புதிய அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்

புதிய அமைச்சர்கள் இன்று (22) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

அவர்களின் பெயர் விபரங்கள் பின்வருமாறு.

1.   கௌரவ மஹிந்த ராஜபக்ஷ – நிதி, பொருளாதார அலுவல்கள், கொள்கை அபிவிருத்தி, புத்த சாசனம், கலாசாரம், நீர் வழங்கல் மற்றும் நகர அபிவிருத்தி, வீடமைப்பு வசதிகள் அமைச்சர்
2.   கௌரவ நிமல் சிறிபால டி சில்வா – நீதி, மனித உரிமை மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர்
3.   கௌரவ ஆறுமுகன் தொண்டமான் – தோட்ட உட்கட்டமைப்பு, சமூக வலுவூட்டல் அமைச்சர்
4.   கௌரவ தினேஷ் குணவர்தன – வெளிநாட்டு உறவுகள், திறன் அபிவிருத்தி, தொழிற்துறை மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர்
5.   கௌரவ டக்ளஸ் தேவானந்த – மீன்பிடி, நீரியல் வள அமைச்சர்
6.   கௌரவ பவித்ராதேவி வன்னியாரச்சி – மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள், சமூக பாதுகாப்பு, சுகாதார, சுதேச மருத்துவத்துறை அமைச்சர்
7.   கௌரவ பந்துல குணவர்தன – தகவல், தொடர்பாடல் தொழிநுட்பம், உயர்கல்வி, தொழிநுட்ப புத்தாக்க அமைச்சர்
8.   கௌரவ ஜனக்க பண்டார தென்னகோன் – பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சர்
9.   கௌரவ சமல் ராஜபக்ஷ – மகாவலி அபிவிருத்தி, விவசாயம், நீர்ப்பாசனம், கிராமிய பொருளாதார அபிவிருத்தி, உள்ளக வர்த்தக, உணவுப் பாதுகாப்பு, நுகர்வோர் நலன்கள் அமைச்சர்
10. கௌரவ டளஸ் அழகப்பெரும – கல்வி, விளையாட்டுத்துறை, இளைஞர் அலுவல்கள் அமைச்சர்
11. கௌரவ ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ – வீதி, பெருந்தெருக்கள் துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர்
12. கௌரவ விமல் வீரவன்ச – சிறிய மற்றும் நடுத்தர தொழிற்துறை, தொழில் முயற்சி அபிவிருத்தி, கைத்தொழில் மற்றும் வழங்கல்  முகாமைத்துவ அமைச்சர்
13. கௌரவ மஹிந்த அமரவீர – பயணிகள் போக்குவரத்து, மின்சக்தி, சக்திவலு அமைச்சர்
14. கௌரவ எஸ்.எம்.சந்திரசேன சுற்றாடல், வனஜீவராசிகள், காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர்
15. கௌரவ ரமேஷ் பத்திரன – பெருந்தோட்டத் துறை, ஏற்றுமதி விவசாயம் அமைச்சர்
16. கௌரவ பிரசன்ன ரணதுங்க – கைத்தொழில் ஏற்றுமதி, முதலீட்டு ஊக்குவிப்பு, சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சர்.

 

புதிய அமைச்சரவை பதவிப்பிரமாண நிகழ்வில் மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் ஆற்றிய உரை.

(2019.11. 22ஆம் திகதி ஜனாதிபதி அலுவலகத்தில்)

முதலில் இன்றைய தினம் அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் செய்துகொண்ட உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். எமது “சுபீட்சத்தின் நோக்கு“ கொள்கைப் பிரகடனத்தை முன்வைத்தபோது, எமக்கு கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்திலேயே நாம் பொதுத் தேர்தல் ஒன்றை நடத்தி எமது அரசாங்கத்தை அமைப்போம் என்ற விடயத்தை குறிப்பிட்டோம். அதற்காக நாம் மக்கள் ஆணையை கோரினோம். எனவே முதலில் எமக்கு அரசியலமைப்பிற்கு ஏற்ப கிடைக்கும் முதற் சந்தர்ப்பத்திலேயே பொதுமக்களின் விருப்பத்தைக் கோரி நாம் தேர்தல் ஒன்றுக்கு செல்வோம். ஆகையால் நாம் இக்காலப்பகுதியில் ஒரு இடைக்கால அரசாங்கத்தை அமைத்துள்ளோம். நாம் அமைத்திருக்கும் இந்த அரசாங்கம் நாம் முன்வைத்துள்ள திட்டத்தின் கீழ் மக்களுக்கு வாக்குறுதியளித்த விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்காக மட்டுமேயான ஒரு அரசாங்கமாகும். எனவேதான் நாம் 15 பேர் கொண்ட அமைச்சரவை ஒன்றை நியமித்தோம். மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இந்த தேர்தலில் எமக்கு மிகப்பெறும் வெற்றியை பெற்றுத் தந்திருக்கிறார்கள். எமக்கு பாரிய சவால்கள் உள்ளன. அந்த சவால்களை வெற்றிகொள்வதைப்போன்றே மக்களின் அந்த எதிர்பார்ப்புக்களையும் நாம் முழுமையாக நிறைவேற்ற வேண்டும்.

