பெறலாம் என்ற வகையில் அவர்ளை நாம் இதற்கு இணங்கச் செய்வோம். இது பிள்ளைகள் இயற்கையை பேணிப் பாதுகாக்க வேண்டியது அவர்களது கடமை என்பதை விளங்கிக்கொள்வதற்கு ஊக்கமளிப்பதாக அமையும்.

சூழலையும் நீர் நிலைகளையும் பாதுகாக்கும் வகையில், கடல்மட்டத்திலிருந்து 5,000 அடி உயர நிலப்பகுதியில் இருக்கின்ற மரங்களை வெட்டுவதை எமது அரசாங்கம் தடை செய்துள்ளது.
பாரிய அல்லது நடுத்தர அளவிலான கருத்திட்டங்கள் அவற்றின் பணிகள் ஆரம்பிக்கப்பட முன்னர் சூழல் பற்றிய தாக்க மதிப்பீட்டை மேற்கொள்ள வேண்டும்.

பூகோள வனத்துறையின் முன்னேற்றத்திற்கான தீர்மானங்களை மேற்கொள்ளவும் அது தொடர்பான அறிவை பகிர்ந்துகொள்ளவும், கலந்துரையாடல், விவாதங்கள் ஆகியவற்றை மேற்கொள்ளவும் வனப்பாதுகாப்பு தொடர்பான இந்த மாநாடு ஒரு சிறந்த தளமாகும். இனி வருகின்ற நிகழ்ச்சி நிரல் விரிவானதாகவும் சவால் மிக்கதாகவுமே அமையும்.

மேன்மைதங்கியவர்களே, இந்த உரையை நிறைவு செய்வதற்கு முன்னால் எனக்கும் எனது தூதுக்குழுவிற்கும் வழங்கிய பெருவரவேற்பு மற்றும் உபசரிப்புக்காக உலக உணவு மற்றும் விவசாய நிறுவனத்திற்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

நன்றி.

Share This Post

NEW