ஜப்பானிய அரசு பொலிஸ் திணைக்களத்திற்கு அன்பளிப்பாக வழங்கிய வாகனங்கள் ஜனாதிபதியிடம் கையளிப்பு …

ஜப்பானிய அரசு பொலிஸ் திணைக்களத்திற்கு அன்பளிப்பாக வழங்கிய வாகனங்கள் ஜனாதிபதியிடம் கையளிப்பு …

இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு ஜப்பான் அரசு நன்கொடையாக வழங்கிய 31 ஜீப் வண்டிகள், 04 பேருந்துகள் மற்றும் 10 வேன்கள் இன்று (16) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.

இந்த வாகனங்களை இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அகிர சுகியாமா கையளித்தார். ஜனாதிபதி அவர்கள் வாகனங்களைப் பார்வையிட்டதுடன், தூதுவருடன் சுமுகமாக கலந்துரையாடினார்.

இலங்கை பொலிஸார் மேற்கொள்ளும் விசாரணை நடவடிக்கைகளை எளிதாக்கும் வகையில் ஜப்பான் அரசு இந்த நன்கொடையை வழங்கியுள்ளது. ரூ.1250 மில்லியன் பெறுமதியான நன்கொடையின் முதல் கட்டமாக ரூ.775 மில்லியன் மதிப்புள்ள 45 வாகனங்கள் இன்று ஒப்படைக்கப்பட்டன.

இரண்டாவது கட்டமாக, மேலும் வாகனங்கள் மற்றும் அதிநவீன உபகரணங்கள் எதிர்காலத்தில் கிடைக்கும். இதில் 25 ஜீப் வண்டிகள், 150 மோட்டார் சைக்கிள்கள், 7 Search Gatesகள், 01 Total Search Machine இயந்திரம் மற்றும் 80 கையடக்க மெட்டல் டிடெக்டர்கள் அடங்கும்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் கலாநிதி சரத் வீரசேகர, அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ், பொலிஸ் மா அதிபர் சீ.டி. விக்ரமரத்ன மற்றும் சிரேஷ்ட பொலீஸ் அதிகாரிகள். ஜப்பான் கிரவுன் முகவர் நிறுவனத்தின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி ஜீ.டபிள்யு.யு துமிந்த சந்திரரத்ன ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Share This Post