- அனர்த்தங்களுக்குள்ளான மக்களுக்கு துரித நிவாரணம்…
- சேதமடைந்துள்ள வீதிகள் மற்றும் குளங்களை சீர் செய்வதற்கு துரித நடவடிக்கை…
- பயிர்ச்செய்கைகளுக்கு ஏற்பட்ட இழப்பு பற்றிய தகவல்கள் சேகரிப்பு….
அதிக மழைவீழ்ச்சி காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் அனர்த்தத்திற்குள்ளான மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்கள் தொடர்பில் கண்டறிவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இன்று (23) அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டத்தின் சில பிரதேசங்களுக்கு கண்காணிப்பு விஜயமொன்றினை மேற்கொண்டார்.
இதன்போது இன்று முற்பகல் அனுராதபுரத்திலுள்ள ஜனாதிபதி மாளிகையில் அரசியல் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகளை சந்தித்த ஜனாதிபதி அவர்கள், நிவாரண நடவடிக்கைகள் தொடர்பில் கேட்டறிந்தார்.
இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான நலன்பேணல் நடவடிக்கைகளை துரிதமாகவும் தொடர்ச்சியாகவும் முன்னெடுத்துச் செல்லுமாறு ஜனாதிபதி அவர்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
”இந்த நிவாரண நடவடிக்கைகள் இரண்டு கட்டமாக முன்னெடுக்கப்படுகின்றது. அனர்த்தத்தின்போது வழங்கப்பட வேண்டிய நிவாரணங்கள் மற்றும் அனர்த்தத்தின் பின்னர் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் அதில் உள்ளடங்குகின்றன. இந்த இரண்டு செயற்பாடுகள் தொடர்பிலும் அரசாங்கம் மிகுந்த பொறுப்புடன் செயற்படுகின்றது” என ஜனாதிபதி அவர்கள் இதன்போது வலியுறுத்தினார்.
அனுராதபுரம் மாவட்டத்தின் 22 பிரதேச செயலக பிரிவுகளில் 10 பிரிவுகள் அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ள அதேவேளை டிசம்பர் 20ஆம் திகதி முதல் இன்று வரை 1561 குடும்பங்களைச் சேர்ந்த 5181 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் 937 குடும்பங்களை சேர்ந்த 2923 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கான சமைத்த உணவுகள் மற்றும் உலர் உணவு பொருட்கள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றன. வீடுகளுக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் தொடர்பில் கண்டறிந்து உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை வழங்கினார். அனர்த்த நிலைமை குறைவடைந்துள்ள பிரதேசங்களில் துப்பரவு செயற்பாடுகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், மக்களுக்கான சுகாதார வசதிகள் குறித்து கண்டறிவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சேதமடைந்துள்ள குளங்களின் மறுசீரமைப்பு, பெருந்தெருக்கள், கால்வாய்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை துரிதமாக இயல்புநிலைக்கு கொண்டு வருதல் ஆகியன தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
மேலும் பயிர்ச்செய்கைகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு தொடர்பில் கண்டறிந்து, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் உரிய அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை வழங்கினார்.
அமைச்சர்களான எஸ்.எம்.சந்ரசேன, துமிந்த திசாநாயக்க, செஷான் சேமசிங்க, வடமத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் திஸ்ஸ வித்தாரன, பாராளுமன்ற உறுப்பினர்களான வீரகுமார திசாநாயக்க, எஸ்.சி.முத்துகுமாரன, ஜனாதிபதியின் ஆலோசகர் லலித் வீரதுங்க, பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன, அரச அதிகாரிகள், முப்படைத் தளபதிகள், பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்புத்துறை பிரதானிகள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள மத்திய நிலையங்கள் சிலவற்றிற்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் விஜயம் செய்து மக்களை சந்திக்கவுள்ளார். ராஜாங்கனை யாய 2 துட்டுகெமுனு விகாரையிலும் யாய 9 போதிராஜராம விகாரையிலும் தங்கவைக்கப்பட்டுள்ள பொதுமக்களை சந்தித்து அவர்களது நலன்புரி தேவைகளை கண்டறியவுள்ளார்.
திடீர் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பொலன்னறுவை மாவட்ட மக்களுக்காக முன்னெடுக்கப்படும் நிவாரண வேலைத்திட்டங்கள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கண்டறிவதற்கான கலந்துரையாடலொன்றும் இன்று பிற்பகல் பொலன்னறுவை மாவட்ட செயலகத்தில் ஜனாதிபதி அவர்களின் தலைமையில் இடம்பெறவுள்ளது.
அதனைத் தொடர்ந்து அனர்த்தத்திற்குள்ளான மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள எலஹெர பிரதேச நலன்புரி நிலையங்களுக்கும் ஜனாதிபதி அவர்கள் கண்காணிப்பு விஜயம் மேற்கொள்வார்.
