ஏற்றுமதித் துறையின் வல்லுனர்கள் ஜனாதிபதியிடமிருந்து விருதுகளைப் பெற்றனர்…

ஏற்றுமதித் துறையின் வல்லுனர்கள் ஜனாதிபதியிடமிருந்து விருதுகளைப் பெற்றனர்…

விமர்சனங்களை முன்வைத்தாலும் நாட்டின் எதிர்காலத்துக்காக சில  தீர்மானங்களை எடுக்க வேண்டி இருக்கும்

                                                                  ஜனாதிபதி தெரிவிப்பு.

 

உலகளாவிய பொருளாதாரச் சவால்களை வெற்றிகொண்டு நாட்டை முன்னேற்றுவதற்காக, எதிர்காலங்களில் பல்வேறு தீர்மானங்களை எடுக்க வேண்டி இருக்குமென்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். அவை விமர்சனங்களுக்கு உள்ளானாலும், எதிர்வரும் காலங்களில் அதன் பிரதிபலன்கள் நாட்டுக்கும் மக்களுக்கும் கிடைக்குமென்று ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

குறுகியகால சிக்கல்களை வெற்றிகொண்டதன் பின்னர் பொருளாதார நிவாரணங்களை வழங்க முடிவதோடு, நாட்டைப்பற்றி சிந்தித்து புரிந்துணர்வுடன் செயற்படுமாறு தாம் அனைவரிடமும் கேட்டுக்கொள்வதாகவும் ஜனாதிபதி அவர்கள் இங்கு குறிப்பிட்டார்.

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (26) பிற்பகல் நடைபெற்ற “ஜனாதிபதி ஏற்றுமதி விருது விழா”இல் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டார்.

1981ஆம் ஆண்டு ஏற்றுமதி அபிவிருத்தி சபையினால் “ஜனாதிபதி ஏற்றுமதி விருது விழா” ஆரம்பிக்கப்பட்டது. இதம்முறை 24ஆவது விருது விழா நடத்தப்பட்டது.

இலங்கையில் ஏற்றுமதியாளர்களுக்கு கிடைக்கக்கூடிய உயர் மற்றும் தனித்துவமான விருது இதுவாகும். ஏற்றுமதித் துறையின் வளர்ச்சிக்காக உயரிய பங்களிப்பை வழங்கிய ஏற்றுமதியாளர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகின்றது.

2019/20 மற்றும் 2020/21 நிதி ஆண்டுகளுக்குரிய இந்நாட்டின் 63 சிறந்த ஏற்றுமதி நிறுவனங்கள் இம்முறை விருதுகளைப் பெற்றுக்கொண்டன. விருதுகளைப் பெற்றுக்கொள்பவர்களைத் தெரிவு செய்தலானது, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் நடுவர் குழுவொன்றின் மூலம் இடம்பெற்றது.

கொவிட் 19 தொற்றுப் பரவல்  நிலைமையின் கீழ் ஏற்றுமதித் துறையில் தொடர்ச்சியாக செயற்படுவதற்கு ஏற்றுமதியாளர்கள் எடுத்த நடவடிக்கைகள் அர்ப்பணிப்பு மற்றும் பின்வாங்காத முயற்சிகளை ஜனாதிபதி அவர்கள் பாராட்டினார். உற்பத்தி பல்வகைப்படுத்தலுக்கான சிறந்த ஏற்றுமதியாளர், வளர்ந்துவரும் சந்தையில் செயற்றிறன்மிக்க ஏற்றுமதியாளர் மற்றும் இவ்வாண்டின் வளர்ந்துவரும் ஏற்றுமதியாளர் போன்ற பல புதிய விருதுகளும் இம்முறை ஜனாதிபதி “ஏற்றுமதி விருது விழா”இல் அறிமுகப்படுத்தியிருப்பது விசேட அம்சமாகும்.