கடந்த காலப் பகுதியில் இந்த நாட்டில் நடைமுறையில் இருந்த அரசியல் கலாசாரத்திற்கு பொதுமக்களிடம் வரவேற்பு இருக்கவில்லை. இது நாம் அனைவரும் அறிந்த விடயமாகும். இந்த புதிய அரசாங்கம் அந்த கலாசாரத்தில் இருந்து விலகி மக்கள் எதிர்பார்க்கும் புதியதோர் யுகத்திற்கு செல்ல வேண்டும். எனவே இக்காலப் பகுதியில் நாம் எமது முழுப் பலத்தையும் திரட்டி எமது கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு மக்களுக்காக நாம் வாக்குறுதியளித்த முக்கிய விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பை நான் இச்சந்தர்ப்பத்தில் எதிர்பார்க்கின்றேன்.

குறிப்பாக நாம் அமைச்சரவையை 15 ஆக மட்டுப்படுத்தி இருக்கின்றோம். பின்னர் இந்த அமைச்சர்களின் கீழ் இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளனர். எனவே இராஜாங்க அமைச்சர்களுக்கு அவர்களது கடமைகளை செய்வதற்கு உங்களுடைய ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். ஏனென்றால் இதற்கு முன்னர் நியமிக்கப்பட்டிருந்த சில இராஜாங்க அமைச்சர்கள் முழு நாளும் வெறுமனே தங்களது கையொப்பங்களை இடுவதில் மட்டுமே பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கும் நிலை இருந்தது. அவர்களுக்கு அதிகாரம் இருக்கவில்லை என்றே குற்றச்சாட்டு இருந்தது. அதுவே யதார்த்தமாகும். எனவே அந்த குற்றச்சாட்டுக்கு ஆளாக வேண்டாம். இராஜாங்க அமைச்சர்களுக்கு அவர்களது கடமைகளை நிறைவேற்றுவதற்கு தேவையான முழுமையான ஒத்துழைப்பை பெற்றுக்கொடுக்குமாறு நான் கேட்டுக்கொள்கின்றேன்.

இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிறிய அமைச்சரவை ஒன்றை நியமிக்குமாறு என்னிடம் கேட்டுக்கொண்டார்கள். குறிப்பாக நான் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கின்றேன். அவர்களது கோரிக்கை நியாயமானது என நான் நினைக்கின்றேன். அதேபோன்று அரச நிர்வாகத்துடன் சம்பந்தப்படுவதற்கு அவர்களுக்கும் சந்தர்ப்பமளியுங்கள். குறிப்பாக நாம் முன்வைத்த கொள்கை பிரகடனத்திற்கேற்ப எமது செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு நான் அமைச்சர்களிடமும் நியமிக்கப்படவிருக்கின்ற இராஜாங்க அமைச்சர்களிடமும் கேட்டுக்கொள்கின்றேன்.

அதேபோன்று இன்னும் சில மிக முக்கியமான வியடங்கள் உள்ளன. அமைச்சர்களின் கீழ் உள்ள அரச தொழில் முயற்சி மற்றும் கூட்டுத்தாபனங்கள் போன்ற பெரும்பாலான நிறுவனங்கள் இன்று நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களாக மாறியுள்ளன. நாம் இவற்றை இலாபமீட்டும் நிறுவனங்களாக திரைசேரிக்கு சுமையில்லாத வகையில் வெற்றிகரமாக முன்னெடுக்க வேண்டியுள்ளது. இது செய்வதற்கு முடியுமானதாகும். எனவே குறிப்பாக இந்த நிறுவனங்களுக்கு தலைவர்களையும் பணிப்பாளர் சபையையும் நியமிக்கின்றபோது அந்த பணிகளை நிறைவேற்றக்கூடிய தகைமைகள் உள்ள தொழில்சார்ந்த அதுபோன்று அத்துறை குறித்த அறிவு உள்ளவர்களை தலைவர்களாகவும் பணிப்பாளர் சபை உறுப்பினர்களாகவும் நியமிக்க வேண்டும்.

