மக்களை வாழ வைப்பது ஒரு போராட்டம். அப்பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன்…

மக்களை வாழ வைப்பது ஒரு போராட்டம். அப்பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன்…

“கிராமத்துடன் கலந்துரையாடல்” ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி பதுளை, ஹல்துமுல்லையில் தெரிவிப்பு…

  • அனைத்து வாய்மொழி ரீதியான உத்தரவுகளையும் சுற்றறிக்கை என கருத்திற்கொள்ளவும்…
  • உத்தரவுகளை மீறும் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை…
  • 14 நாட்களுக்குள் சட்டம் செயற்படுத்தப்படும்…
  • ஹல்துமுல்லை உட்பட பல பிரதேசங்களின் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு…
  • /குமாரதென்ன வித்தியாலயத்தின் அனைத்து குறைபாடுகளும் நிறைவு செய்யப்பட்டது….

மக்களின் பொது நலனுக்காக வழங்கப்படும் அனைத்து வாய்மொழி ரீதியிலான உத்தரவுகளையும் சுற்றறிக்கையாக கருதி செயற்படுத்த வேண்டுமென்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். இவ் உத்தரவுகளை மீறுகின்ற அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பதுளை, ஹல்துமுல்லை, வெலங்விட்ட கிராமத்தில் இன்று (25) ஆரம்பிக்கப்பட்ட “ஜனாதிபதி கிராமத்துடன் கலந்துரையாடல்” நிகழ்வின் போதே ஜனாதிபதி அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டார்.

“அரச அதிகாரிகளிடமிருந்து நான் எதிர்பார்ப்பது மக்கள் பிரச்சினைகளை தெளிவாக புரிந்துகொண்டு தீர்வுகளை வழங்குவதே ஆகும். மக்களின் பக்கம் நின்று சரியான மற்றும் தைரியமாக முடிவெடுக்கக்கூடிய அதிகாரிகளை நான் பாதுகாப்பேன். மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்க அரச நிறுவனங்கள் நீண்டகாலத்தை எடுக்கின்றன. ஒரு நிறுவனத்திலிருந்து எழுத்துமூல விசாரணைக்கு இன்னுமொரு நிறுவனம் 14 நாட்களுக்குள் பதில் அளிக்காதவிடத்து அவ் எழுத்து மூல வேண்டுகோளை ஏற்றுக்கொண்டதாக கருதி மக்களுக்கு பதில் கூறவும்.” ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை விடுத்தார்.

ஹல்துமுல்லை, பதுளை மாவட்டத்தின் கஷ்டப் பிரதேசங்களில் ஒன்றாகவும் வெலங்விட்ட, ஹல்துமுல்லை பிரதேச செயலகப் பிரிவின் பின்தங்கிய கிராமமாக உள்ளது. “ஜனாதிபதி கிராமத்துடன் கலந்துரையாடல்” நிகழ்வின் முதலாவது சந்திப்பு ஹப்புத்தளை, வெலங்விட்ட 100 ஏக்கர் கிராமத்தின் குமாரதென்ன வித்தியாலத்தில் ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி அவர்கள், பிரதேச மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்துகொண்டார்.

பாதைகள், மின்சாரம் மற்றும் குடிநீர் பிரச்சினை உள்ளிட்ட அடிப்படை தேவைகளைக்கூட நிறைவு செய்ய முடியாமல் மக்கள் தமது பாரம்பரிய கிராமங்களை விட்டுச் சென்றுள்ளதாக கிராமவாசிகள் ஜனாதிபதி அவர்களிடம் தெரிவித்தனர்.

முன்னர் குறிப்பிடத்தக்களவு மாணவர்கள் கல்விகற்ற குமாரதென்ன வித்தியாலயம் 16 மாணவர்களுடன் இன்று இருப்பது அதற்கு சிறந்த உதாரணமாகும் என்றும் குறிப்பிட்டனர்.

100 ஏக்கர் கிராமத்திலிருந்து வெலங்விட்ட வரையான பாதையை காப்பட் இட்டு அபிவிருத்தி செய்தல், நீரூற்றுக்களை இனங்கண்டு குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்கும் இரண்டு மாதங்களுக்குள் மின்சாரத்தை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அவர்கள் உத்தரவிட்டார்.

தொடர்பாடல் தடங்கள் காரணமாக மக்களின் வாழ்வில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக பொதுமக்களின் கவலைகளை ஜனாதிபதி அவர்கள் கேட்டறிந்து கொண்டார். ஒரு சில வாரங்களுக்குள் தொடர்பாடல் வசதிகளை பெற்றுக்கொடுப்பதற்கும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

பல வருடங்களுக்கு முன்னர் கிராமத்தை விட்டுச் சென்றிருந்தாலும் கலந்துரையாடலில் பங்குபற்றி கிராமவாசிகள் ஜனாதிபதி அவர்கள் எடுத்த தீர்மானங்களின் காரணமாக தமது கிராமங்களில் வாழ்வதற்கு மீண்டும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக கூறி தமது மகிழ்ச்சியை தெரிவித்தனர்.

