மஹிந்த ராஜபக்ஷ புதிய பிரதமராக பதவியேற்பு

மஹிந்த ராஜபக்ஷ புதிய பிரதமராக பதவியேற்பு

முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (21) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றார்.

பதவியேற்பு விழாவில் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் அமைச்சர்களும் பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

அண்மையில் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் தனது கட்சி வேட்பாளரின் தோல்வியைத் தொடர்ந்து, புதிய ஜனாதிபதியின் தலைமையில் அரசாங்கத்தை அமைப்பதற்கு வழிவிடும் வகையில் முன்னாள் பிரதமர் விக்ரமசிங்க தனது பதவியை இராஜினாமா செய்திருக்கின்றார்.

பிரதமர் ராஜபக்ஷ முதன் முதலில் 1970 ஆம் ஆண்டு பாராளுமன்றத்திற்கு தெரிவானார். 2005 ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறும் வரை, 2004 ஏப்ரல் 6 முதல் பிரதமராக பதவி வகித்த அவர், 2005 நவம்பர் 19 இல் தனது முதல் ஆறு ஆண்டு காலத்திற்கு ஜனாதிபதியாக பதவியேற்றார். 2010 ஜனவரி 27 இல் இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.

தொழில் ரீதியாக ஒரு சட்டத்தரணியான ராஜபக்ஷ, தெற்கில் ஹம்பாந்தோட்டை தேர்தல் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தியே பாராளுமன்றத்திற்கு தெரிவானார். மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தொழில், தொழிற்பயிற்சி, மீன்பிடி மற்றும் நீர்வள அபிவிருத்தி மற்றும் துறைமுக, கப்பல் மற்றும் மீன்பிடித்துறை அமைச்சர் உட்பட பல அமைச்சுப் பொறுப்புக்களையும் வகித்திருக்கின்றார்.

Share This Post