உற்பத்திச் சேவை துறைக்கு வழங்கப்படும் விருதுக்காக “சிறந்த ஏற்றுமதியாளர் தெரிவு செய்யும்போது, ஏற்றுமதி வருமானத்துக்கு மேலதிகமாக பல அளவுகோல்கள் சேர்க்கப்பட்டிருந்தன. ஏற்றுமதிக்காக பெறுமதியை சேர்த்தல், தொழில் உருவாக்கம்,  சந்தைப் பல்வகைப்படுத்தல், ஏற்றுமதி வருமானத்தின் வளர்ச்சி போன்ற அளவுகோல்களும் உள்ளடக்கப்பட்டிருந்தன.

ஜனாதிபதி அவர்களினால் 24 விருதுகள் வழங்கப்பட்டன.

கடந்த வருடத்தில் இருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற ஒரு சில இறக்குமதி கட்டுப்பாடுகள் போன்ற கொள்கை ரீதியான தலையீடுகளின் அனுகூலங்களை இன்று இந்நாடு அனுபவிக்கின்றது. அதன்மூலம் புதிய உள்நாட்டு னக் கைத்தொழில் அபிவிருத்திக்கு வாய்ப்புகள் உருவாகி இருக்கின்றன. இந்த புதிய கைத்தொழில்களை போஷித்து, குறுகியகால இலாபம் ஈட்டுவதற்கு பதிலாக உலகளாவிய ரீதியில் போட்டியிடக்கூடிய தரமான உற்பத்திகளை உருவாக்குவதற்கு கைத்தொழிலாளர்கள் செயற்பட வேண்டும் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், அதற்காக இலங்கையில் தனித்துவமான திறன்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

பசுமை விவசாய உற்பத்தி மற்றும் பதப்படுத்தல் துறைகளுக்காக முதலீடுகளுக்கு சிறந்த சந்தர்ப்பங்கள் நிலவுவதோடு, இந்த உற்பத்திகளுக்கு புதிய ஏற்றுமதி சந்தை வாய்ப்புகளும் காணப்படுகின்றன. இலங்கையில் பெறுமதி சேர்க்கப்பட்ட பொருட்களை உலகளாவிய சந்தைக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் மேலும் பல்வேறு ஏற்றுமதி பொருளாதார பெறுமதி ஒன்றை நாட்டில் உருவாக்க முடியும் என்றும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

ஏற்றுமதித் துறையில் நிலவுகின்ற சிக்கல்களை உடனடியாக தீர்ப்பதாக உறுதியளித்த ஜனாதிபதி அவர்கள், ஏற்றுமதித் துறையின் இலக்குகளை அடைந்து கொள்வதற்காக அரசாங்கம் மற்றும் தனியார் துறையினர் கைகோர்த்து இணைந்துச் செயற்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

அடுத்த வருடத்திலிருந்து தெளிவான ஏற்றுமதி அபிவிருத்தித்திட்டம் ஒன்றின் கீழ் ஏற்றுமதித் துறையின் மேம்பாட்டுக்காக நடவடிக்கைகள் எடுப்பதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன இங்கு குறிப்பிட்டார்.

தற்காலத்தில் நிலவுகின்ற உலகளாவிய பொருளாதார சிக்கல்களின் முன்னே, பல்வேறு சவால்களுக்கு மத்தியில் ஏற்றுமதித் துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் எடுக்கும் முயற்சிகள் நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாப்பதற்கு பங்களிக்க கூடிய வகையில் இருப்பதையும் சுட்டிக்காட்டிய அமைச்சர், ஏற்றுமதியாளர்கள் அனைவருக்கும் தனது நன்றிகளை தெரிவித்துக்கொண்டார்.

அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள், அரச அதிகாரிகள், வர்த்தக மற்றும் ஏற்றுமதித் துறைசார்ந்த முதலீட்டாளர்கள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

(ஜனாதிபதி அவர்கள் விழாவில் ஆங்கில மொழியில் ஆற்றிய உரையின் தமிழ் மொழிபெயர்ப்பு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. )

ஜனாதிபதி ஏற்றுமதி விருது விழாவில் அதிமேதகு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள்
ஆற்றிய உரை – (26.11.2021)

இன்று மாலை உங்கள் முன் உரையாற்றக் கிடைத்ததையிட்டு நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

முதலாவதாக, கடந்த இரண்டு ஆண்டுகளில் சிறப்பான செயற்பாடுகளுக்காக இந்நிகழ்வில் பாராட்டுகளைப் பெறும் நிறுவனங்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவிக்கின்றேன்.

