நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்கும் எந்தவித செயற்பாட்டையும் மேற்கொள்ள மாட்டேன் – ஜனாதிபதி

நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்கும் எந்தவித செயற்பாட்டையும் மேற்கொள்ள மாட்டேன் – ஜனாதிபதி

நாட்டை வெகுவாக நேசிக்கும் தான், நாட்டினது தேசிய பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்கும் எந்தவித செயற்பாட்டையும் மேற்கொள்ள மாட்டேன் என ஜனாதிபதி வலியுறுத்தினார்.

பிரான்சில் வாழும் இலங்கையர்களுடன் நேற்று (29) இரவு இடம்பெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இதுபற்றி வலியுறுத்தினார்.

பிரான்சில் அமைந்துள்ள இலங்கை தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இச்சந்திப்பின்போது அந்நாட்டில் வசிக்கும் சிறிலங்கா சுதந்திரக்கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, ஜாதிக்க ஹெல உருமய ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர்.

சர்வதேச ரீதியாக இலங்கையின் நற்பெயருக்கு விளைவிக்கப்பட்டிருந்த பாதிப்பினை மிகவும் நல்ல நிலைமைக்கு கொண்டு வருவதற்கு தம்மால் முடிந்துள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், இன்று இலங்கை முழு உலகத்தினதும் நன்மதிப்பை பெற்றுள்ள ஒரு நாடாக மாற்றம் பெற்றுள்ளதென தெரிவித்தார்.

மோல்டா நாட்டில் இடம்பெற்ற பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டின்போது 12 மணித்தியால மிகக் குறுகிய காலத்திற்குள் உலகின் மிகப் பலம் வாய்ந்த தலைவர்களான பிரித்தானியப் பிரதமர் டேவிட் கெமரூன், அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டர்ன்புல், கனடா பிரதமர் ஜஸ்டின் திருடியு ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடாத்தியமையானது இதற்கு சிறந்த உதாரணம் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், இது இலங்கை ஜனாதிபதி ஒருவருக்கு அண்மைக்காலங்களில் கிடைக்கப்பெற்ற ஓர் அரிய சந்தர்ப்பமாகும் எனக் குறிப்பிட்டார்.

இந்நாடுகள் கடந்த காலங்களில் இலங்கை தொடர்பாக கொண்டிருந்த பாதகமான நிலைமைகளை எவராலும் இலகுவில் மறக்க முடியாதென ஜனாதிபதி அவர்கள் நினைவுகூர்ந்தார்.

புலம்பெயர் இலங்கையர்கள் அனைவரும் தமது தாய் நாட்டுக்காக மேற்கொள்ளும் சேவையினைப் பாராட்டிய ஜனாதிபதி அவர்கள், எதிர்காலத்தில் உலகின் பல்வேறு நாடுகளில் புலம்பெயர்ந்துள்ள இலங்கையர்களை சந்திப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.

ஜனவரி 08ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட புதிய மாற்றத்திற்காக அணிதிரண்ட தாம், மைத்ரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்றமை தொடர்பாக மகிழ்ச்சியடைவதாக குறிப்பிட்ட பிரான்சில் வாழும் இலங்கையர்கள், கடந்த சில மாதங்களாக ஜனாதிபதி அவர்கள் மேற்கொண்ட அரசியல் ரீதியான தீர்மானங்கள் காரணமாக அவர் மீது கொண்டிருந்த நம்பிக்கை மேலும் வலுவடைந்ததாகவும் தெரிவித்தனர்.

ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களினால் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு தமது பூரண ஒத்துழைப்பை வழங்குவதாகவும் அவர்கள் உறுதிபூண்டனர்.

Share This Post

NEW