ஜனாதிபதியின் பணிப்புரையில் தூபாராம புண்ணிய பூமி புனர் நிர்மாணப் பணிகள் துரிதம்

ஜனாதிபதியின் பணிப்புரையில் தூபாராம புண்ணிய பூமி புனர் நிர்மாணப் பணிகள் துரிதம்
  • அனைத்து நிர்மாணப் பணிகளும் வரலாற்று முக்கியத்துவத்தை பாதுகாக்கும் வகையில்…

தூபாராம புண்ணிய பூமியின் புனர் நிர்மாண பணிகளை தொல்பொருள் திணைக்களத்தின் கண்காணிப்பின் கீழ் விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் பணிப்புரை விடுத்துள்ளார்.

தூபாராம எமது நாட்டின் முதலாவது தூபியாக எழுத்து மூலமான சாட்சிகளுடன் வரலாற்றில் பதிவாகியுள்ளது. புண்ணிய பூமியை அண்மித்த சட்டவிரோத நிர்மாணப் பணிகள் அதன் வெளித் தோற்றத்திற்கும் பக்தர்களுக்கும் தடையாகவுள்ளன. புண்ணிய பூமிக்கு சொந்தமான காணிகள் தொடர்பான பிரச்சினையை தீர்த்து தருமாறும் தூபராம சைத்தியாராமாதிபதி சங்கைக்குரிய கஹகல்ல ஞானிந்த தேரர் ஜனாதிபதி அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விடயங்களை கவனத்திற் கொண்டு தூபாராம புண்ணிய பூமியை அண்மித்த அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடலொன்று இன்று (12) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

தூபாராமவை தொல்பொருள் பெறுமதிவாய்ந்த புண்ணிய பூமியாக வசதிகளைக் கொண்ட வகையில் அபிவிருத்தி செய்வதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார். அதற்கான திட்டத்தை விரைவாக தயாரித்து இரண்டு வருடங்களுக்குள் நிர்மாணப் பணிகளை நிறைவுசெய்யுமாறும் பணிப்புரை வழங்கப்பட்டது. தூபராமவின் வட்டதாகை தொல்பொருள் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அனைத்து நிர்மாணப் பணிகளும் புத்தகங்களை படித்து தெரிந்துகொள்ள வேண்டிய தேவையின்றி கண்களால் பார்த்து தெரிந்துகொள்ளக்கூடிய வகையில் நிர்மாணிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

பொறுப்பேற்கப்படும் வரை தூபாராமவுக்கு சொந்தமான பகுதியில் அபிவிருத்தி பணிகளை ஆரம்பிக்கவும், நுழைவுப் பாதையை அமைக்கவும் ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை விடுத்தார்.

அநுராதபுரம் பண்டைய பிக்கு பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான வளாகத்தை ருவன்வெலி சைத்தியவுக்கு பொறுப்பளிப்பதற்கு இருபது வருடங்களுக்கு முன்னர் கொள்கை ரீதியான தீர்மானமொன்று மேற்கொள்ளப்பட்டது. அது இது வரையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என சைத்தியாராமாதிபதி கலாநிதி சங்கைக்குரிய பல்லேகம ஹேமரத்ன நாயக தேரர் குறிப்பிட்டார். பிக்கு பல்கலைக்கழகத்தில் தற்போது பயன்படுத்தப்படாத வளாகத்தை உடனடியாக ருவன்வெலி சைத்தியாராமவுக்கு பொறுப்பளிக்குமாறும் ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை விடுத்தார்.

ருவன்வெலி சைத்தியாராமாதிபதி கலாநிதி சங்கைக்குரிய பல்லேகம ஹேமரத்ன தேரர், தூபராம சைத்தியாராமாதிபதி சங்கைக்குரிய கஹகல்லே ஞானிந்த தேரர், லங்காராம விகாராதிபதி சங்கைக்குரிய ரளபனாவே தம்மஜோதி தேரர், சங்கைக்குரிய ஓமல்பே சுமனரத்ன தேரர், பௌத்த சாசன, கலாசார, சமய அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பந்துல ஹரிஸ்சந்திர, உயர் கல்வி அமைச்சின் செயலாளர் அநுர திஸாநாயக, மத்திய கலாசார நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் காமினி அதிகாரி, தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் கலாநிதி செனரத் திஸாநாயக உள்ளிட்ட அதிகாரிகள் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

Share This Post