அதேபோன்று, எமது ஏற்றுமதிக் கைத்தொழிலின் மூலம் இலங்கையின் பொருளாதாரத்துக்குத் தொடர்ந்து சேவையாற்றியமைக்காக எனது பாராட்டுகளைத் தெரிவிக்கின்றேன்.

ஏற்றுமதிகள் இப்போது தொற்றுநோய்க்கு முந்தைய நிலைமைக்குத் திரும்பவும் மீண்டிருப்பது மட்டுமல்லாமல், உண்மையில் சாதனை உச்சத்தை எட்டியுள்ளன என்பதைக் குறிப்பிடுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

இந்த மாபெரும் சாதனைக்கு உறுதுணையாக இருந்த அனைவரையும் மனதாரப் பாராட்டுகிறேன்.

இன்றிரவு இலங்கையின் ஏற்றுமதிச் செயற்றிறனின் வெற்றியைக் கொண்டாடும் அதேவேளை, எமது தற்போதைய நிலைமையின் யதார்த்தத்தையும் நாம் எதிர்கொள்ள வேண்டும்.

நமது நாட்டின் வரலாற்றில் மிகவும் சவாலான தருணத்தில் தற்போது நாம் இருக்கிறோம். COVID-19 தொற்றுப் பரவல், இலங்கையில் பேரழிவுடன்கூடிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொற்றுநோய் காரணமாக பல உயிர்கள் இழக்கப்பட்டுள்ளதோடு, மேலும் பலர் பாதிக்கப்பட்டனர். அதன் பொருளாதார விளைவுகளும் கடுமையாக இருக்கின்றன.

2020இன் முதலாவது மற்றும் இரண்டாவது காலாண்டுகளில், முழு நாட்டையும் இரண்டரை மாதங்களுக்குத் தொடர்ச்சியாக முடக்கி வைப்பதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை.

பொதுச் சுகாதாரத்துக்கு அவசியமானாலும், இந்த முடக்கம் மற்றும் அதைத் தொடர்ந்து வந்த குறுகியகால முடக்கத்தால், தொற்றுநோயால் ஏற்பட்ட உலகளாவிய பொருளாதாரம் வீழ்ச்சியுற்றதோடு, நமது பொருளாதாரத்தின் அனைத்துத் துறைகளும் பாதிக்கப்பட்டன.

தினசரி ஊதியம் பெறுவோர், சுயதொழில் செய்பவர்கள், குடிசைக் கைத்தொழில் செய்பவர்கள், சிறிய மற்றும் நடுத்தரத் தொழில் செய்பவர்கள் என அனைவரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பல வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டன. தனிநபர்கள் பலர் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர், மேலும் பல குடும்பங்கள் வறுமை நிலைமைக்குத் தள்ளப்பட்டன.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்குப் பின்னர் ஏற்கெனவே பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த சுற்றுலாத் துறையானது முற்றாக வீழ்ச்சிகண்டுள்ளது.

இத்துறையானது, நாட்டின் மிகப்பெரிய முதலீடுகளின் ஒன்றாக மட்டுமல்லாமல், அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் எமது முக்கிய வழியொன்றாகவும் இருந்தது.

வெளிநாட்டில் பணிபுரியும் பல இலங்கையர்கள் தங்கள் வேலைகளை இழந்துள்ள நிலையில், அவர்கள் அனுப்பும் பணத்தின் மூலம் பெறப்படும் அந்நியச் செலாவணியையும் இழந்துள்ளோம்.

நாட்டை முடக்கும் தீர்மானங்கள் நீக்கப்பட்ட பின்னரும், வைரஸ் பரவுவதைத் தடுக்கத் தேவையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதன் மூலம் கருதப்படுவது, பொருளாதார உற்பத்தித்திறன் இன்னும் முழுமையாக இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை என்பதாகும்.

