ஜனாதிபதியின் வேலைத்திட்டங்கள் தொடர்பில் மகாசங்கத்தினரும் மக்களும் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனர் – கொட்டபிடியே ராகுல தேரர் 

ஜனாதிபதியின் வேலைத்திட்டங்கள் தொடர்பில் மகாசங்கத்தினரும் மக்களும் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனர் – கொட்டபிடியே ராகுல தேரர் 

எமது தனித்துவத்திற்கும் இறைமைக்கும் முக்கியத்துவமளித்து அபிமானமிக்க நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக ஜனாதிபதி அவர்கள் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் மகாசங்கத்தினரும் மக்களும் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளதாக கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமகிரி மகாசங்க சபையின் தலைவரும் பாளி மற்றும் பௌத்த கல்வி பட்டப்பின்படிப்பு நிறுவனத்தின் பணிப்பாளரும் வாதுவ தல்பிடிய போதிராஜ மகா விகாரையின் விகாராதிபதியுமான பேராசிரியர் கொட்டபிடியே ராகுல தேரர் தெரிவித்தார்.

சவால்களுக்கு மத்தியில் பின்னடையாது முன்னோக்கி பயணித்து மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுமாறு வேண்டுகோள் விடுத்த தேரர், இதற்காக ஜனாதிபதி அவர்களுக்கு மும்மணிகளின் ஆசிவேண்டி பிரார்த்தனை செய்தார்.

இன்று (20) பிற்பகல் வாதுவ தல்பிடிய போதிராஜ விகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அவர்கள், பேராசிரியர் கொட்டபிடியே ராகுல தேரரை தரிசித்து, அவருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

பிரதேசத்தின் மகாசங்கத்தினர் இந்த நிகழ்விற்கு வருகை தந்திருந்ததுடன், அவர்கள் பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதி அவர்களுக்கு ஆசிர்வாதம் வழங்கினர்.

இதன்போது விசேட ஆசியுரையாற்றிய கொட்டபிடியே ராகுல நாயக்க தேரர், “தொழில் நிபுணத்துவமற்ற இளைஞர், யுவதிகளுக்கு அரச தொழில்வாய்ப்புகளை பெற்றுக்கொடுக்கும் ஜனாதிபதி அவர்களின் வேலைத்திட்டம் பாராட்டுக்குரியதாகும். வசதிபடைத்தவர்களை மேலும் போஷிப்பதனால் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது, சாதாரண பொதுமக்களை முன்னேற்றத்தின் பாதையில் இட்டுச் செல்வதன் ஊடாகவே நாட்டை வளர்ச்சியடையச் செய்யலாம்” என இதன்போது சுட்டிக்காட்டினார்.

கைவினை கைத்தொழில்கள் தொடர்பில் எமது மக்கள் மிகுந்த திறமையுடன் உள்ளனர். இத்துறைக்கு முக்கியத்துவமளித்து அவர்களை வலுப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்துமாறும் தேரர் அவர்கள் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டார்.

மேல் மாகாண பிரதான சங்க நாயக்கர் வண.கோணதுவே குணானந்த தேரர், பௌத்த மற்றும் பாளி பல்கலைக்கழகத்தின் கலாநிதி ஹோமாகம தம்மானந்த தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினரும் அமைச்சர்களான மஹிந்த சமரசிங்க, விதுர விக்ரமநாயக்க, ஜயந்த சமரவீர, பியால் நிஷாந்த உள்ளிட்டோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Share This Post