புதிய சட்டங்களை நடைமுறைப்படுத்துவதுடன் பழைய சுற்றறிக்கைகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை மீளப்பெறுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்பு …

புதிய சட்டங்களை நடைமுறைப்படுத்துவதுடன் பழைய சுற்றறிக்கைகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட  வழக்குகளை மீளப்பெறுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்பு …
  • கிராமத்துடன் உரையாடலில்” அடையாளம் காணப்பட்ட சிக்கலற்ற 17,000 காணி உறுதிகளுக்கு ஜனாதிபதி கையெழுத்து….
  • கிராமப்புற பிரச்சினைகளை தீர்ப்பதில் மக்கள் பிரதிநிதிகள், அரச அதிகாரிகளுடனும் மக்களுடனும் இணைந்து பணியாற்ற வேண்டும் …
  • ஆங்கில ஆசிரியர் பற்றாக்குறை பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்டு நிவர்த்திக்கப்படும்…
  • ஏழு தசாப்த கால மக்கள் கனவுகளை நிறைவேற்றும் வகையில் கும்புக்கன் ஓயா திட்டம் ஆரம்பம் …

பாரம்பரியமாக விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் நிலங்களை விவசாயிகளுக்கு தொடர்ச்சியாக பயிரிட அனுமதிக்கும் புதிய சட்ட திட்டங்களை அமுல்படுத்துவதன் மூலம் பழைய சுற்றறிக்கைகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை மீளப் பெறுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

‘கிராமத்துடன் உரையாடல்’ நிகழ்ச்சியின் போது பொதுமக்களிடமிருந்து தொடர்ந்து வரும் கோரிக்கைகளை கவனத்திற் கொண்டு, மக்களின் நலனுக்காக புதிய சட்டங்களை வகுக்க நடவடிக்கை எடுக்குமாறு வனவிலங்கு, வன பாதுகாப்பு, சுற்றாடல் மற்றும் காணி உள்ளிட்ட அனைத்து திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஜனாதிபதி அவர்கள் அறிவுறுத்தியுள்ளார். தற்போதுள்ள சிக்கல்கள் தீர்க்கப்பட்டு புதிய சட்டங்கள் வகுக்கப்படுகின்றன. பல ஆண்டுகளாக அரச நிறுவனங்களுடன் வழக்குகளில் சம்பந்தப்பட்டு பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சிக்கல்கள் தீர்க்கப்பட்டு இறுதி செய்யப்பட்ட 17,000 காணி உறுதிகளில் தான் கையெழுத்திட்டிருப்பதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

இன்று (30) முற்பகல் மொனராகலை மாவட்டத்தில் தனமல்வில, அலுத்வெவ கிராம உத்தியோகத்தர் பிரிவில் குக்குல்கட்டுவ குளக்கரை வளாகத்தில் நடைபெற்ற எட்டாவது ‘கிராமத்துடன் உரையாடல்’ நிகழ்ச்சியில் பங்கேற்றபோதே ஜனாதிபதி அவர்கள் இதனை தெரிவித்தார்.

“கிராமத்துடன் உரையாடல்” திட்டம் 2020 செப்டம்பர் 25 அன்று பதுளை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டது. மாத்தளை, இரத்தினபுரி, அனுராதபுரம், அம்பாறை , பொலன்னறுவை மற்றும்  களுத்துறை மாவட்டங்களை உள்ளடக்கி கடந்த நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. இதுவரை சரியான கவனம் செலுத்தப்படாத நகரத்திற்கு வெளியே உள்ள தொலைதூர கிராமங்களைச் சேர்ந்த மக்களை சந்தித்து, அவர்களின் பிரச்சினைகளை விசாரித்து, அச்சந்தர்ப்பத்திலேயே அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு வந்து தீர்வுகளை வழங்குவதே ஜனாதிபதியின் நோக்கமாகும். தீர்ப்பதற்கு காலம் செல்லும் பிரச்சினைகள் பின்னர் நடவடிக்கை எடுக்கப்படுவதற்காக குறித்துக்கொள்ளப்படும். கிராம மக்களிடம் சென்று, அவர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து, அவர்களின் முன்மொழிவுகளில் இருந்து தீர்வுகளைக் காண்பதும் இந்த திட்டத்தின் நோக்கம்.

“கிராமத்துடன் உரையாடல்” நிகழ்ச்சியில் பங்கேற்க தனமல்விலவுக்குச் சென்ற ஜனாதிபதி அவர்கள், கொட்டவெஹர மங்கட மகா வித்யாலய வளாகத்தில் கூடியிருந்த பாடசாலை மாணவர்கள் மற்றும் கிராமவாசிகளுடன் கலந்துரையாடி அவர்களது பிரச்சினைகளை கேட்டறிந்தார்.