பணியாளர்கள் கொவிட் தொற்றுக்குள்ளாகி இருப்பதைக் கண்டறிந்ததன் பின்னர், முன்னணி உற்பத்தியாளர்களாக  உங்களில் பலருக்கு அவ்வப்போது தொழிற்சாலைகளின் செயற்பாடுகளை நிறுத்த வேண்டி ஏற்பட்டது.

பொதுச் சுகாதாரக் கண்ணோட்டத்தில் இந்த முன்னெச்சரிக்கைகள் அவசியம் என்றாலும், அவை நமது பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியன.

தொற்று நோய்களின் போது அரசாங்கச் செலவினங்கள் பெருமளவில் அதிகரிக்கப்பட வேண்டியிருந்தது என்பதையும் குறிப்பிட வேண்டும்.

நாடு முடக்கப்பட்டிருந்த காலம் முழுவதும், தினசரி ஊதியம் பெறுபவர்கள் மற்றும் வறிய மக்களுக்காக பணம் மற்றும் உலருணவுப் பொருட்களின் விநியோகம் போன்ற வழிமுறைகள் ஊடாக நிவாரணங்களை வழங்க வேண்டி ஏற்பட்டது.

சுற்றுலாத்துறை உள்ளிட்ட பல்வேறு கைத்தொழில்களுக்கான கடனுதவிகளை வழங்க வேண்டியிருந்தது.

கொவிட் பரிசோதனைகளைச் செய்தல், தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்குதல், மருத்துவப் பொருட்கள் மற்றும் சிகிச்சைச் செலவுகள் உள்ளிட்ட சுகாதாரச் செலவுகள் பெருமளவில் அதிகரித்ததோடு, தனிமைப்படுத்துவதற்கான செலவுகள் பெரும்பாலும் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டன.

16 வயதுக்கு மேற்பட்டவர்களில் 84 சதவீதமானவர்களுக்கு முழுமையாகத் தடுப்பூசி ஏற்றப்பட்டிருக்கும் எமது வெற்றிகரமான நடவடிக்கைகளுக்காகவும் குறிப்பிடத்தக்களவு செலவுகள் ஏற்பட்டன.

இந்தச் செலவுகள் அனைத்தும், தொற்றுநோயின் பொருளாதாரப் பாதிப்பின் விளைவாக ஏற்பட்ட வருவாய் இழப்புடன் சேர்ந்து, அரசாங்கத்தின் நிதி நிலையைக் கடுமையாகப் பாதித்துள்ளன.

குறிப்பாக, நமது அந்நியச் செலாவணி கையிருப்பு பாரியளவில் குறைந்துள்ளது.

தொற்றுநோய்க்கு முன்னரிலிருந்து எமது நாட்டில் இருந்த உயர் வெளிநாட்டுக் கடன் நிலைமையைக் கருத்திற்கொள்ளும் போது, இது முக்கியமாக கவனத்திற்கொள்ள வேண்டிய விடயமாகும்.

பல தசாப்தங்களாக, இலங்கையின் பொருளாதார வளர்ச்சியின் பலன்களைப் பொதுமக்களிடையே நியாயமான முறையில் விநியோகிக்கப்படுவதை உறுதிசெய்வதற்கு இதுவரை இருந்த அரசாங்கங்கள் முயற்சித்துள்ளன.

பரந்தளவில் மக்களுக்குப் பயனளிக்கக்கூடிய உட்கட்டமைப்பு வசதிகள், சேவைகள் மற்றும் சமூக நலன்புரித் திட்டங்களுக்காகத் தொடர்ந்தும் அதிகம் செலவிட வழிவகுத்தது.

ஒட்டுமொத்தமாக, இந்த முயற்சிகளின் விளைவாக இதேபோன்ற வருமான மட்டங்களில் ஏனைய நாடுகளை விட ஒப்பீட்டளவில் உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை இலங்கை வழங்கியுள்ளது.

