நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்லும் ஜனாதிபதியின் முயற்சிக்கு மகாசங்கத்தினரின் ஆசிர்வாதம்

நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்லும் ஜனாதிபதியின் முயற்சிக்கு மகாசங்கத்தினரின் ஆசிர்வாதம்

தவறான பாதையில் பயணித்துக்கொண்டிருந்த நாட்டினை சரியான திசையில் பயணிக்க செய்து, சுபீட்சமிக்க, வளர்ச்சியடைந்த நாடாக இலங்கையை கட்டியெழுப்புவதற்கான ஜனாதிபதியின் முயற்சிக்கு ஒட்டுமொத்த மகாசங்கத்தினரின் ஆசிர்வாதமும் அனுசரணையும் கிடைத்துள்ளதாக வண.எல்லே குணவங்ச தேரர் தெரிவித்தார்.

இன்று (20) பிற்பகல் கொழும்பு தர்மாயதன விகாரைக்கு சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், வண.எல்லே குணவங்ச தேரரை தரிசித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டபோதே தேரர் அவர்கள் இதனைத் தெரிவித்தார்.

“நாட்டை முன்னேற்றுவதற்கான ஜனாதிபதி அவர்களின் வேலைத்திட்டத்திற்கு அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்பு கிடைக்கப்பெற வேண்டும். அத்துடன் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான திறமையான நபர்களும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் எனவும் தேரர் அவர்கள் நினைவூட்டினார்.

பொதுமக்களையும் உள்வாங்கிய புலனாய்வுத்துறையொன்று எதிர்காலத்தில் நாட்டில் உருவாக்கப்பட்டு ஊழல், மோசடி, வீண்விரயம் மற்றும் குறைபாடுகள் அவர்களால் இனங்காணப்பட்டு குறித்த தகவல்களை ஜனாதிபதி அவர்களுக்கு தெரிவிக்கும் பொறிமுறையொன்றினை உருவாக்குமாறு வண.எல்லே குணவங்ச தேரர் குறிப்பிட்டார்.

ராமஞ்ஞ மகா நிக்காயவின் அனுநாயக்கர் வண. மாத்தளை தம்மகுசல தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினரும் அமைச்சர்களான தினேஸ் குணவர்தன, சுசில் பிரேமஜயந்த உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் விகாரையின் நன்கொடையாளர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

அதனைத் தொடர்ந்து பம்பலப்பிட்டி ஸ்ரீ வஜிராராம விகாரைக்குச் சென்ற ஜனாதிபதி அவர்கள், அமரபுர தர்மரக்ஷித நிக்காயவின் மகாநாயக்கர் கலாநிதி வண. திருக்குணாமலயே ஆனந்த தேரரை தரிசித்ததுடன், தேரர் அவர்கள், ஜனாதிபதி அவர்களுக்கு ஆசிர்வாதம் வழங்கி விசேட ஆசியுரை ஆற்றினார்.

தர்மநெறியை பின்பற்றும் சமூகமொன்றினை தாய்நாட்டில் உருவாக்குவதற்கான பலமும் தைரியமும்  ஜனாதிபதி அவர்களுக்கு கிடைக்க வேண்டுமென பிரார்த்தித்த தேரர் அவர்கள், அத்தகையதொரு சமூகத்தை நாட்டில் கட்டியெழுப்புவதற்கான ஆற்றல்மிக்க ஒரேயொரு தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் மாத்திரமே எனக் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி அவர்களின் பதவிக்காலத்திற்குள் அதனை நிறைவேற்றவில்லையாயின் அத்தகையதொரு மகத்தான பணியினை நிறைவேற்றுவதற்கு வேறு ஒரு தலைவர் நாட்டில் உருவாகப்போவதில்லை என தேரர் அவர்கள் தெரிவித்தார்.

கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டமை நாட்டிற்கு கிடைத்த வரமாகும் எனக் குறிப்பிட்ட தேரர் அவர்கள், கடந்த ஒரு மாத காலத்திற்குள் அவருக்கு பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ள நன்மதிப்பு பாராட்டுக்குரியதாகும் எனத் தெரிவித்தார்.

நாட்டை புதியதொரு பாதையில் பயணிக்கச் செய்து சட்டத்திற்கு மதிப்பளிக்கும், நியாயமான தர்மநெறிகளை பின்பற்றும் சமூகமொன்றைக் கட்டியெழுப்புவதற்கான ஜனாதிபதியின் அர்ப்பணிப்பினை பாராட்டிய தேரர் அவர்கள், நாட்டின் தலைமைத்துவத்திடமிருந்து கிடைக்கும் அந்த வழிகாட்டுதல்களுக்கு அனைத்து அமைச்சர்களினதும் பாராளுமன்ற உறுப்பினர்களினதும் ஒத்துழைப்பு குறைவின்றி கிடைக்க வேண்டுமெனக் குறிப்பிட்டார்.

“பொதுமக்களின் ஆன்மீக வளர்ச்சிக்கு வழிவகுக்காது எதிர்பார்க்கும் வெற்றிகளை சமூகத்தில் பெற்றுக்கொள்ள முடி யாது” அத்தகைய நன்நடத்தையுள்ள தார்மீக சமூகத்தை உருவாக்குவதற்கான முன்மொழிவுகளையும் வண.திருக்குணாமலயே ஆனந்த நாயக்க தேரர் ஜனாதிபதி அவர்களிடம் கையளித்தார்.

Share This Post