புதிய ஜனாதிபதிக்கு உலகத் தலைவர்கள் வாழ்த்து.…..

புதிய ஜனாதிபதிக்கு உலகத் தலைவர்கள் வாழ்த்து.…..

ஜனாதிபதி தேர்தலில் அமோக வெற்றிபெற்று இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பிராந்திய நாடுகளின் தலைவர்கள் நேற்று (17) வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள இலங்கை ஜனாதிபதிக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டரில், “எமது இரண்டு நாடுகளுக்கும் மக்களுக்கும் இடையிலான நெருங்கிய சகோதரத்துவ உறவுகளை மேலும் பலப்படுத்துவதற்காகவும் எமது பிராந்தியத்தின் அமைதி, சுபீட்சம் பாதுகாப்புக்காகவும் உங்களுடன் நெருங்கி பணியாற்ற விரும்புகின்றேன்.” எனவும்

தேர்தல் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்திருப்பதையிட்டு இலங்கை மக்களுக்கு தனது  வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாகவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தெரிவித்துள்ளார்.

இந்த டுவிட்டர் செய்திக்கு பதில் அளித்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், “வாழ்த்துத் தெரித்தமைக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கும் இந்திய மக்களுக்கும் நான் நன்றி தெரிவிக்கின்றேன். எமது இரு நாடுகளும் வரலாற்று ரீதியாகவும் பொது நம்பிக்கையின் அடிப்படையிலும் பிண்ணிப் பிணைந்திருக்கின்ற எமது அதீத நட்புறவை மேலும் பலப்படுத்தவும் விரைவில் உங்களை நேரில் சந்திக்கவும் எதிர்பார்த்துள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.

பாக்கிஸ்தான் அரசாங்கம் மற்றும் அதன் தலைவர் சார்பாகவும் புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நீதியும் நேர்மையும் மிக்க அமைதியான தேர்தலை நடத்தியதையிட்டு இலங்கை அரசாங்கத்திற்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் பாக்கிஸ்தான் தனது பாராட்டை தெரிவித்திருப்பதுடன், இலங்கையின் புதிய ஜனாதிபதியுடனும் இரு நாடுகளுக்குமிடையிலும் இருந்து வரும் சகோதரத்துவ உறவுகளை மேலும் பலப்படுத்துவதற்காக இணைந்து பணியாற்றுவதற்கும் இந்த உறவுகளை புதிய எல்லைகளை நோக்கி எடுத்துச் செல்லவும் பாக்கிஸ்தான் அரசாங்கம் எதிர்பார்க்கின்றது என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாலைத்தீவின் ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சாலிஹும் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இலங்கையின் புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ”இலங்கையில் இடம்பெற்ற தேர்தலில் அமோக வெற்றிபெற்றிருக்கும் புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இலங்கைக்கும் மாலைத்தீவுக்குமிடையில் இருந்துவரும் நெருங்கிய தொடர்புகளை மேலும் பலப்படுத்துவதற்கு உங்களது புதிய நிர்வாகத்துடன் பணியாற்ற எதிர்பார்த்துள்ளேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மற்றும் மாலைத்தீவு நாடுகளுக்கான அமெரிக்க தூதுவர் அலைனா பீ டெப்லிட்சும் தனது டுவிட்டர் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்திருக்கின்றார்.

ஜனநாயக அடிப்படையில் தேர்தல் இடம்பெற்றமைக்காக இலங்கை மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள அவர், பலமான, இறைமையுள்ள இலங்கைக்கு உதவுவதில் நல்லாட்சி, பொருளாதார வளர்ச்சி, மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்க மேம்பாடு தொடர்பான விவகாரங்களில் புதிதாக தெரிவுசெய்யப்பட்டுள்ள ஜனாதிபதி ராஜபக்ஷவுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளதாக அதில் குறிப்பிட்டுள்ளார்.

Share This Post