எடுத்துக்காட்டாக, எங்கள் இலவசக் கல்வி மற்றும் இலவச சுகாதாரச் சேவைமுறை இந்தப் பிராந்தியத்தில் உயர் தரத்தை எடுத்துக் காட்டுகிறது.

அதிக செலவீனங்கள் காணப்பட்டாலும் வணிக நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும் பொருளாதார வளர்ச்சியை உயர்த்துவதற்கும் அரசாங்கங்களின் விருப்பத்துக்கேற்ப குறைந்த வரி விதிப்பு முறைகள் ஏற்படுத்தப்பட்டதோடு, இது தொடர்ச்சியான வரவு – செலவுத்திட்டப் பற்றாக்குறை உருவாகக் காரணமாகியது.

எனவே, பலதரப்பு நன்கொடையாளர்கள், பிற நாடுகள் மற்றும் சர்வதேச நிதிச் சந்தைகளில் திரட்டப்பட்ட கடன்கள் மூலம் நமது வளர்ச்சித் திட்டங்கள் பெரும்பாலும் நீடித்தன.

இதனால், நாடு இன்று கடனைத் திருப்பிச் செலுத்துவதில் மோசமான நிலைமைக்கு முகங்கொடுத்து வருகின்றது.

இலங்கை, 2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் 04 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டியுள்ளதோடு, முறையே 01 பில்லியன் டொலர்கள் மற்றும் 1.5 பில்லியன் டொலர்களை பிணைமுறி நிதிகளாக வழங்க வேண்டியுள்ளது.

கடந்த பல தசாப்தங்களில், சலுகை நிதிகள் மற்றும் வணிக கடன்களுக்கிடையிலான விகிதம் பாரியளவில் அதிகரித்துள்ளதோடு, 2022ஆம் ஆண்டில் வட்டிச் செலவில் மட்டும் கிட்டத்தட்ட 1.3 பில்லியன் டொலர்களை நாம் செலுத்த வேண்டும்.

இதன் காரணமாக தொற்றுப் பரவலின் வெளிப்படைத் தாக்கத்தின் பின்னர் செயற்படுத்துவதற்கு மிகக் குறைந்த நிதியே இலங்கைக்கு எஞ்சியுள்ளது.

இலங்கை எதிர்கொள்ளும் தற்போதைய நெருக்கடியானது, நீண்ட, சிக்கலான, வரலாற்றைக் கொண்டது.

தற்போதைய உலகப் பொருளாதார நிலை மற்றும் அதன் உடனடி வெளிப்பாடுகளின் மூலம் இந்நிலை குறிப்பிடத்தக்களவு மென்மேலும் வீழ்ச்சியடைந்து வருகின்றது.

தொற்றுப் பரவலானது, உலகின் பல பகுதிகளில் தொடர்ந்து தீவிரமாகப் பரவி வருகின்றது. சில ஐரோப்பிய நாடுகளில் பாரியளவில் நடக்கும் அதிக உயிரிழப்புகளைத் தடுக்க, எதிர்வரும் வாரங்களில் முடக்கங்களை விதிப்பதற்கு பரிசீலித்து வருகின்றது.

இது நமது சுற்றுலாத் துறையின் மீட்சியையும் நமது ஏற்றுமதிக்கான உலகளாவியக் கேள்வியையும் பாதிக்கலாம்.

உலகளாவிய விநியோகச் சங்கிலி வரையறைகளினாலும் இன்று அனைத்துக் கைத்தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

வேகமாக அதிகரித்துவரும் எரிசக்தி செலவுகள் மற்றும் சரக்கு போக்குவரத்துச் செலவுகள், உலகம் முழுவதும் உயர் விலைகள் மற்றும் பற்றாக்குறைகளை ஏற்படுத்தக் காரணமாய் உள்ளன.

உலகம் பூராகவும் பல பிராந்தியங்கள் ஏறக்குறைய மூன்று தசாப்தங்களில் மிக மோசமான பணவீக்க புள்ளிவிவரங்களை அனுபவித்து வருவதோடு, உலகளாவிய ரீதியில் விலைகள் இப்போது பாரியளவில் உயர்வடைந்துள்ளன.

