உண்மையான அரசியல்வாதிகளைக் கொண்ட அரசாங்கமே நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான மார்க்கமாகும் – ஜனாதிபதி

உண்மையான அரசியல்வாதிகளைக் கொண்ட அரசாங்கமே நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான மார்க்கமாகும் – ஜனாதிபதி

எதிர்வரும் ஐந்து மாதங்களில் புதியதொரு அரசாங்கத்தினை உருவாக்கும் வாய்ப்பு நாட்டு மக்களுக்கு கிடைக்கப்பெறுவதுடன், இதன்போது தூய்மையான, மனிதநேயமிக்க, நாட்டை நேசிக்கும், ஊழல், மோசடியற்ற உண்மையான அரசியல்வாதிகளைக் கொண்ட மனிதநேய அரசாங்கமொன்றை உருவாக்குவதற்காக மக்கள் தமது வாக்குப் பலத்தை உபயோகிப்பார்கள் என தான் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.

வீழ்ச்சியடைந்துவரும் பொருளாதார கட்டமைப்பையும் ஊழல், மோசடிகள்மிக்க தூய்மையற்ற அரசியலைக்கொண்ட இந்த நாட்டினைக் கட்டியெழுப்புவதற்கான ஒரேயொரு மார்க்கம் உண்மையான அரசியல்வாதிகளைக் கொண்ட அரசாங்கம் ஒன்றினைத் தேர்ந்தெடுப்பதாகும் எனவும் அதற்கான பொறுப்பு நாட்டு மக்களிடமே காணப்படுகின்றதெனவும் ஜனாதிபதி அவர்கள் இதன்போது தெரிவித்தார். நுவரெலியாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சகல வசதிகளையும் கொண்ட புதிய மாவட்ட மருத்துவமனையை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் இன்று (15) முற்பகல் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், நாட்டை நேசிக்கும் உண்மையான அரசியல்வாதிகள் மக்களின் பிரச்சினைகளை உரியவாறு இனங்கண்டு அவற்றை தீர்த்து வைப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவார்களென தெரிவித்தார்.

மேலும் அபிவிருத்தியின் பெரும் பங்காளர்களான சுமார் 16 இலட்சம் அளவிலான அரச சேவையாளர்களும் நாட்டிலுள்ள புத்திஜீவிகளும் தமது கடமைகளை சரிவர நிறைவேற்றுவார்களாயின் நாட்டில் அபிவிருத்தி என்பது ஒரு சவாலான விடயமாக அமையாது என்பதை ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

பெருந்தோட்ட மக்களுக்காக முன்னொருபோதும் நிறைவேற்றப்படாத வேலைத்திட்டங்கள் கடந்த ஐந்து வருடங்களாக நிறைவேற்றப்பட்டுள்ளன எனவும் மக்களுக்கான இலவச மருத்துவம், கல்வி மற்றும் ஏனைய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக பல விரிவான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன எனவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

நாட்டை சீரழிப்பதற்கான இலகுவான மார்க்கம் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலாகும் என்பதை இதன்போது நினைவுகூர்ந்த ஜனாதிபதி அவர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகளின் தனிப்பட்ட நிகழ்ச்சிநிரல்கள் காரணமாக நாட்டிற்கு நன்மைபயக்கும் விடயங்களுக்காக பாரிய முயற்சிகளை மேற்கொண்டபோதிலும் அவற்றின் முழுமையாக பலன்களை பெற்றுக்கொள்வது மிக சிரமமாகும் எனத் தெரிவித்தார்.

நாட்டிற்கு நன்மைபயக்கும் விடயங்கள் தொடர்பில் அரசியல்வாதிகள் தமது குறுகிய அரசியல் நிகழ்ச்சிநிரல்களுக்கு அப்பால் உண்மையான மனிதநேயத்துடன் செயற்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி அவர்கள் இதன்போது வலியுறுத்தினார்.

நெதர்லாந்து அரசின் இலகு கடனுதவி திட்டத்தின் கீழ் 07 பில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த மருத்துவமனை, 600 கட்டில்களைக் கொண்ட நோயாளர் விடுதி, நவீன தொழிநுட்பத்துடனான சத்திர சிகிச்சைக்கூடம், தீவிர சிகிச்சைப் பிரிவு, வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவு, மருத்துவக்கூடம், குருதிமாற்று சிகிச்சை நிலையம் மற்றும் மருத்துவர்களுக்கும் தாதியர்களுக்குமான உத்தியோகபூர்வ இல்லங்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

2012ஆம் ஆண்டில் ஜனாதிபதி அவர்கள் சுகாதார அமைச்சராக பதவி வகித்தபோது இந்த மருத்துவமனையின் நிர்மாணப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன், நுவரெலியாவிற்கு வருகைத் தரும் சுற்றுலா பிரயாணிகளுக்கு உயர் தரத்திலான, பாதுகாப்பான, வினைத்திறனான மருத்துவ சேவைகளை வழங்கவும் இதனூடாக எதிர்பார்க்கப்படுகின்றது.

நினைவுப்பலகையை திரைநீக்கம் செய்து புதிய மருத்துவமனையை மக்களின் பாவனைக்காக கையளித்த ஜனாதிபதி அவர்கள், அதனை பார்வையிட்டதுடன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதலாவது நோயாளிகள் மூவரையும் பதிவு செய்தார்.

அமைச்சர்களான ராஜித்த சேனாரத்ன, நவீன் திசாநாயக்க உள்ளிட்ட மாகாண மக்கள் பிரதிநிதிகளும் ஆளுநர் மைத்ரி குணரத்ன, சுகாதார அமைச்சின் செயலாளர் வசந்தா பெரேரா, சுகாதார பணிப்பாளர் நாயகம் விசேட மருத்துவ நிபுணர் அனில் ஜாசிங்க, நெதர்லாந்து அரசாங்கத்தின் விசேட பிரதிநிதிகள் மற்றும் நுவரெலியா பொது மருத்துவமனையின் பணிப்பாளர் மகேந்திர செனவிரத்ன உள்ளிட்ட பணிக்குழாமினர் இந்த நிகழ்வில் பங்குபற்றினர்.

Share This Post

NEW