நாட்டுக்கும் மக்களுக்கும் ஆசி வேண்டி ருவன்வெளி சேயவில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் மத நிகழ்வுகள்…

நாட்டுக்கும் மக்களுக்கும் ஆசி வேண்டி ருவன்வெளி சேயவில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் மத நிகழ்வுகள்…
  • சம்பிரதாய அரசியலில் இருந்து விலகிச் செயற்படுகின்ற ஜனாதிபதி அவர்கள், அரசியல் ரீதியாக இகழ்ச்சியடையவில்லை…

–  அஸ்கிரி தரப்பின் அனுநாயக்கர் சங்கைக்குரிய வெண்டருவே உபாலி தேரர்.

  • நாட்டின் தலைவர்களைத் திட்டுவதன் மூலம் முகங்கொடுத்துள்ள சிக்கலான சூழ்நிலையிலிருந்து வெளிவர முடியாது…
  • மல்வத்து தரப்பின் அனுநாயக்கர் சங்கைக்குரிய திம்புல்கும்புரே விமலதம்ம தேரர்.
  • ஆட்சிக்காலத்தை சிக்கலின்றி கொண்டு செல்வதற்கு, ஜனாதிபதிக்கு அமரபுர மஹாசங்க சபையின் பூரணமான ஆசிர்வாதம் கிடைக்கும்…

    –   இலங்கை அமரபுர மஹா நிக்காயவின் மஹாநாயக்கர் சங்கைக்குரிய தொடம்பால சந்திரசிறி தேரர்.

  • பொறுமையுடன் செயற்பட்டு நாட்டை முன்னேற்றுவதற்கு ஜனாதிபதிக்கு ஒத்துழையுங்கள்…
  • இலங்கை ராமக்ஞ மஹா நிக்காயவின் மஹா நாயக்கர் சங்கைக்குரிய மக்குலேவே விமல தேரர்.

சம்பிரதாய அரசியலில் இருந்து விலகி, புதிய அரசியல் கலாசாரம் ஒன்றை நாட்டுக்கு அறிமுகப்படுத்திய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், அரசியல் ரீதியாக இகழ்ச்சி அடையாத ஒரு தலைவர் என்றும் அவரின் புதிய அரசியல் செயற்பாடுகளுக்கு நாட்டை நேசிக்க கூடிய அனைத்துப் பிரஜைகளினதும் ஒத்துழைப்பு கிடைக்க வேண்டுமென்றும்,  அஸ்கிரி தரப்பின் அனுநாயக்கர் சங்கைக்குரிய வெண்டருவே உபாலி தேரர் தெரிவித்தார்.

அன்பு, கருணை மற்றும் உறுதியைக் கொள்கையாகக் கொண்ட தற்போதைய ஜனாதிபதி அவர்கள் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், நாட்டுக்காக சிறப்பான வேலைத்திட்டங்களை நிறைவேற்றி வருவதாகவும் தேரர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் பதவிக்காலத்தின் ஈராண்டுப் பூர்த்தியை முன்னிட்டு, ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும், நாட்டுக்கும் மற்றும் மக்களுக்கும் ஆசிர்வாதம் வேண்டி, வரலாற்று சிறப்புமிக்க அநுராதபுரம் ருவன்வெளிசேய அருகில் நேற்று (19) பிற்பகல் இடம்பெற்ற ஆசிர்வாத பூஜையில் விசேட அனுசாசன உரை நிகழ்த்தும் போதே தேரர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ருவன்வெளி மஹா சேயவில் ஔடதம் மற்றும் வேதியியல் ஷத்துமதுர பூஜை செய்து, மத அனுஷ்டானங்களில் ஈடுபட்ட ஜனாதிபதி அவர்கள், ருவன்வெளி மஹா சேயவில் இடம்பெற்ற விசேட ஷீவர கப்ருக பூஜையிலும் ஈடுபட்டார்.

அதன்பின்னர் மஹா சங்கத்தினர் பிரித் பாராயணம் செய்து, ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்துக்கும் மற்றும் நாட்டுக்கும், மக்களுக்கும் ஆசிர்வாதம் அளித்தனர்.

பண்டைய காலம் போன்று கடந்த யுத்த வெற்றியின் போதும் மஹா சங்கத்தினர் அரச தலைமைக்கு உபதேசம் அனுசாசனை வழங்கியதாக குறிப்பிட்ட சங்கைக்குரிய வெண்டருவே உபாலி தேரர், தற்போதைய ஜனாதிபதி அவர்கள் மஹா சங்கத்தினரின் உபதேசம் அனுசாசனைகளைத் தொடர்ந்தும் கேட்கும் ஒரு தலைவராவார் என்றும் குறிப்பிட்டார்.

அனைவரும் ஒன்றிணைந்து பெற்ற வெற்றியை மாபெரும் வெற்றியாக மாற்றும் தருணம் இன்று உருவாகியுள்ளதாகச் சுட்டிக்காட்டிய தேரர் அவர்கள், ஒழுக்கநெறியுடைய சமூகம், பிரிவினைவாதம் மற்றும் இனவாதத்தை ஒழித்து, அனைவரும் சகவாழ்வுடன் வாழக்கூடிய நாட்டை கட்டியெழுப்புவதற்கு ஒருவரோடு ஒருவர் கைகோர்த்து ஒன்றிணைய வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

உற்பத்தி பொருளாதாரம் ஒன்றை நோக்கி பயணிப்பதற்கு ஜனாதிபதி அவர்கள் முன்னெடுத்து வருகின்ற வேலைத்திட்டங்களுக்கு அனைவரும் ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென்றும் நாட்டின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு புத்திஜீவிகள் மற்றும் அரச அதிகாரிகளை இணைத்துக் கொள்வதற்கு ஜனாதிபதி அவர்கள் காட்டும் ஆர்வத்தைப் பயன்படுத்தி, நாட்டுக்காக தன் பொறுப்பை நிறைவேற்றுவதற்கு அனைவரும் முன்னோக்கி வர வேண்டும் என்றும் தேரர் அவர்கள் குறிப்பிட்டார்.

