ஊடக அறிவித்தல்

ஊடக அறிவித்தல்

முறையான வர்த்தக மற்றும் போட்டித்தன்மைமிக்க நடைமுறைகளை பின்பற்றாமை

2019 டிசம்பர் 01ஆம் திகதி முதல் அமுலுக்குவரும் வகையில் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ள வரிச் சலுகைகள், குறிப்பாக சில்லறை, தொகை மற்றும் இறக்குமதி பொருட்கள் விற்பனையின் போது வெட் வரி குறைக்கப்பட்டதனால் கிடைக்கப்பெறும் நன்மைகள் நுகர்வோரை சென்றடைவதில்லை என பொதுமக்களிடமிருந்து தொடர்ச்சியாக ஜனாதிபதி செயலகத்திற்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதுடன் அவ்விடயம் தொடர்பில் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகின்றன.

வரிச் சலுகை கிடைக்கப்பெற்ற பொருட்களுள் கட்டிட நிர்மாணப் பொருட்கள், பீங்கான் உற்பத்திகள், சீமெந்து, அழகுசாதனப் பொருட்கள், ஆடைகள், பாடசாலை உபகரணங்கள் உள்ளிட்ட ஏனைய அன்றாட நுகர்வுப் பொருட்கள் பல உள்ளடக்கப்பட்டுள்ளன. மேலும் தொகை விற்பனையாளர்களால் சில்லறை வியாபாரிகளுக்கு இந்த நன்மைகள் வழங்கப்படுவதில்லை எனவும் முறையான வர்த்தக மற்றும் போட்டித்தன்மைமிக்க நடைமுறைகளுக்கு மதிப்பளிக்காது சில தொகை விற்பனையாளர்களும் உற்பத்தியாளர்களும் சந்தை நடவடிக்கைகளை தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதாகவும் சில்லறை வியாபாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், போட்டித்தன்மைமிக்க வர்த்தகத்தில் வரிச் சலுகைகளை மக்களுக்கு பெற்றுக்கொடுக்குமாறும் கோரியுள்ளனர்.

இந்த நிலைமையை முறையாக கண்காணிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் நுகர்வோர் அதிகார சபைக்கும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கும் பணிப்புரை விடுத்துள்ளார். மேலும் வரிச் சலுகையின் நன்மைகளை நுகர்வோருக்கும் பொதுமக்களுக்கும் பெற்றுக்கொடுப்பதனை உறுதிப்படுத்துமாறு இறக்குமதியாளர்கள், தொகை மற்றும் சில்லறை வியாபாரிகள் உள்ளிட்ட வர்த்தக சமூகத்தினருக்கு வலியுறுத்தியுள்ளார். அனைத்து மக்களினதும் நலன்கருதி போட்டித்தன்மைமிக்க வர்த்தக நடைமுறைக்கு மதிப்பளித்து செயற்படுமாறும் ஊடகக் கலந்துரையாடல்கள் அல்லது வேறு தொடர்பாடல் முறைகளினூடாக மக்களுக்கு அதனைத் தெளிவுபடுத்துமாறும் வர்த்தக சமூகத்தினருக்கு தெரிவித்துள்ளார்.

போட்டித்தன்மையற்ற சந்தை முறைகளுக்கு இடமளிக்காமையை உறுதிப்படுத்துவதற்கான அனைத்து கொள்கை ரீதியான தீர்மானங்களையும் அரசாங்கம் மேற்கொள்ளும். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு குறிப்பாக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு பாரிய அளவிலான இறக்குமதியாளர்கள், உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் பாரிய அளவிலான விநியோகஸ்தர்கள் மீது தங்கியிருக்கும் சில்லறை வியாபாரிகள் தொடர்பில் முறையான கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

Share This Post