இந்தத் தொடர்ச்சியான பிரச்சினைகளின் பொருளாதார விளைவுகள் எதிர்வரும் மாதங்களில் இலங்கையைத் தாக்கக்கூடும்.

இந்தச் சூழ்நிலையை நிர்வகிப்பதற்கும் நாட்டை அபிவிருத்தி நோக்கிக் கொண்டுசெல்வதற்கும், கொள்கை ரீதியான தலையீடுகள் தேவைப்படுவதோடு, குறிப்பாக குறுகிய காலத்தில் அவை பிரபல்யமற்றதாக இருக்கலாம்.

உங்களில் பலர் இந்த தலையீடுகளை விமர்சிப்பதை நான் அறிவேன். எங்களின் தற்போதைய சூழ்நிலையில் எங்களுக்கு வேறு வழியில்லை என்பதால், இந்த நடவடிக்கைகள் திணிக்கப்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

உடனடி நெருக்கடியைச் சமாளித்துவிட்டால், இந்தத் தலையீடுகளில் சிலவற்றைத் தணிக்க முடியும்.

எவ்வாறாயினும், கடந்த ஆண்டு முதல் நடைமுறையில் உள்ள சில இறக்குமதிகள் மீதான கட்டுப்பாடுகள் போன்ற பல கொள்கைத் தலையீடுகள், நன்மையான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன.

அதன் மூலம் புதிய உள்நாட்டு கைத்தொழில் அபிவிருத்திக்கான வாய்ப்புகள் உருவாக்கியுள்ளன.

இந்தப் புதிய தொழில்கள், அறிவார்ந்த முறையில் வளர்க்கப்படுவது அவசியம்.

தரத்தைக் குறைத்து, செயற்கைத் தட்டுப்பாடுகளை உருவாக்குவதன் மூலம் குறுகியகால இலாபம் ஈட்டுவதற்குப் பதிலாக, உலகளவில் போட்டியிடக்கூடிய தரமான தயாரிப்புகளை உருவாக்குவதற்கு இந்தப் புதிய கைத்தொழில் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இது, அனைவருக்கும் நன்மை பயக்கும்.

எமது பொருளாதாரத்துக்கு நடுத்தர மற்றும் நீண்டகால வளர்ச்சிக்கு சிறந்த வழியாக அமைவது, புதிய ஏற்றுமதிச் சந்தை வாய்ப்புகளை வெற்றிகொண்டு, புதிய ஏற்றுமதிப் பொருட்களை உருவாக்குவதாகும்.

இலங்கைக்கு அற்புதமான ஆற்றல் உள்ளது. இங்கு ஏராளமான இயற்கை வளங்கள் இருப்பதோடு, படித்த மற்றும் உற்பத்தித்திறன் கொண்ட தொழிற்படை ஒன்றும் இருக்கின்றது. நாம் பெரிதும் பயனடையக்கூடிய புவிசார் மூலோபாய அமைப்பு காணப்படுகின்றது. எமது ஏற்றுமதிப் பயிர்கள் குறிப்பாக தேயிலை, கறுவா, மிளகு மற்றும் பாக்கு  உலகில் சிறந்த தரத்தைக் கொண்ட பயிர்களாகக் கருதப்படுகிறது.

இதன்மூலம் கிடைக்கின்ற வாய்ப்புகளைப் பயன்படுத்தி, ஏற்றுமதிக்கு முன் இந்தப் பயிர்களுக்கு கூடுதல் பெறுமதியை சேர்க்க வேண்டும்.

எங்களிடம் பழங்கள் மற்றும் காய்கறிகளின் சிறந்த விளைச்சல் உள்ளது, அவற்றில் பெரும்பாலானவை, விநியோகிப்பதில் நிலவுகின்ற சிக்கல்களால் வீணடிக்கப்படுகின்றன.

