போதைப்பொருளை முற்றாக ஒழிப்பதாக ஜனாதிபதி உறுதி

போதைப்பொருளை முற்றாக ஒழிப்பதாக ஜனாதிபதி உறுதி
  • கிரிபத்கொட மற்றும் பேலியகொட நகர அபிவிருத்தித் திட்டம் ஜனாதிபதியின் அவதானத்திற்கு….

 போதைப்பொருள் அற்ற நாடொன்றை எதிர்கால சந்ததியினருக்கு வழங்குவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் உறுதியளித்தார்.

பல்வேறு வழிகளில் போதைப்பொருளை நாட்டிற்குள் கொண்டு வருதல், விநியோகித்தலை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பயங்கரவாதத்திலிருந்து நாட்டை மீட்டெடுத்ததுபோல் போதைப்பொருளில் இருந்தும் நாட்டை மீட்டெடுப்பதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவில் பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் வெற்றியை உறுதிசெய்யும் வகையில் இன்று (22) கம்பஹா மாவட்டத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அவர்கள், கிரிபத்கொட பொது வணிக வளாகத்திற்கு முன்னால் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

வேட்பாளர் பிரசன்ன ரணவீர இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார். இம்மக்கள் சந்திப்பில் பங்குபற்றிய பேராசிரியர் சங்கைக்குரிய கும்புறுகமுவே வஜிர தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினர் ஜனாதிபதி அவர்களுக்கு ஆசி வழங்கினர்.

வெள்ளத்தினால் பாதிக்கப்படும் பேலியகொட பிரதேச மக்களுக்காக தொடர்மாடி வீட்டுத்திட்டம் மற்றும் பெத்தியாகொட உந்தி நிலையம் (Pumping Station) ஒன்றை நிர்மாணித்து தருமாறு மக்கள் முன்வைத்த வேண்டுகோளுக்கு ஜனாதிபதி அவர்கள் கவனம் செலுத்தினார். கிரிபத்கொட வைத்தியசாலையின் தற்போதைய நிலை மற்றும் காணிப் பிரச்சினை தொடர்பாகவும் பொதுமக்கள் ஜனாதிபதி அவர்களுக்கு தெளிவூட்டினர். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணையை நிறுத்த வேண்டாமென்றும் அவர்கள் ஜனாதிபதி அவர்களிடம் கேட்டுக்கொண்டனர்.

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, வேட்பாளர் சிசிர ஜயகொடி ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

முறையான பராமறிப்பின்மை காரணமாக சேதமடைந்துள்ள சியம்பலாபே சந்தி அருகில் உள்ள உடற்பயிற்சி நடைபாதை தொடர்பாகவும் கவனம் செலுத்தி, அதனை உடனடியாக புனர்நிர்மாணம் செய்து, தியத்த உயன செயற்திட்டத்திற்கு இணையான சுயதொழில் மத்திய நிலையமாக அபிவிருத்தி செய்யுமாறு மக்கள் ஜனாதிபதி அவர்களை கேட்டுக்கொண்டனர்.

பியகம, வடுவேகம மற்றும் கொட்டுன்ன குளங்களை மறுசீரமைப்பதன் மூலம் 400 ஏக்கருக்கும் அதிகமான வயல் நிலங்களை பயிர்ச் செய்கைக்கு பயன்படுத்தலாம் என்று வேட்பாளர் துலிப் விஜேசேகர பியகம சியம்பலாபே சந்தியில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட ஜனாதிபதி அவர்களிடம் பொதுமக்கள் தெரிவித்தனர். நீண்டகாலமாக போக்குவரத்து சபை பேருந்துகள் போதியளவில் பயணிக்காததன் காரணமாக மாலை நேரங்களில் தாம் முகங்கொடுத்துவரும் பிரச்சினைகள் தொடர்பாகவும் அவர்கள் ஜனாதிபதி அவர்களுக்கு தெளிவூட்டினர்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண, தலுபிட்டிய வீதி உப தபால் அலுவலகத்திற்கு முன்னால் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பிலும் ஜனாதிபதி அவர்கள் கலந்துகொண்டார். அங்கும் மக்கள் ஜனாதிபதி அவர்களுக்கு அமோக வரவேற்பளித்ததுடன், போதைப்பொருளை ஒழிப்பதற்காக முன்னெடுத்துவரும் வேலைத்திட்டங்களை பாராட்டினர்.

வேட்பாளர் ஷஹன் பிரதீப் கடவத்தை தனியார் பேருந்து நிலையத்தின் அருகில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பிலும் ஜனாதிபதி அவர்கள் பங்கேற்றார். மகர கடவத்தையில் விளையாட்டரங்கு ஒன்றை நிர்மாணித்து தருமாறும் சேதமடைந்துள்ள வீதிகளை புனர்நிர்மாணம் செய்து தருமாறும் கூடியிருந்த மக்கள் ஜனாதிபதி அவர்களை கேட்டுக்கொண்டனர்.

நிறைவு செய்வதற்கு காலம் எடுக்கக்கூடிய மக்கள் வேண்டுகோள்களை பின்னர் ஆய்வு செய்து அவசியமான நடவடிக்கை எடுக்கப்படும்.

 

Share This Post