உலகளாவிய கலாசார சாரணர் ஜம்போரி நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு…  

உலகளாவிய கலாசார சாரணர் ஜம்போரி நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு…   

இம்முறை இடம்பெறும் மெய்நிகர் உலகளாவிய கலாசார சாரணர் ஜம்போரி நிகழ்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அவர்கள் பங்குபற்றினார்.

தற்போதைய கொவிட் நோய்த்தொற்று நிலைமைகள் காரணமாக, வரலாற்றில் முதல் முறையாக, இந்த ஜம்போரி மெய்நிகர் தொழில்நுட்பத்தில் மூன்று நாட்கள் (16, 17 மற்றும் 18)> உலகெங்கிலும் இருந்து நூறு நாடுகளைச் சேர்ந்த 20,000க்கும் மேற்பட்ட சாரணர்களின் பங்கேற்புடன் நடைபெறுகிறது.

“கலாசார ரீதியாக ஒரே சாரணர் உலகம்” என்ற கருப்பொருளின் கீழ் இடம்பெறும் உலகளாவிய கலாசார சாரணர் ஜம்போரியின் மூலம், தற்போதைய கொவிட் நோய்த்தொற்று நிலைமைகளுக்கு மத்தியில், வீடுகளில் இருக்கும் சாரணர்களுக்கு கலாசார ரீதியாக பல்வேறு புத்தாக்க நிகழ்ச்சித்திட்டங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

“எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய காலநிலை மாற்றம், மோதல்கள் மற்றும் தொற்றுநோய், உயிர்ப் பல்வகைமை இழப்பு, சுற்றுச்சூழல் அழிவு, உணவுப் பாதுகாப்பு, நீருக்கான அணுகல் போன்ற பிரச்சினைகள், எதிர்காலத்தில் வெற்றிகொள்ள வேண்டிய சவால்களாகும். இந்த எதிர்காலச் சவால்களை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளத் தேவையான திறன்களை இளைஞர்களுக்கு அளிக்க வேண்டும்” என்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அவர்கள் தெரிவித்தார்.

எமது வாழ்வொழுங்கை மாற்றிக்கொள்வதற்கு எம்மைக் கட்டாயப்படுத்தும் உலகளாவிய கொவிட் 19 தொற்றுநோய் நிலைமைகளுக்கு மத்தியில், அதனை ஒரு சவாலாகக் கருதாது, தற்போதைய தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி சாரணர் இயக்கம் மேற்கொண்டுள்ள முன்னெடுப்பு, எளிய ஆனால் ஆழமான முன்னுதாரணத்தை வழங்கியிருக்கிறது” என, ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

பல்வேறு நாடுகளுக்கே உரிய தனித்துவமான கலாசாரப் பெறுமானங்களை உள்ளடக்கிய ‘உலகளாவிய கலாசார சாரணர் ஜம்போரி’, இலங்கையின் தலைமை சாரணரான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அவர்களின் தலைமையில், ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (16) பிற்பகல் ஆரம்பமானது. இந்த நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார்.

உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள தனித்துவமான கலாசார வேறுபாடுகள் மற்றும் பாரம்பரியங்களை ஒவ்வொருவரிடமிருந்தும் கற்றுக்கொள்வது, எதிர்கால உலகளாவிய செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு அடித்தளமாக அமையும் என்று ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

தற்போதைய இளைஞர்கள் ஒவ்வொருவருக்கும இடையில் ஏற்படுத்தப்படும் உறவுகள், எதிர்காலத்தில் தெளிவான உலகளாவிய நிலைப்பாட்டுக்கு காரணமாக அமையும் என்று ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

சாரணர் வரலாற்றில் முதன் முறையாக இணைய தொழிநுட்பத்தின் ஊடாக இடம்பெறும் சர்வதேச சாரணர் ஜம்போரிக்கு, சாரணர்கள் மற்றும் சாரணர் தலைவர்கள் இருபதாயிரத்துக்கும் அதிகமானவர்கள் பதிவு செய்துள்ளதாக, ஜம்போரி ஆலோசகர் உலக சாரணர் குழு உறுப்பினர் சட்டத்தரணி ஜனப்ரித் பெர்னாண்டோ தெரிவித்தார்.

