ஜனாதிபதி பராளுமன்றத்திற்கு விஜயம்

ஜனாதிபதி பராளுமன்றத்திற்கு விஜயம்

பாதுகாப்பு அமைச்சு, மகாவலி அமைச்சு மற்றும் சுற்றாடல் அமைச்சு ஆகியவற்றின் செலவுத் தலைப்புகள் தொடர்பாக இன்று (04) பாராளுமன்றத்தில் விவாதம் மேற்கொள்ளப்பட்டதுடன், அதனை முன்னிட்டு பாராளுமன்றத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி அவர்கள் பல முக்கிய கருத்துக்களை முன்வைத்தார்.

இதன்போது கழிவு முகாமைத்துவத்திற்கான கொள்கை ரீதியான வேலைத்திட்டத்தின் தேவையை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், அந்த வேலைத்திட்டமானது அரசியல் கட்சி பேதமின்றி, அரசியல் கொள்கைக்குள் உள்ளடங்கியவாறு அந்த வேலைத்திட்டம் அமைய வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், விஞ்ஞான பொறிமுறைகளுக்கமைய தயாரிக்கப்படும் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்றபோது மக்களின் எதிர்ப்புகள் தோன்றுவதாகவும் இதன் காரணமாகவே கழிவு முகாமைத்துவத்திற்கான தீர்வுகளை வழங்குவதில் இன்னும் தாமதம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

கழிவுகளை அகற்றுவதற்கான சட்டபூர்வமான பொறுப்பு உள்ளூராட்சி சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், அந்த நிறுவனங்களின் வசம் போதியளவு வளங்கள் இல்லாமையும் பாரிய பிரச்சினையாக அமைந்திருப்பதாகவும் இந்த பிரதான இரு பிரச்சினைகளுக்கும் தேசிய ரீதியிலான துரித தீர்வுகளை வழங்குவதன் அவசியத்தையும் ஜனாதிபதி அவர்கள் தெளிவுபடுத்தினார்.

உமா ஓயா வேலைத்திட்டம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், அதன் 95 வீதமான நடவடிக்கைகள் தற்போது நிறைவு பெற்றிருப்பதாகவும் இந்த வருட இறுதிக்குள் அந்த வேலைத்திட்டம் முழுமையாக நிறைவு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

மகாவலி செயற்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் காணிகள் அரசியல் தேவைகளின் அடிப்படையில் பிரித்துக் கொடுக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு போலியானவை என்றும் அந்த வேலைத்திட்டத்தில் எந்தவிதமான ஊழல், மோசடி மற்றும் அரசியல் பாரபட்சங்கள் கையாளப்படவில்லை என்று ஜனாதிபதி அவர்கள் மேலும் தெரிவித்தார்.

மொரகஹகந்த நீர்த்தேக்கத் திட்டத்தின் காரணமாக காணிகளை இழந்தோருக்கு இதுவரையில் வழங்கப்படாதவாறு பாரியளவிலான நஷ்டஈடுகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களை மீள் குடியேற்றுவதற்கு பாரிய தொகை ஒதுக்கப்பட்டு சகல வசதிகளுடன் கூடிய கிராமங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சு தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், முப்படையை வலுவூட்டும் கொள்கையை பலவீனப்படுத்தும் வகையில் எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் நாட்டின் அபிவிருத்திப் பணிகளுக்காக முப்படையினர் பாரிய பங்களிப்பு வழங்கி வருவதாகவும் தெரிவித்தார்.

அரசியல் தலைவர்கள் எவ்வகையான விமர்சனங்களை முன்வைத்தாலும் வடக்கு, கிழக்கு மக்களும் முப்படையினரும் மிக நெருக்கமாக செயற்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

மக்கள் நேயமிக்க பொலிஸ் சேவையை ஸ்தாபித்து பொலிஸ் திணைக்களத்தின் அனைவருக்கும் திருப்தியான மனநிலையுடன் பணியாற்றுவதற்கான பின்புலத்தை தயாரிப்பதற்காக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஜனாதிபதி அவர்கள் கருத்துத் தெரிவித்ததுடன், போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் போதும் குற்றச்செயல் தடுப்பு சட்டங்களின் போதும் பொலிஸ் திணைக்களம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் பணியாற்றும் அதிகாரிகளின் அர்ப்பணிப்புகளையும் பாராட்டினார்.

Share This Post

NEW