ஒரு தெரிவுக் குழுவின் ஊடாக இவர்கள் தெரிவு செய்யப்பட வேண்டுமென்று நாம் கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிட்டுள்ளோம். இந்த நிறுவனங்களுக்கு தகைமை உள்ளவர்கள் இருப்பார்களானால் அவர்களது பெயர்களை தெரிவுக்குழுவிற்கு சமர்ப்பிக்குமாறு நான் அமைச்சர்களை கேட்டுக்கொள்கின்றேன். இது மிகவும் முக்கியமானதென நான் கருதுகின்றேன். ஏனென்றால் இந்த நிறுவனங்களை வினைத்திறனான, இலாபமீட்டும் நிறுவனங்களாக நாம் மாற்ற வேண்டும்.

அதேபோன்று மற்றுமொரு முக்கியமான விடயம்தான் இக்காலப் பகுதியில் குறிப்பாக அமைச்சரவையில் உள்ள எமக்கு நிரப்பக்கூடிய திறன் சாராத ஊழியர் வெற்றிடங்களாகும். துரதிர்ஷடவசமாக கடந்த காலங்களில் பேசப்பட்டுவந்த ஒன்றுதான் அமைச்சுக்களில் உள்ள அத்தகைய திறன்சாராத ஊழியர்களுக்கான வெற்றிடங்கள் பெரும்பாலும் அமைச்சரின் தொகுதியில் உள்ளவர்களினால்தான் நிரப்பப்படும். அதேபோன்று அவை வறுமையின் கீழ் மட்டத்தில் உள்ள திறன் சாராத ஊழியர்களுக்கே வழங்கப்பட வேண்டும். அவர்களை வறுமையிலிருந்து மேலே கொண்டுவர வேண்டுமானால் நாம் அந்த வறிய குடும்பங்களில் இருந்துதான் அந்த திறன் சாராத ஊழியர் வெற்றிடங்களை நிரப்ப வேண்டும்.

அவற்றுக்கு உயர் கல்வித்தகைமைகள் உள்ளவர்களை நியமித்தால் அவர்களின் மூலம் அந்தப் பணியை செய்ய முடியாது. அதனை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். வைத்தியசாலைகளாக இருக்கலாம், பாடசாலைகளாக இருக்கலாம், திறன் சாராத ஊழியர் வெற்றிடங்கள் அந்தந்த மாகாணங்களில் உள்ள வறிய குடும்பங்களிலிருந்துதான் நிரப்பப்பட வேண்டும். எனவே அத்தகைய வெற்றிடங்களை அமைச்சரே நேரடியாக நிரப்பாது, அவற்றில் நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் உள்ள அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும். தயவு செய்து அத்தகைய வெற்றிடங்கள் இருக்குமானால் ஜனாதிபதி அலுவலகத்திற்கு   அறியத்தந்தால் எமக்கு அந்த வெற்றிடங்களை நிரப்ப முடியும். அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அதற்கான சந்தர்ப்பத்தை பெற்றுக்கொடுங்கள்.

அதேபோன்று எதிர்வரும் திங்கட்கிழமை எஞ்சிய இராஜாங்க அமைச்சர் பதவிகளை வழங்க முடியுமென நான் நினைக்கின்றேன். 19வது திருத்தத்திற்கேற்ப அமைச்சரவையின் அளவு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வரையறையில் தான் எனக்கு அமைச்சரவையை நியமிக்க முடியும். எனவே அமைச்சரவையை நியமிக்கும்போதுகூட இந்த 15 பேரை தெரிவு செய்வதில் பெரும் சிரமங்கள் இருந்தன. என்றாலும் நாம் எமக்கு முன்னால் உள்ள சவால்களை வெற்றிகொள்வதே முக்கியமானது என நான் கருதுகின்றேன். எனவே இந்த பணிக்காக எனக்கும் பிரதமருக்கும் முழுமையான ஒத்துழைப்பை பெற்றுத்தருமாறு உங்களிடம் கேட்டுக்கொள்கின்றேன். அதேபோன்று நாம் எதிர்வரும் தேர்தலில் பாரிய வெற்றியை பெறுவது அவசியமாகும். இதற்காக உங்களுடைய ஒத்துழைப்பை கோரியவனாக, மீண்டும் இன்று தெரிவு செய்யப்பட்டிருக்கும் அமைச்சர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

 

Share This Post