வீணாகும் இந்த உற்பத்தியை இலங்கையில் பதப்படுத்தி உலக சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்தால், மேலும் அதிக பொருளாதார பெறுமதியை நாட்டில் உருவாக்க முடியும்.

இந்தப் பின்னணியில்தான் இலங்கையில் சுற்றாடல்நேய மற்றும் சுகாதார ரீதியான சேதன விவசாயத்தை ஊக்குவிக்கும் கொள்கையை இலங்கையில் காணமுடியம்.

உலகெங்கிலும் உள்ள நுகர்வோர், காலநிலை மாற்றத்தின் தாக்கங்களுக்கு அதிக உணர்திறன் கொண்டவர்களாக இருப்பதால், சேதனப் பசுமை விவசாயப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

தகுந்த சான்றிதழ் மற்றும் கண்டறியும் வழிமுறைகள் நடைமுறைக்கு வந்ததன் பின்னர், எமது விவசாயத் துறை, தற்போது கிடைப்பதைவிட உயர் மட்டத்தை அடைய முடியும்.

எனவே, சேதனப் பசளை, சேதன விவசாய உற்பத்தி மற்றும் பதப்படுத்துதல் ஆகியவற்றில் முதலீடு செய்வதற்கும், இந்த உற்பத்திக்கான புதிய ஏற்றுமதி சந்தைகளை வளர்ப்பதற்கும் குறிப்பிடத்தக்க வாய்ப்புகள் உள்ளன.

விவசாய உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்குள்ள திறனை மேம்படுத்துவதற்கு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது, நீண்டகாலத்துக்கு நமது பொருளாதாரத்துக்கு பயனைப் பெற்றுத் தரக்கூடிய சந்தர்ப்பமாகும்.

நமது தேசத்துக்கு நன்மையளிக்கும் அதேவேளை, உங்களுக்கு நீண்டகால பெறுமதியை உருவாக்கக்கூடிய இத்தகைய வாய்ப்புகளை ஆராயுமாறு நான் உங்களை ஊக்குவிக்கின்றேன்.

இலங்கையில் பல்வேறு கனிய வளங்கள் சார்ந்த அதுபோன்ற வாய்ப்புகள் காணப்படுகின்றன. இந்தக் கனிமங்களை மூலப்பொருட்களாக மிகவும் முன்னேற்றமான சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்வதை நாம் படிப்படியாக நிறுத்த வேண்டும்.

இதற்குப் பதிலாக, பெறுமதி சேர்க்கப்பட்ட கைத்தொழில்களை தேசிய ரீதியாக அபிவிருத்தி செய்வது பற்றியே நாம் கவனம் செலுத்த வேண்டும்.

இதில் வர்த்தகர்களுக்கும் ஒரு தெளிவான பங்கு இருக்கின்றது.

இந்த இடத்தில் முதலீடு செய்வதற்கு மேலதிகமாக, வர்த்தகங்களும் தொழில் முயற்சியாளர்களும் இலங்கையில் இந்த வளங்கள் சார்ந்த  கைத்தொழில்களை அபிவிருத்தி செய்வதற்குத் தேவையான தொழில்நுட்பத்தை பரிமாற்றக்கூடிய உலகளாவிய முன்னணி நிறுவனங்களுடன் கூட்டுறவை வளர்க்க வேண்டும்.

சேதன விவசாய உற்பத்திகளின் ஏற்றுமதி மற்றும் எமது கனிம வளங்களுக்கான பெறுமதி சேர்க்கப்பட்ட கைத்தொழில் அபிவிருத்திக்கு இலங்கையின் ஏற்றுமதித் துறையை விரிவாக்குவதற்கு சாத்தியங்கள் உள்ள பிரிவுகளைக் கொண்டது.

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஏற்றுமதி பல்வகைப்படுத்தல் பல தசாப்தங்களாக அவர்களின் மேம்பட்ட பொருளாதாரச் செயற்றிறனுக்கு பெரிதும் பங்களித்துள்ளது. இதை இலங்கை பின்பற்றாமல் இருப்பதற்கு எந்த காரணமும் இல்லை. இதற்கு அரசும் தனியார் துறையும் கைகோர்த்து செயற்பட வேண்டும்.

