வெள்ளப்பெருக்கினால் அனர்த்தத்திற்குள்ளாகிய பொலன்னறுவை மாவட்ட மக்களை மீளக்குடியேற்றுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அனர்த்தத்திற்குள்ளான மக்களுக்காக முன்னெடுக்கப்படும் நிவாரண வேலைத்திட்டங்கள் தொடர்பில் கண்டறிவதற்கான விசேட கலந்துரையாடலில் இன்று (23) பிற்பகல் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி அவர்கள் இவ்வாறு பணிப்புரை விடுத்துள்ளார்
இதுவரை பொலன்னறுவை மாவட்டத்தில் அனர்த்தத்திற்குள்ளான 451 குடும்பங்களை சேர்ந்த 1588 பேர் 10 நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இங்கு 08 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன், 250 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
பல சந்தர்ப்பங்களில் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட எலஹெர, பகமூன ஜிபிஎஸ் பிரிவின் 21 குடும்பங்களுக்கு மாற்றுக் காணிகளை இனங்கண்டு, அங்கு வீடுகளை நிர்மாணித்து அவர்களை குடியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி அவர்கள் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அத்துடன் அவர்கள் மீண்டுமொருமுறை இத்தகைய நிலைமைகளை எதிர்கொள்வதற்கு இடமளிக்கக்கூடாதெனவும் ஜனாதிபதி அவர்கள் வலியுறுத்தினார்.
கடந்த போகத்தின்போது பயிர்ச்செய்கைக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு நட்டஈடு வழங்குவது தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், இந்த கலந்துரையாடலில் பங்குபற்றாத அதிகாரிகளையும் தரப்பினரையும் அழைத்து மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி அவர்கள், தமன்கடுவ பிரதேச செயலக பிரிவில் சுதுநெலும்கம பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நடவடிக்கைகளை கண்டறிவதற்கான கண்காணிப்பு விஜயத்தில் ஈடுபட்டார்.
இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் சிறிபால கம்லத், முன்னாள் முதலமைச்சர் எஸ்எம்.ரஞ்சித் மற்றும் பொலன்னறுவை மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகள், முப்படையினர் மற்றும் பொலிஸ் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்த விஜயத்தில் கலந்துகொண்டனர்.
