சேவை பரப்பை சரியாக விளங்கிக் கொண்டால், தபால் சேவைக்கு தேசிய பொருளாதாரத்தின் முக்கிய பங்குதாரராக ஆக முடியும்.  –   ஜனாதிபதி தெரிவிப்பு.

சேவை பரப்பை சரியாக விளங்கிக் கொண்டால், தபால் சேவைக்கு தேசிய பொருளாதாரத்தின் முக்கிய பங்குதாரராக ஆக முடியும்.  –   ஜனாதிபதி தெரிவிப்பு.
  • ஊடகவியலாளர்களுக்கு தொழிற் பயிற்சி நிலையம்…
  • பத்திரிகை பேரவை சட்டத் திருத்தம்…

சர்வதேச தபால் சேவை பற்றி கவனம் செலுத்தி வழங்க முடியுமான விரிவான சேவை வாய்ப்புகளை அறிந்துகொண்டால், இலங்கை தபால் சேவைக்கும் தேசிய பொருளாதாரத்தின் முக்கிய பங்குதாரராக விளங்க முடியுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

இலங்கை தபால் சேவைக்கு சொந்தமாக உள்ள பெருமளவு வளங்களை உரிய முறையில் முகாமைத்துவம் செய்வதன் மூலம் இலக்குகளை இலகுவாக அடைந்துகொள்ள முடியுமென்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

தபால் சேவைகள் மற்றும் வெகுசன ஊடகவியலாளர்கள் தொழில் அபிவிருத்தி உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக நேற்று (29) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டார்.

வருடாந்தம் தபால் திணைக்களம் 8 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமாக வருமானத்தை ஈட்டுகின்றது. செலவுகள் 14 பில்லியன் ரூபாவாகும். சம்பளம் மற்றும் மேலதிக கொடுப்பனவுகள் உள்ளிட்ட ஏனைய செலவுகள் காரணமாக வருடாந்தம் 6 பில்லியன் ரூபா நட்டம் ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. புதிய சேவைகளை இனங்கண்டு உயர் தொழிநுட்ப முறைமைகளை பயன்படுத்தி தபால் சேவையை இலாபமீட்டும் நிலைக்கு கொண்டு வருவதற்கு உள்ள வாய்ப்புகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.

நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பழைய தபால் அலுவலக கட்டிடங்களை சுற்றுலாத்துறை அமைச்சின் உதவியுடன் சுற்றுலா துறையினரை கவரக்கூடிய வகையிலான இடங்களாக மாற்ற முடியும். கொழும்பு கோட்டையில் உள்ள பழைய மத்திய தபால் கட்டிடத்தின் தொன்மை அம்சங்களை பாதுகாத்து நவீனமயப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டது.

கொவிட் நோய்த் தொற்று காரணமாக நாடு முடக்கப்பட்டிருந்த காலப் பகுதியில் வைத்தியசாலைகள் மற்றும் மருந்து நிலையங்களின் மூலம் மருந்து பொருட்களை வீடுகளுக்கே விநியோகிப்பதற்கு தபால் திணைக்களம் மேற்கொண்ட சேவையை பொருளாதார புத்தெழுச்சிக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பெசில் ராஜபக்ஷ அவர்கள் பாராட்டினார்.

Speed Post சேவையை மேலும் விரைவுபடுத்துவதன் மூலம் பெருமளவு சேவைப் பெருநர்களின் கவனத்தை ஈர்க்க முடியுமென்று பெசில் ராஜபக்ஷ அவர்கள் குறிப்பிட்டார்.

இரத்தினக்கல் ஏற்றுமதியின்போது பொருட்களை விநியோகிக்கும் தனியார்துறை நிறுவனங்களின் சேவைகளை வர்த்தகர்கள் அதிக விலைக்கு பெற்றுக்கொள்கின்றனர். இலங்கை தபால் சேவைவசமுள்ள வீட்டுக்கு வீடு சென்று வழங்கும் முறைமை (Door to Door Delivery System) இருக்குமானால் அதன் மூலம் அதிக வருமானத்தை ஈட்டக்கூடிய வாய்ப்பு உள்ளதென்று பெசில் ராஜபக்ஷ அவர்கள் குறிப்பிட்டார்.

ஊடகவியலாளர்களின் தொழிற் திறன்களை மேம்படுத்துவதற்கு பயிற்சி நிறுவனம் ஒன்றை தாபிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அச்சு, இலத்திரனியல் மற்றும் சமூக ஊடகங்களினால் நபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் வர்த்தக துறைகளுக்கும் ஏற்படும் முறையற்ற அழுத்தங்கள் மற்றும் தவறான அபிப்பிராயங்கள் குறித்த முறைப்பாடுகள் அதிகரித்திருப்பதாக அறியக் கிடைத்துள்ளது. அனைத்து விடயங்களையும் கருத்திற்கொண்டு பத்திரிகை பேரவை சட்டத்தை திருத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

ஒலிச் சேர்க்கை செய்யப்பட்ட வெளிநாட்டு தொலைக்காட்சி நாடகங்களை ஒளிபரப்பும்போது அறவிடப்படும் வரி அலைவரிசைகளின் கோரிக்கையின் பேரில் கொவிட் நோய்த் தொற்று காலப் பகுதியில் நீக்கப்பட்டது. அதனை மீண்டும் செயற்படுத்த தீர்மானிக்கப்பட்டது.

தொலைக்காட்சி அலைவரிசைகளின் இரசிகர்களின் பதிற்குறிக்கு ஏற்ப தரப்படுத்தல் களனி பல்கலைக்கழகத்தின் பங்குபற்றுதலுடன், முழு நாட்டையும் உள்ளடக்கிய வகையில் பக்கசார்பற்ற முறையில் மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதற்குத் தேவையான ஏற்பாடுகளை ஒதுக்கி விரைவாக அதனை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து ம் இணக்கம் காணப்பட்டது.

அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன், ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர, அமைச்சுக்கள் மற்றும் இராஜாங்க அமைச்சுக்களின் செயலாளர்கள், துறைசார் நிறுவனங்களின் தலைவர்கள் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

Share This Post