மாணவர்களின் வேண்டுகோளின் பேரில் கொட்டவெஹர மங்கட மகா வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்தின் அபிவிருத்தி பணிகளை நாளைய தினமே (31) ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி அவர்கள் இராணுவத்திற்கு பணிப்புரை விடுத்தார். கல்லூரியின் கேட்போர்கூடத்தை அமைப்பது குறித்தும் ஜனாதிபதி அவர்கள் கவனம் செலுத்தினார்.

மொனராகலை நகரத்திலிருந்து சுமார் 100 கி.மீ தொலைவில் உள்ள அலுத்வெவ கிராமம் எட்டாவது “கிராமத்துடன் உரையாடல்” நிகழ்ச்சித்திட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்டது. அலுத்வெவ கிராமம் கொட்டவெஹர மங்கட, வெல்லவாய, ஹம்பேகமுவ, வலவே கங்க மற்றும் கண்டியபிட வெவ ஆகிய கிராமங்களின் எல்லையில் உள்ளது. தலுக்கல, கொரட்டுவெவ, கிளிம்புண்ண, மில்லகல, தஹய்யாகல, நேபடபெலெஸ்ஸ மற்றும் பொகுனுதென்ன அலுத்வெவ கிராம சேவகர் பிரிவுக்கு உட்பட்டதாகும். 790 குடும்பங்களைக் கொண்ட அலுத்வெவ கிராமத்தின் மக்கள் தொகை 2794 ஆகும். உடவலவை தேசிய பூங்காவுக்கு அண்மித்த பிரதேசங்களை சேர்ந்த மக்கள் வேட்டை மற்றும் சேனைப் பயிர்ச்செய்கைக்காக இடம்பெயர்ந்ததால் 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அலுத்வெவ ஒரு குடியேற்றமாக மாறியது. நெல் மற்றும் சேனைப் பயிர்ச்செய்கை இக்கிராமத்தில் உள்ள பலரின் முக்கிய வாழ்வாதாரமாகும்.

கிராமப்புற பிரச்சினைகளை தீர்ப்பதில் மக்களின் கருத்துகளும் பரிந்துரைகளும் முன்னுரிமை பெறுகின்றன. அதற்காக மக்கள் பிரதிநிதிகள், அரச அதிகாரிகளுடனும் கிராமப்புற மக்களுடனும் இணைந்து கிராமத்தை நிர்வகிக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி அவர்கள் வலியுறுத்தினார்.

நாட்டின் பல பாடசாலைகளில் ஆங்கில ஆசிரியர்களின் பற்றாக்குறை இருப்பது தெரிய வந்துள்ளது. இதற்கு ஒரு தீர்வாக, குறித்த பாடசாலைகளுக்கு ஆங்கில ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி அவர்கள் கல்வி அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தினார்.

தனமல்வில வலயக் கல்வி அலுவலகத்தை நிர்மாணிப்பதற்கான நிதி ஏற்பாடுகளை வழங்குவதற்கான பொறுப்பு ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மிலிடம் ஒப்படைக்கப்பட்டது.

செவனகல, ஒக்கம்பிட்டிய, ஹம்பேகமுவ மற்றும் கொட்டவெஹர மங்கட பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக அபிவிருத்தி செய்வதற்கும், அலுத்வெவ மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு முறையான வசதிகளுடன் ஒரு கல்வி மையத்தை நிறுவவும் முடிவு செய்யப்பட்டது.

மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்யுமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அவர்கள் அறிவுறுத்தினார்.

மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் ஆசிரியர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கும் விளையாட்டு மைதானங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அவர்கள் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

அலுத்வெவ, கிளிம்புன்ன, கலுதொட்ட, கொட்டவெஹர மங்கட மற்றும் அலுத்வெவ வரையிலான வீதிகள் மற்றும் அப்பகுதியில் உள்ள சிறிய வீதிகள் மற்றும் விவசாய நிலங்களுக்கான வீதிகள் மற்றும் பாலங்களை அபிவிருத்தி செய்யவும் ஜனாதிபதி அவர்கள் உத்தரவிட்டார்.

அலுத்வெவ மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் குடிநீரின் தேவை மற்றும் அதை விரைவாக நிவர்த்தி செய்ய எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது. 1952 ஆம் ஆண்டில் முன்மொழியப்பட்ட ஆனால் இதுவரை செயற்படுத்தப்படாத கும்புக்கன் ஓயா திட்டத்திற்கான திட்டப் பணிகளை விரைவாக நிறைவுசெய்து, இந்த ஆண்டு பணிகளை ஆரம்பித்து துரித  அபிவிருத்தித் திட்டமாக நிறைவுசெய்யவும் நீர் வழங்கல் அமைச்சுக்கு ஜனாதிபதி அவர்கள் உத்தரவிட்டார்.

