இலங்கைக்கு இந்திய அரசின் 400 மில்லியன் டொலர் இலகுக் கடன் உதவி

இலங்கைக்கு இந்திய அரசின் 400 மில்லியன் டொலர் இலகுக் கடன் உதவி

பயங்கரவாத ஒழிப்புக்காக மேலும் 50 மில்லியன் டொலர் இலகுக் கடன்

தடுத்து வைத்துள்ள அனைத்து இந்திய மீன்பிடி படகுகளையும் விடுவிக்க இணக்கம்

புதிய ஜனாதிபதியின் “சுபீட்சத்தின் நோக்கு” வேலைத்திட்டத்திற்கு இந்தியா பூரண ஒத்துழைப்பு வழங்குமென இந்திய பிரதமர் தெரிவிப்பு

வெற்றிகரமான குறிக்கோளுடன் இலங்கையின் புதிய ஜனாதிபதி தமது வேலைத்திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு தமது அரசாங்கம் பூரண ஒத்துழைப்பினை வழங்குமென இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

அதற்கமைய 400 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலகுக் கடன் உதவியாக விரைவில் இலங்கைக்கு பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென இந்தியப் பிரதமர் குறிப்பிட்டார்.

அத்துடன், பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக மேலும் 50 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலகுக் கடனுதவியாக வழங்கப்படுமெனவும் இந்தியப் பிரதமர் தெரிவித்தார்.

இன்று (29) நண்பகல் ஐதராபாத் மாளிகையில் இடம்பெற்ற இருநாட்டு அரச தலைவர்களுக்குமிடையிலான சந்திப்பின்போதே இந்திய பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

தமது அழைப்பினை ஏற்று இலங்கையின் புதிய ஜனாதிபதி தனது முதலாவது வெளிநாட்டு அரச முறைப் பயணமாக இந்தியாவிற்கு வருகைத் தந்தமையை அண்டைய நாடு என்ற வகையில் தமது நாட்டிற்கு கிடைக்கப்பெற்ற கௌரவமாக கருதுவதாக தெரிவித்த மோடி அவர்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் பெற்றுக்கொண்ட வெற்றி தொடர்பில் மகிழ்ச்சி தெரிவித்ததோடு, ஒட்டுமொத்த இந்திய மக்களின் சார்பாகவும் ஜனாதிபதி அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.

இரு நாடுகளுக்குமிடையே காணப்படும் நீண்டகால நட்புறவு, பொருளாதார, அரசியல் மற்றும் சமூக தொடர்புகளை முன்னோக்கி கொண்டு செல்வது தொடர்பில் அரச தலைவர்கள் இதன்போது கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

மேலும் இருநாடுகளினதும் பாதுகாப்பிற்கு முன்னுரிமையளித்து செயற்படுதல் தொடர்பிலும் அரச தலைவர்கள் நீண்ட கலந்துரையாடலில் ஈடுபட்டதோடு,  இரு நாடுகளும் பொருளாதார ரீதியில் நெருங்கிய ஒத்துழைப்புடன் செயற்படுவது தொடர்பாகவும் இருதரப்பு வர்த்தக அபிவிருத்தியின் தேவை குறித்தும் விசேட கவனம் செலுத்தினர்.

நீண்டகால பிரச்சினையாக காணப்படும் இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினைகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இலங்கையில் நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுமென நம்புவதாக தெரிவித்த பிரதமர் மோடி, வடக்கு, கிழக்கு உள்ளிட்ட அனைத்து மாகாணங்களின் அபிவிருத்தி குறித்தும் கவனம் செலுத்தினார்.

இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், இந்தியாவிற்கான அரச முறை விஜயத்தினை மேற்கொள்ளுமாறு தனக்கு வழங்கப்பட்ட அழைப்பிற்கு நன்றி தெரிவித்ததோடு, இந்திய பிரதமரையும் இலங்கைக்கு வருகைத் தருமாறு அழைப்பு விடுத்தார்.

மேலும் இந்தியாவுடன் நெருங்கிய பொருளாதார ஒத்துழைப்புடன் செயற்பட விரும்புவதாகவும் ஜனாதிபதி அவர்கள் இந்திய பிரதமரிடம் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலின் பின்னர் அரச தலைவர்கள் இருவரும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் வழங்கப்பட்ட விருந்துபசாரத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், ஐதராபாத் மாளிகையிலுள்ள விசேட அதிதிகளின் குறிப்பேட்டிலும் நினைவுக் குறிப்பொன்றினை பதிவு செய்தார்.

 

 

 

Share This Post