சர்வதேச விசேட தேவையுடையோர் தினத்தை முன்னிட்டு  மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்கள் விடுத்துள்ள செய்தி

சர்வதேச விசேட தேவையுடையோர் தினத்தை முன்னிட்டு   மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்கள் விடுத்துள்ள செய்தி

விசேட தேவையுடையவர்களினால் நாட்டின் அபிவிருத்திக்கு பெற்றுக்கொடுக்கப்படும் பங்களிப்பினை மிகுந்த கௌரவத்துடனும் நன்றியுடனும் நினைவுகூர்ந்த வண்ணமே விசேட தேவையுடையவர்களுடனும் அவர்களது குடும்ப உறவினர்களுடனும் இணைந்து இவ்வருட சர்வதேச விசேட தேவையுடையோர் தினத்தை நாம் கொண்டாடுகின்றோம். 

“விசேட தேவையுடையோர்களின் பங்களிப்பு மற்றும் அவர்களது தலைமைத்துவத்தினை மேம்படுத்துவதற்கு 2030 அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலுக்கமைய செயற்படுதல்” 2019ஆம் ஆண்டின் சர்வதேச விசேட தேவையுடையோர் தினத்தின் தொனிப்பொருளாக ஐக்கிய நாடுகள் சபையினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 18ஆம் திகதி நான் இந்த நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்ற கணம் முதல், எமது நாட்டின் அனைத்து பிரஜைகளின் வாழ்க்கையும் சுபீட்சமடைய வேண்டும் என்பதே எனதும் எமது அரசாங்கத்தினதும் எதிர்பார்ப்பாகவுள்ளது. அந்த செயற்பாட்டில் “இந்த நாட்டில் வாழும் பலதரப்பட்ட விசேட தேவைகளை உடைய அனைத்து இலங்கையர்களும் பூரணமாக இணைத்துக்கொள்ளப்பட வேண்டும். இதன்போது அவர்களது விசேட தேவைகளை போன்றே ஆற்றல்களையும் இனங்கண்டு நாட்டின் ஏனைய சாதாரண மக்களை இலக்காகக்கொண்டு மேற்கொள்ளப்படும் அனைத்து நலன்பேணல் மற்றும் அபிவிருத்தி செயற்திட்டங்களிலும் விசேட தேவையுடையோரின் பங்களிப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டியதுடன், அவர்களது அந்த பங்களிப்பிற்கு தற்போதுள்ள பௌதீக மற்றும் கொள்கை ரீதியான தடைகள் நீக்கப்பட வேண்டுமென்பது எனது எண்ணமாகும். 

விசேட தேவையுடையவர்கள் எதிர்நோக்கும் சவால்களை வெற்றிகொள்வதற்கு தேவையான பாதுகாப்பையும் ஒத்துழைப்பையும் நாம் பெற்றுக்கொடுக்க வேண்டும். அனைவரது உரிமைகளும் பாதுகாக்கப்படும் ஒரு சமூகத்திலேயே அனைத்து மக்களும் நன்மைகளை பெற்றுக்கொள்வர் என்பது இங்கு வலியுறுத்தப்பட வேண்டிய முக்கிய விடயமாகும். எனவே எமது சமூகத்தில் விசேட தேவையுடையவர்களின் பூரண பங்களிப்பினை பெற்றுக்கொள்வதற்காக நாம் அனைவரும் எமக்கான செயற்பணிகளை நிறைவேற்ற வேண்டியுள்ளது என்பதை புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும். 

 

கோட்டாபய ராஜபக்ஷ

இலங்கை ஜனாதிபதி

2019 டிசம்பர் 02ஆம் திகதி

 

 

Share This Post