ஜனாதிபதி அவர்களின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

Sorry, this entry is only available in தமிழ். For the sake of viewer convenience, the content is shown below in the alternative language. You may click the link to switch the active language.

எமது தேசத்தின் கலாசார தனித்துவத்தை எடுத்துக்காட்டும் மிகவும் சிறப்புவாய்ந்த தேசிய கலாசார விழாவான சிங்கள, தமிழ் புத்தாண்டு மலர்ந்துள்ள இவ்வேளையில், பிறந்திருக்கும் புத்தாண்டு இலங்கை வாழ்  அனைத்து மக்களுக்கும் மகிழ்ச்சியும் சுபீட்சமும் நிறைந்ததாக அமைய வேண்டும் என பிரார்த்திக்கின்றேன்.

சூரியன் மேஷத்தில் பிரவேசிப்பதுடன் மலரும் புத்தாண்டு மகிழ்ச்சிக்கும் மனநிறைவுக்கும் பரஸ்பர உறவுகளை வளர்த்துக்கொள்வதற்குமான தருணமாகும். எவ்வாறான போதும், எதிர்பாராதவிதமாக உலகெங்கிலும் பரவிவரும் நோய் வைரஸ் எமது நாட்டிலும் பரவிவருவதன் காரணமாக எமது முன்னோர்கள் காலத்திலும் கேட்டிராத அனர்த்தங்களுக்கு நாம் முகம்கொடுத்திருக்கின்றோம்.

எனவே சமூக இடைவெளியை பேணவேண்டியதன் அவசியத்தை சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியிருப்பதால் இம்முறை கூட்டாக பண்டிகையை கொண்டாடும் வாய்ப்புகளில்லை. நாட்டுக்கும் மக்களுக்கும் ஏற்படும் எந்தவொரு சவாலுக்கும் முகம்கொடுப்பதற்கு தன்னார்வமாக ஒன்றுபடும் எமது மக்கள் இந்த பண்டிகை காலத்திலும் சமூக இடைவெளியை பேணி வைரஸ் பரவுவதை தவிர்ப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவார்கள் என்று நான் உறுதியாக நம்புகின்றேன்.

இயற்கையின் அழகினால் வளம்பெறும் புத்தாண்டுப் பண்டிகை, மனிதன் இயற்கைக்கும் சுற்றுச்சூழலுக்கும் நன்றி தெரிவிக்கும் பண்டிகையாகும். இயற்கையுடன் ஒன்றித்து வாழ வேண்டிய தேவை மிகவும் உணரப்படும் ஒரு யுகத்திலேயே நாம் இப்போது இருக்கின்றோம்.

பன்னெடுங்காலமாக நாம் மிகுந்த கௌரவத்துடனும் அர்ப்பணிப்புடனும் மேற்கொண்டு வரும் புத்தாண்டு சம்பிரதாயங்களை, குறிப்பாக சுபவேளையில் வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து அடுப்பு மூட்டுதல், பால் பொங்கவைத்தல், உணவு பரிமாறுதல் மற்றும் சம்பிரதாயபூர்வமாக கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளுதல் போன்றவற்றை இம்முறை குடும்பத்தினருடன் மட்டும் சேர்ந்து மேற்கொள்வது பொருத்தமானதாகும்.

புத்தாண்டின் மகிழ்ச்சிக்கு உண்மையான சொந்தக்காரர்கள் எமது சிறு பிள்ளைகளே ஆவர். இம்முறை புத்தாண்டு பண்டிகை கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த போதும் பிள்ளைகள் புத்தாண்டு மகிழ்ச்சியை அனுபவிப்பதற்கான வாய்ப்பை நாம் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். எனவே நீங்கள் வீடுகளில் இருந்தவாறு புத்தாண்டு சம்பிரதாயங்களை மேற்கொண்டு பிள்ளைகளுக்கு புத்தாண்டின் மகிமையை உணர்ந்துகொள்ள வாய்ப்பளியுங்கள் என அன்புடன் உங்களுக்கு நினைவுபடுத்துகின்றேன்.  நாடும் மக்களும் முகம்கொடுத்துள்ள இந்த நோய்த்தொற்று பிரச்சினையை வெற்றிகொள்வதற்கு உறுதியுடன் கைகோர்த்திருப்பதை எமது புத்தாண்டு பிரார்த்தனைகளில் ஒன்றாக சேர்த்துக்கொள்வோம்.

 

உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்

Share This Post