குமாரதென்ன வித்தியாலயத்திற்கு புதிய கட்டிடமொன்றை நிர்மாணித்துக் கொடுக்குமாறு கூறிய ஜனாதிபதி அவர்கள், அப்பிரதேசத்தை சூழ உள்ள பிள்ளைகளுக்கு மீண்டும் பாடசாலைக்கு வருகை தந்து கல்வியை தொடர்வதற்கான வாய்ப்பை வழங்குமாறு அதகாரிகளுக்கு தெரிவித்தார்.

கலந்துரையாடலுக்கு வருகை தந்திருந்த பிரதேச மக்களின் இன்னும் பல பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி அவர்கள் தீர்வுகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்தார்.

கிரவனாகம மற்றும் நிக்கபொத்த மகா வித்தியாலயங்கள் மற்றும் கொஸ்லந்த தேசிய பாடசாலையில் நிலவுகின்ற ஆசிரியர் பற்றாக்குறையை தீர்ப்பதற்கும் ஹாலி எல மலித்த மகாவித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்தை அமைத்துக் கொடுப்பதற்கும் ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை விடுத்தார். அது தவிர வெள்ளவாய கம்பஹ மகாவித்தியாலயத்திற்கு அதிபர் ஒருவரை நியமிப்பதற்கும் சொரகுனே மற்றும் ஜனானந்த வித்தியாலயங்களின் குறைபாடுகளை தீர்ப்பதற்கும் ஹப்புத்தளை தமிழ் மகா வித்தியாலயத்தை தேசிய பாடசாலையாக தரம் உயர்த்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

அங்கவீனமுற்ற இராணுவ வீரர் ஒருவரின் வேண்டுகொளுக்கு தமது அவதானத்தை செலுத்திய ஜனாதிபதி அவர்கள் 07 கிராமங்களை இணைக்கக்கூடிய மொரகெட்டிய வீதியை காப்பட் இட்டு அபிவிருத்தி செய்யவும் உத்தரவிட்டார்.

கொழும்பு – மட்டக்களப்பு வீதியில் 35 கிலோமீற்றர்களை கொண்ட பெரகல – வெள்ளவாய பகுதி, கெலிபனாவெல, ஹால்கன்ன வீதியின் வௌ்ளவாய வரையான பகுதி, 100 ஏக்கர் கக்குட்டு அராவ மத்திய வீதி, தெஹிலந்த – அளுத்வெலயை இணைக்கும் வீதி மற்றும் கிளை வீதிகளை துரிதமாக நிர்மாணித்து நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி அவர்கள் ஆலோசனை வழங்கினார்.

காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு, வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு திணைக்களத்திற்கு உரிய காணிகள் தொடர்பாக மக்கள் முன்வைத்த பிரச்சினைகளுக்கு உரிமம் மற்றும்  உறுதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் குறிப்பிட்டார்.

பதுளை மாவட்டத்தின் பல பிரதேச விவசாயிகள் நாட்டின் அதிக மிளகு விளைச்சலுக்கு மற்றும் வளமான விவசாயத்திற்கு உரிமை கோருகின்றனர். அதில் பலர் சேதனப் பசளை பயன்படுத்தி மிளகு பயிர்ச் செய்கையில் ஈடுபடுகின்றனர். அவர்கள் முகங்கொடுத்து வருகின்ற அனைத்து பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

நெல், கறுவா, கோப்பி உட்பட அனைத்து பயிர்ச்செய்கை நடவடிக்கைகளிலும் விவசாயிகள் முகங்கொடுக்கின்ற பிரச்சினைகள் விரிவாக கலந்துரையாடப்பட்டதோடு வனப் பாதுகாப்பு அளவைகளின் போது இடம்பெற்று இருக்கின்ற தவறுகளை தீர்க்குமாறு ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை விடுத்தார்.

கூடியிருந்த சிறு பிள்ளைகள் இருக்கக்கூடிய அனைவரினதும் பிரச்சினைகளுக்கு இயலுமான வகையில் தீர்வுகளை பெற்றுக்கொடுத்த ஜனாதிபதி அவர்கள், கலந்துரையாடலின் பின்னர் பிரதேசத்தின் பயிர் நிலங்கள் மற்றும் பல வீடுகளுக்கும் சென்று தகவல்களை கேட்டறிந்தார்.

பிரசேத்தின் மகா சங்கத்தினர், அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா, இராஜாங்க அமைச்சர் தேனுக்க விதானகமகே, பாராளுமன்ற உறுப்பினர்களான சுதர்ஷன தெனிபிட்டிய, திஸ்ஸ குட்டியாரச்சி, சாமர சம்பத் தசநாயக்க, ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில், ஜனாதிபதியின் ,பிரதம ஆலோசகர் லலித் வீரதுங்க ஆகியோருடன் பிரதேச அரசியல் பிரதிநிதிகள், நிறுவனங்களி்ன் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

 

Share This Post