ஆட்சியாளர்களை திட்டுவதன் மூலமோ சபிப்பதன் மூலமோ இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து வெளியே வர முடியாது என்றும், நாட்டின் எதிர்கால பயணத்துக்காக அனைவரதும் ஒத்துழைப்பு மற்றும் உண்மையான அர்ப்பணிப்பு அவசியம் என்றும் மல்வத்து தரப்பின் அனுநாயக்கர் சங்கைக்குரிய திம்புல்கும்புரே தேரர் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

ஊழல் மற்றும் இலஞ்சத்தை ஒழித்துக்கட்டி செயற்படும் ஜனாதிபதி அவர்களின் வேலைத்திட்டங்களுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். உற்பத்திப் பொருளாதாரத்துக்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்கியுள்ளது. இக்கட்டான நிலையிலும் கூட நாட்டைக் கட்டியெழுப்புவதை முதன்மையானதாகக் கருதி இறக்குமதியை கட்டுப்படுத்தியதை நோக்கி மிகவும் பொறுமையுடன் உற்று நோக்க வேண்டும். 50 வருடங்களாக ஆட்சியாளர்கள் பெற்ற வெளிநாட்டுக் கடன்கள் காரணமாக இன்று இந்நாடு பாரிய கடன் சுமையில் இருக்கின்றது. இந்த அனைத்து சவால்களையும் வெற்றி கொள்வதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பு அரசாங்கத்துக்கு அவசியமாகும் என்று தேரர் அவர்கள் சுட்டிக்காட்டினார். இதில், பொது மக்களைப் போன்று அரசு ஊழியர்களும் நேர்மையாக நடந்து கொள்வது மிகவும் முக்கியம். முதலீட்டாளர்கள் நாட்டுக்கு வருகை தரும் போது, அவர்களிடம் மேலதிக கொடுப்பனவுகளைக் கேட்டு அவ்வேலைத்திட்டத்தை இடைநிறுத்தும் சூழலை ஏற்படுத்தக் கூடாது என்று தேரர் மேலும் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி அவர்களின் பதவிக்காலம் மிகவும் சவால் மிக்க ஒரு காலமாகும் என்றும் அனைத்து சிக்கல்களையும் தீர்த்து முன்னோக்கிச் செல்வதற்கு அமரபுர மஹா சங்க சபையின் ஆசிர்வாதம் அவருக்கு கிடைக்கும் என்றும், இலங்கை அமரபுர மஹா சங்க சபையின் மஹா நாயக்கர் சங்கைக்குரிய தொடம்பகல சந்திரசிறி தேரர் விசேட அனுசாசன உரை நிகழ்த்திக் குறிப்பிட்டார்.

கொரோனா சவாலை வெற்றிகொண்டு மக்களின் வாழ்வை ஆரோக்கியமானதாக மாற்றுவதற்கு ஜனாதிபதி அவர்கள் உள்ளிட்ட அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற வேலைத்திட்டங்களுக்கு தேரர் ஆசிர்வாதம் வழங்கினார்.

பொறுமையுடன் செயற்பட்டு நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு ஜனாதிபதிக்கு அனைவரினதும் ஒத்துழைப்பும் கிடைக்க வேண்டுமென்று இலங்கை ராமக்ஞ மஹா நிக்காயவின் மஹா நாயக்கர் சங்கைக்குரிய மக்குலேவே விமல தேரர் குறிப்பிட்டார்.

வலகம்பா மன்னனின் ஆட்சிக்காலம் முதல் இந்நாடு பஞ்சம், வரட்சி நிலைகளுக்கு முகங்கொடுத்துள்ளது. அந்நிலைமைகளில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு மஹா சங்கத்தினர் எந்நேரமும் உபதேசமும் அனுசாசனையும் செய்தனர். இந்த வரலாற்றை அறிந்த தற்போதைய ஜனாதிபதி அவர்கள், இந்த இக்கட்டான சூழ்நிலையில் மஹா சங்கத்தினரின் உபதேசம், ஆலோசனைகளை எதிர்பார்ப்பது மகிழ்ச்சியான ஒரு விடயமாகும் என்று தேரர் மேலும் குறிப்பிட்டார்.

அனைத்து கட்சிகளும் நிற வேறுபாடுகளை பின்தள்ளி எமது நாடு, எமது தேசம் என்ற உணர்வுடன் நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவது அனைவரதும் பொறுப்பாகும் என்று தேரர் தெளிவுபடுத்தினார்.

மூன்று நிகாயக்களினதும் மஹாநாயக்க, அனுநாயக்க தேரர் உள்ளிட்ட மஹா சங்கத்தினர், ஆளுநர்கள், அமைச்சர்கள், முப்படையினர், பொலிஸ் மா அதிபர், ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க ஆகியோருடன் அரச அதிகாரிகள், தியவடன நிலமே நிலங்க தேல அவர்களுடன் பலரும் இந்த சந்தர்ப்பத்தில் இணைந்து கொண்டிருந்தனர்.

 

Share This Post