மக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக வெஹரகல வெவ திட்டம் மற்றும் செவனகலை சுத்திகரிப்பு நிலையத்தை முறையாக செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.

இப்பகுதியின் இயற்கை நீர் மூலங்களை சரியாக அடையாளம் கண்டு குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டிய அவசரத் தேவையை ஜனாதிபதி அவர்கள் வலியுறுத்தினார்.

ஆர்.ஓ சுத்திகரிப்பு ஆலை மற்றும் குழாய் நீர் மூலம் அலுத்வெவ உள்ளிட்ட பல கிராமங்களுக்கு குடிநீரை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

குக்குல்கட்டுவ குளம் உள்ளிட்ட 10 குளங்களை விவசாய நடவடிக்கைகளுக்காக புனரமைக்குமாறு மக்கள் முன்வைத்த கோரிக்கையை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி அவர்கள் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

கிராமவாசிகளின் வேண்டுகோளின் பேரில், ஹம்பேகமுவ மருத்துவமனையில் சிறுவர் மற்றும் மகப்பேற்று சிகிச்சை நிலையமொன்றை நிறுவ சுகாதாரச் செயலாளர் ஜனாதிபதி அவர்களுடன்இணக்கம் தெரிவித்தார். தனமல்வில மற்றும் மொனராகலை பகுதிகளை உள்ளடக்கி மாதத்திற்கு ஒரு முறையாவது ஒரு விசேட மனநல மருத்துவரின் மருத்துவ சேவையை பெற்றுக்கொடுக்க திட்டமிடப்பட வேண்டும் என்று ஜனாதிபதி அவர்கள் அறிவுறுத்தினார்.

ஹம்பேகமுவ பிரதேச மருத்துவமனை, மொனராகலை, தனமல்வில மற்றும் வெல்லவாய மருத்துவமனைகளில் நிலவும் மருத்துவர்கள் மற்றும் தாதியர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் கவனம் செலுத்தப்பட்டது.

சில ஆண்டுகளுக்கு முன்பு நிர்மாணிக்கப்பட்டு செயலற்றிருக்கும் மாவட்டத்தில் உள்ள அனைத்து யானை வேலிகளையும் புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டது. போதாகம குள பாதுகாக்கப்பட்ட வனத்தில் சட்டவிரோத கட்டுமானங்கள் குறித்து விரைவான கள ஆய்வொன்றை மேற்கொண்டு, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கவும், எந்தவொரு குள பாதுகாக்கப்பட்ட வன இருப்புக்களிலும் அங்கீகரிக்கப்படாத நிர்மாணப் பணிகளை அனுமதிக்க வேண்டாம் என்றும் ஜனாதிபதி அவர்கள் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

விவசாய நடவடிக்கைகளில் தரமற்ற களைக்கொல்லிகளைப் பயன்படுத்துவது குறித்து உடனடியாக ஆராயுமாறு ஜனாதிபதி அவர்கள் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதுடன், இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் வியாபாரிகளுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

ஸ்ரீலங்கா டெலிகொம், மொபிடெல் நிறுவனம் அலுத்வெவ கணிஷ்ட வித்தியாலயம் மற்றும் செவனகல மகாநாக கல்லூரிகளில் உள்ள ஸ்மார்ட் வகுப்பறைகளுக்கு அன்பளிப்பு செய்த கணினிகள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்கள் டயலொக் நிறுவனம் அன்பளிப்பு செய்த கணினிகள் மற்றும் தொலைக்காட்சிகளை ரத்தம்பலாகல கணிஷ்ட வித்தியாலயம், ஹம்பேகமுவை மகா வித்தியாலய அதிபர்களிடம் ஜனாதிபதி அவர்கள் கையளித்தார்.

 

குறைந்த வருமானம் பெறும் 100,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் தேசிய தொழிற் பயிற்சி அதிகார சபையில் பயிற்சி பெற்ற மூன்று பேருக்கு இதன் போது நியமனம் வழங்கப்பட்டது.

ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முசம்மில், இராஜாங்க அமைச்சர்கள் சஷிந்திர ராஜபக்ஷ, விஜித பேருகொட, பாராளுமன்ற உறுப்பினர்களான ஜகத் புஷ்பகுமாரா, குமாரசிறி ரத்நாயக்க, தயஷான் நவநந்தன, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமேதா ஜி. ஜயசேன, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க மற்றும் மக்கள் பிரதிநிதிகள், அமைச்சுக்களின் செயலாளர்கள், அரச நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பாதுகாப்புத்துறை முக்கியஸ்தர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

Share This Post