உலக வங்கி – இலங்கை ஒத்துழைப்புக்கான புதிய துறைகள் இனங்காணப்பட்டுள்ளன

உலக வங்கி – இலங்கை ஒத்துழைப்புக்கான புதிய துறைகள் இனங்காணப்பட்டுள்ளன

உலக வங்கியும் இலங்கையும் உலக வங்கியின் நிதியுதவியிலான தற்போதுள்ள திட்டங்களுக்கு மேலதிகமாக அபிவிருத்தி ஒத்துழைப்புக்கான பல புதிய துறைகளை இனங்கண்டுள்ளன. புதுப்பிக்கத்தக்க சக்திவலு, குப்பைகளை அகற்றுதல், நீர்நிலை முகாமைத்துவம், ஏற்றுமதிக்கான பெருந்தோட்டப் பயிர், போக்குவரத்து நெரிசலை எளிதாக்குதல் மற்றும் பாதசாரிகள் மற்றும் வீதிப் பாதுகாப்பு ஆகியவையே அவைகளாகும்.

இன்று (31) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை தெற்காசியாவிற்கான உலக வங்கியின் பிரதித் தலைவர் ஹார்ட்விக் ஷாபர் சந்தித்தபோது இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இந்த உடன்பாடு எட்டப்பட்டது. இந்த துறைகளில் செயற்படுத்தப்படவுள்ள திட்டங்களுக்கு சலுகை அடிப்படையில் நிதி வழங்க முடியும் என்று திரு. ஷாபர் தெரிவித்தார்.

தான் பாதுகாப்புச் செயலாளராக இருந்தபோது உலக வங்கியின் நிதியுதவியில் நிறைவு செய்யப்பட்ட வீதி அபிவிருத்தி மற்றும் நகர அழகுபடுத்தல் போன்ற திட்டங்கள் குறித்து நினைவுகூர்ந்த ஜனாதிபதி அவர்கள், உலக வங்கியிடமிருந்து கிடைக்கும் மேலதிக உதவிகளை வரவேற்றார். பெருந்தோட்டத் துறை அபிவிருத்தி பற்றி குறிப்பிடுகையில், மிளகு, கறுவா போன்ற சிறு பயிர்கள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி அவர்கள் வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்த உலக வங்கி பிரதித் தலைவர் “இந்த பயிர்கள் வேலைவாய்ப்பு மற்றும் ஏற்றுமதி வருமானத்தை பொறுத்தவரை பெரும் வாய்ப்புகளை வழங்குகின்றன”. என்று தெரிவித்தார்.

“தற்போது உலக வங்கியினால் நிதியளிக்கப்பட்ட 18 திட்டங்கள் உள்ளன. அவற்றில் சில நல்ல முன்னேற்றத்தை கண்டு வருகின்றன. போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட கண்டி வீதித் திட்டத்தை உலக வங்கி முன்னெடுக்கும்” என்றும் திரு. ஷாபர் குறிப்பிட்டார்.

இத்தகைய நடவடிக்கைகளில் நவீன தொழிநுட்பத்தைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், குறிப்பிட்ட திட்டங்கள் தொடர்பாக தீர்மானிக்க மேலதிக கலந்துரையாடல்களை நடத்த விருப்பம் தெரிவித்தார்.

உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் (Ms. Idah Z. Pswarayi-Riddihough) மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பீ.பி.ஜயசுந்தர ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

Share This Post