“கெகுலு துரு உதானய” சிறுவர் மர நடுகை தேசிய நிகழ்ச்சித் திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம் …

“கெகுலு துரு உதானய” சிறுவர் மர நடுகை தேசிய நிகழ்ச்சித் திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம் …

“கெகுலு துரு உதானய” சிறுவர் மர நடுகை தேசிய நிகழ்ச்சித் திட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று (15) முற்பகல் கம்பளை அட்டபாகை விமலதர்ம தேசிய பாடசாலை வளாகத்தில் ஆரம்பமானது.

நாட்டில் ஒவ்வொரு வருடமும் முதலாம் வகுப்பில் சேரும் பிள்ளைகளின் எண்ணிக்கை சுமார் மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் ஆகும். அவர்களை சூழலை நேசிக்கும் பிரஜைகளாக மாற்றுவதும் “சுபீட்சத்தின் நோக்கு“ கொள்கைத் திட்டம் அறிமுகப்படுத்திய நிலையான சூழல் கொள்கைக்கு ஏற்ப எதிர்கால தலைமுறையினருக்கு பாதுகாப்பான சுற்றுச்சூழல் அமைப்பை வழங்குவதும் இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

ஜனாதிபதி அவர்களும் அமைச்சர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளும் சிறுவர்களுடன் இணைந்து மரக்கன்றுகளை நட்டு, ‘கெகுலு துரு உதானய’ திட்டத்தைத் ஆரம்பித்து வைத்தனர்.

புத்தகப் படிப்புடன் பரீட்சையை எதிர்கொள்ளும் மனப்பான்மையில் உள்ள மாணவர்களை பயிர்ச்செய்கை நடவடிக்கைகளுக்கு ஊக்குவிப்பதன் மூலம் ஒரு நல்ல மனநிலையை உருவாக்குவதும் இந்த எண்ணக்கருவின் நோக்கமாகும் என்று இராஜாங்க அமைச்சர் சஷிந்திர ராஜபக்ஷ தெரிவித்தார்.

விவசாய மற்றும் கல்வி அமைச்சுக்கள் இணைந்து இந்த திட்டத்தை செயற்படுத்துகின்றன. இன்று ஆரம்பித்து வைக்கப்பட்ட ‘கெகுலு துரு உதானய’ திட்டம் ஆண்டுதோறும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும். சிறுவர்களின் மேற்பார்வையில் 5 ஆண்டுகளுக்குள் மா, பலா, ஈரப்பலா, தென்னை உள்ளிட்ட 17 லட்சம் மரக்கன்றுகளை சூழலுக்கு வழங்குவது அரசாங்கத்தின் இலக்காகும். நகர்ப்புற சிறுவர்களுக்கு அவர்களின் பிரதேசங்களுக்கு ஏற்றவாறு சிறிய அளவிலான தாவரங்கள் மற்றும் வீட்டுத்தோட்டங்கள் இல்லாத வீடுகளில் வசிக்கும் சிறுவர்களுக்கு சாடிகளில் நடப்பட்ட கன்றுகள் வழங்கப்படும்.

மரக்கன்றுகள் விவசாய இராஜாங்க அமைச்சினால் விநியோகிக்கப்படும் என்பதுடன், கமநல சேவைகள் திணைக்களத்தின் விவசாய ஆராய்ச்சி அதிகாரிகளால் சிறுவர்கள் மற்றும் மரக்கன்றுகள் குறித்த வருடாந்த அறிக்கையொன்றை தயாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அவர்கள் சிறுவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி வைத்தார்.

2021 ஆம் ஆண்டில் முதலாம் வகுப்பிற்கு பிள்ளைகளை அனுமதிப்பதை அடையாளப்படுத்தும் வகையில் ஜனாதிபதி  அவர்கள் அட்டபாகை விமலதர்ம வித்தியாலயத்திற்கு அனுமதி பெற்றுள்ள பிள்ளையொன்றின் பெயரை பாடசாலை இடாப்பில் பதிவு செய்து பாடசாலை பதிவுப் புத்தகத்தில் குறிப்பொன்றை பதிவுசெய்தார்.

கோவிட் நிதிக்காக மத்திய மாகாண கல்வித் திணைக்களம் சேகரித்த ரூ .63 லட்சத்துக்கான காசோலையை ஆளுநர் திரு. லலித் யு. கமகே ஜனாதிபதி அவர்களிடம் கையளித்தார்.

கோவிட் நிதிக்கு தமது மாத சம்பளத்தை நன்கொடையாக வழங்கிய மூன்று ஆசிரியர்களுக்கு ஜனாதிபதி அவர்கள் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

ஜனாதிபதி அவர்கள் அட்டபாகே விமலதர்ம தேசிய பாடசாலைக்கு வருகைதந்ததை கௌரவித்து பாடசாலை அதிபர் சங்கைக்குரிய ரூபஹ சோனுத்தர தேரர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து நினைவுச் சின்னமொன்றை வழங்கினர்.

ஜனாதிபதி அவர்களும் அமைச்சர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் 2021 ஆம் ஆண்டிற்கு விமலதர்ம தேசியப் பாடசாலையின் முதலாம் வகுப்பு மாணவர்கள் மற்றும் மாணவத் தலைவர்களுடன் புகைப்படத்திற்கும் தோற்றினர்.

பாடசாலையின் மாணவி அனுஷ்க இமேஷான் தான் வரைந்த ஜனாதிபதி அவர்களின் உருவப்படத்தை ஜனாதிபதி அவர்களிடம் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக உடகம பொது மைதானத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி அவர்கள், அங்கு கூடியிருந்த மக்களிடம் கலந்துரையாடி, அப்பகுதியில் அந்த மக்கள் எதிர்கொள்ளும் குறைபாடுகள் மற்றும் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார்.

மக்கள் விடுத்த வேண்டுகோளுக்கு பதிலளிக்கும் விதமாக உடகம கலவெல்கொல்ல வீதியை காப்பட் செய்து அபிவிருத்தி செய்வதற்கும், குடிநீர் பிரச்சினை குறித்து உரிய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

உடகம பொது மைதானத்திற்கும் விமலதர்ம வித்யாலயத்திற்கும் இடையில் அமைந்துள்ள அட்டபாகே ராஜானந்த வித்யாலயத்திற்கு முன் கூடியிருந்த பிள்ளைகளிடமும் ஜனாதிபதி அவர்கள் விபரங்களை கேட்டறிந்தார். சிறுவர்கள் முன்வைத்த கோரிக்கையின் பிரகாரம் பாடசாலையின் விளையாட்டு மைதானம் மற்றும் பாதியளவு நிறைவுசெய்யப்பட்டுள்ள கட்டிடத்தின் பணிகளை நிறைவுசெய்து தருவதாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே, மத்திய மாகாண ஆளுநர் லலித் யு. கமகே, இராஜாங்க அமைச்சர்களான சஷிந்திர ராஜபக்ஷ மற்றும் அனுராத ஜயரத்ன ஆகியோர் நிகழ்வில் உரையாற்றினர். இராஜாங்க அமைச்சர்களான லொகான் ரத்வத்தே, பியால் நிஷாந்த, பாராளுமன்ற உறுப்பினர்களான உதயன கிரிந்திகொட, வசந்த யாப்பா பண்டார, அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Share This Post