“கிராமத்துடன் உரையாடல்” முதலாவது நிகழ்ச்சித்திட்டத்தின் முன்னேற்றத்தை கண்காணிப்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இன்று (26) முற்பகல் பதுளை மாவட்டத்தில் ஹல்துமுல்லை வெலங்விட கிராமத்திற்கு சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொண்டார்.
இதுவரை உரிய கவனத்தை பெற்றிருக்காத பின்தங்கிய கிராமிய மக்களை சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து அச்சந்தர்ப்பத்திலேயே அவற்றை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்து தீர்வுகளை வழங்கும் நோக்குடன் கடந்த செப்டெம்பர் மாதம் 25ஆம் திகதி “கிராமத்துடன் உரையாடல்” நிகழ்ச்சித்திட்டம் ஜனாதிபதி அவர்களினால் ஆரம்பிக்கப்பட்டது.
பதுளை மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய பிரதேச செயலாளர் பிரிவான ஹல்துமுல்லை வெலங்விட கிராமம் இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்காக முதலில் தெரிவு செய்யப்பட்டது. மக்கள் முன்வைத்த மற்றும் அங்கு இனங்காணப்பட்ட பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்குவதற்கு ஜனாதிபதி அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.
07 மாதங்களுக்குப் பின்னர் அதன் முன்னேற்றத்தை கண்டறிவது இன்றைய பயணத்தின் நோக்கமாகும்.
மக்களின் கோரிக்கைகளின்பேரில் இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட கொட்டபோகஸ்தென்ன விளையாட்டரங்கிலிருந்து ஜனாதிபதி அவர்களின் சுற்றுப் பயணம் ஆரம்பமானது.
ஹப்புத்தலையிலிருந்து வெலங்விட வரை இரண்டு பஸ் வண்டிகள் இன்று முதல் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டன. ஒரு நாளைக்கு இரண்டு பயணங்கள் என்ற அடிப்படையில் 08 கிராமங்களின் ஊடாக இந்த பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடுவதன் மூலம் போக்குவரத்துப் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துள்ளது.
காட்டு யானைகளின் தாக்குதலினால் உடைந்துபோயிருந்து, இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீட்டையும் ஜனாதிபதி அவர்கள் பார்வையிட்டார். “கிராமத்துடன் உரையாடல்” திட்டத்தின் விளைவாக காணி உறுதிகளைப் பெற்றுக்கொண்ட சிலருடன் உரையாடிய ஜனாதிபதி அவர்கள், தொடர்ச்சியாக விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு ஆலோசனை வழங்கினார்.
வெலங்விட கிராமத்தில் மின்சார யானை வேலிகள் சுமார் இரண்டு வருடங்களாக செயற்படாதிருந்தது. இதன் நீளம் 6 கிலோமீற்றர்களாகும். மின்சார வேலி புனரமைக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டது. யானை வேலியை பாதுகாக்கும் பொறுப்பு கிராம மக்களுக்கு வழங்கப்பட்டது. 1 கிலோமீற்றருக்கு ஒருவர் என்ற வகையில் மாதாந்தம் ரூபா 7500 கொடுப்பனவு கிடைக்கும் வகையில் இதற்காக 6 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நிகபொத முதல் வெலங்விட வரையான வீதி காபட் செய்யப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. வெலங்விடயிலிருந்து கொஸ்லாந்த, வெல்லவாய வீதியை இணைக்கும் 14 கிலோமீற்றர் வீதி நிர்மாணப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குடிநீர்ப் பிரச்சினைக்கு தீர்வாக நிர்மாணிக்கப்பட்டுவரும் நீர் முன்மொழிவு திட்டம் குறித்து ஜனாதிபதி அவர்கள் கேட்டறிந்தார்.
அக்கர சீய, குமாரதென்ன மற்றும் வெலங்விட கிராமங்களுக்கு மின்சாரம் வழங்குவதற்காக 54 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. 83 வீடுகளுக்கு 3 மாத காலப் பகுதியில் மின்சாரத்தை வழங்க மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. சுற்றுப் பயணத்தை மேற்கொண்ட ஜனாதிபதி அவர்கள், அங்கு வருகை தந்திருந்த மக்களுடன் உரையாடி விபரங்களை கேட்டறிந்தார்.
நிறைவு செய்யப்பட்டுள்ள மற்றும் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் வீதி அபிவிருத்தி நடவடிக்கைகளை பார்வையிட்ட ஜனாதிபதி அவர்கள், அவற்றை விரைவாக நிறைவு செய்து மக்களிடம் கையளிக்க வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி அவர்களின் வருகையினால் கிராமத்தின் மக்கள் முகங்கொடுத்திருந்த பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்திருப்பதையிட்டு மகாசங்கத்தினரும் மக்களும் ஜனாதிபதி அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
பண்டாரவளை நகரத் திட்டம் மற்றும் ஹப்புத்தலை நகரத்தை சுற்றுலா கவர்ச்சிமிக்கதாக அபிவிருத்தி செய்வதற்கு மக்கள் பிரதிநிதிகள் முன்வைத்த கோரிக்கை குறித்தும் ஜனாதிபதி அவர்கள் கவனம் செலுத்தினார்.
பதுளை மாவட்ட ஆளுநர் ஏ.ஜே.எம்.முசாம்மில், இராஜாங்க அமைச்சர் தேனுக்க விதானகமகே, பாராளுமன்ற உறுப்பினர்களான சுதர்ஷன தெனிபிட்டிய, சாமர சம்பத் தசநாயக்க, திஸ்ஸ குட்டியாரச்சி மற்றும் பிரதேச மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட அரச அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