தனியார்த் துறையால் முன்மொழியப்பட்ட புதிய முயற்சிகளை ஆதரிப்பதன் மூலமும் வசதிகள் செய்வதன் மூலமும், மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த தொழில்களில் நேரடி வெளிநாட்டு முதலீட்டுக்கான கவர்ச்சிகரமான ஊக்குவிப்புகளை வழங்குவதன் மூலமும் அரசாங்கம் தனது பங்கை ஆற்றும்.

ஏற்றுமதி தொழில்களின் செயற்றிறனுக்கான மீதமுள்ள தடைகள் விரைவில் தீர்க்கப்படுவதையும் உறுதி செய்வோம்.

இலங்கைக் கைத்தொழில்கள் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று அதிக சக்திவலு செலவாகும். எவ்வளவு புதுப்பிக்கத்தக்க சக்திவலு மூலங்கள் பெற்றிருந்தாலும், இலங்கையின் சக்திவலு தேவையின் பெரும்பகுதி புதைபடிவ எரிபொருட்கள் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது என்பது வருத்தமளிக்கிறது.

இது மின் விநியோகச் செலவு வெகுவாக அதிகரிப்பது மட்டுமின்றி, சுற்றாடலுக்கு மிகவும் கேடு விளைவிக்கிறது.

அதனால்தான் 2030ஆம் ஆண்டளவில் இலங்கை தனது சக்திவலு தேவையில் 70 சதவீதத்தை, புதுப்பிக்கத்தக்க மூலங்களிலிருந்து உற்பத்தி செய்ய வேண்டும் என்று தெளிவான இலக்கை நிர்ணயித்துள்ளது.

அனைத்துத் தரப்பினர்களின் ஒருங்கிணைந்த முயற்சியின் மூலம் இந்த இலக்கை முன்னதாகவே அடைய முடியும். இதன் மூலம் இலங்கையின் கைத்தொழில்களுக்கு தூய மலிவான சக்திவலு பயன்பாட்டின் பிரதிபலனை அனுபவிக்க முடியும்.

வர்த்தகத்துக்கு மிகவும் சாதகமான சூழலை உருவாக்கத் தேவையான பிற திருத்தங்கள், நிபந்தனைகளை ஒழுங்குபடுத்துதல் மற்றும் கொள்கை நிலைத்தன்மையைப் பேணுதல் ஆகியவையும் முன்னோக்கிச் செல்லும்போது உயர் முன்னுரிமை பெறும் அம்சங்களாகும்.

இந்த நடவடிக்கைகள் நமது பொருளாதார மீட்சிக்கு துணைபுரியும் மற்றும் எதிர்காலத்தில் சுபீட்சத்துக்கான அடித்தளத்தை அமைக்கும்.

இருப்பினும், வெற்றிகரமான ஏற்றுமதியாளர்களாக, உங்கள் அனைவருக்கும் மிக முக்கியமான கடமை உள்ளது.

தற்போதுள்ள இலங்கை உற்பத்திகளுக்கு புதிய ஏற்றுமதி சந்தைகளை உருவாக்குவதற்கும், ஏற்றுமதி செய்வதற்கு புதிய இலங்கை தயாரிப்புகளை உருவாக்குவதற்கும் உங்கள் அனுபவம், திறன், நிதி மற்றும் உங்கள் விரிவான சர்வதேச வலையமைப்புகளை நீங்கள் பயன்படுத்த வேண்டும்.

அனைத்து இலங்கையர்களுக்கும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கு இது அவசியமாகும்.

எதிர்வரும் மாதங்கள் மற்றும் ஆண்டுகளில் நாம் இதை நோக்கி கடினமாகவும் புத்திசாலித்தனமாகவும் உழைக்க முயற்சித்தால், வெற்றிகரமான மற்றும் மிகவும் வளமான நாளைய அடித்தளத்தை உருவாக்க முடியும் என்று எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.

 

நன்றி.

 

Share This Post