தேசிய வர்த்தக கொள்கைக்கான முன்மொழிவு ஜனாதிபதியிடம் கையளிப்பு

தேசிய வர்த்தக கொள்கையொன்றுக்கான முன்மொழிவு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று (03) பிற்பகல் கொழும்பு -07 தொழில் வல்லுனர் சங்க மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.

சர்வதேச வர்த்தகத்திற்காக தேசிய வர்த்தக கொள்கையொன்றை வகுக்க வேண்டிய தேவை குறித்து நீண்டகாலமாக விவாதிக்கப்பட்டு வந்தது. அதற்காக தொழில் வல்லுனர்களின் தேசிய முன்னணியினால் மக்கள் ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டது. இவ் ஆணைக்குழுவிற்கு பல்வேறு தரப்பினரும் வழங்கிய கருத்துக்களின் சாராம்சம் இந்த முன்மொழிவில் உள்ளடக்கப்பட்டுள்ளது. தொழில் வல்லுனர்களின் தேசிய முன்னணியின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் அனுருத்த பாதெனிய அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளித்தார்.

சட்ட ரீதியாக சுதந்திரமடைந்து 72 வருடங்களுக்குப் பின்னர் கொள்கை வகுப்பின் மூலம் “உண்மையான சுதந்திரத்தை நோக்கி” என்ற கருப்பொருளின் கீழ் இடம்பெற்ற கண்காட்சியையும் ஜனாதிபதி அவர்கள் பார்வையிட்டார்.

இவ்வாறானதொரு கொள்கையொன்று இதுவரைக் காலமும் நடைமுறைப்படுத்தப்படாததன் காரணமாக அரசாங்கங்கள் மாற்றமடைகின்றபோது கொள்கைகளும் பல்வேறு மாற்றங்களுக்குட்பட்டு வருகின்றது. இது நாட்டின் ஸ்திரத்தன்மைக்கும் முன்னேற்றத்திற்கும் நல்லதல்ல என இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மற்றும் தொழில் வல்லுனர்களின் தேசிய முன்னணி உறுப்பினர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Share This Post