இந்த நிகழ்வின் விசேட அதிதியாக, உலக சாரணர் குழுவின் தலைவர் கிரேக் டேர்பி (Craig  Turpie) பங்குபற்றினார். உலக சாரணர் சங்கத்தின் தலைவர்கள், ஏனைய நாடுகளின் சாரணர் ஆணையாளர்கள் உள்ளிட்ட உலகத் தலைவர்களும் கலந்துகொண்டனர்.

இலங்கைச் சாரணர் சங்கத்தின் உலகளாவிய கலாசார ஜம்போரி நிகழ்வில்

ஜனாதிபதி அவர்கள் ஆற்றிய உரை

 உலக சாரணர் குழுவின் தலைவர் அவர்களே,

ஆசிய பசிபிக் பிராந்திய சாரணர் குழுவின் தலைவர் அவர்களே,

சாரணர் இயக்க உலக அமைப்பின் பிராந்திய பணிப்பாளர்கள் அவர்களே,

உலகெங்கிலும் உள்ள தலைமை ஆணையாளர்கள், சர்வதேச ஆணையாளர்கள் மற்றும் முக்கிய தலைவர்களே,

இலங்கைச் சாரணர் சங்கத்தின் தலைமை ஆணையாளர், மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் அவர்களே,

ஜம்போரி ஏற்பாட்டுக் குழு உறுப்பினர்களே,

உலகெங்கிலும் உள்ள சாரணர்களே,

இலங்கை சாரணர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள இந்த மெய்நிகர் உலகளாவிய கலாசார ஜம்போரியின் ஆரம்ப விழாவில், உங்கள் மத்தியில் உரையாற்றுவதையிட்டு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த நிகழ்வு, இத்தகைய நிகழ்வுகளில் முதலாவது நிகழ்வு என்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன்.

எமது வாழ்வொழுங்கை மாற்றிக்கொள்வதற்கு, எம்மைக் கட்டாயப்படுத்தும் உலகளாவிய தொற்றுநோய் நிலைமைகளுக்கு மத்தியில், இந்த முன்னெடுப்பை மேற்கொண்டமைக்காக இலங்கைச் சாரணர் சங்கத்தை நான் பாராட்டுகிறேன்.

இத்தகைய சூழலில் இந்த முயற்சியானது, ‘தயாராக இருங்கள்’ என்ற சாரணர் இயக்கத்தின் எளிய ஆனால் ஆழமான குறிக்கோளின் பெரும் மதிப்பை எடுத்துக் காட்டுகிறது.

நூறு ஆண்டுகளுக்கு முன்னர் அது நிறுவப்பட்டதிலிருந்து, உலக சாரணர் இயக்கம் மில்லியன் கணக்கான இளைஞர்களுக்கு, தலைமைத்துவம், குழுப்பணி, ஆக்கத்திறன் மற்றும் பல்வேறு சவால்களை வெற்றிகொள்வதற்கான திறன் போன்ற முக்கிய திறன்களை வளர்க்க உதவியுள்ளது.

நாம் வாழும் உலகம், மேலும் மேலும் சிக்கலானதாக மாறி வருகின்ற சூழ்நிலையில், இத்தகைய திறன்கள் மென்மேலும் முக்கியத்துவம் பெறுகின்றன.

கடந்த காலங்களை விட, எதிர்காலம் கொண்டுவரும் சவால்களை வெற்றிகொள்வது மிகவும் கடினமானதாக இருக்கும்.

மோதல்கள் மற்றும் தொற்றுநோய் போன்ற இன்றைய பிரச்சினைகளுக்கு மேலதிகமாக, உயிர்ப் பல்வகைமை இழப்பு, சுற்றுச்சூழல் அழிவு, உணவுப் பாதுகாப்பு, நீருக்கான அணுகல் மற்றும் காலநிலை மாற்றம் போன்ற பிரச்சினைகள் எதிர்காலத்தில் வெற்றிகொள்ள வேண்டிய சவால்களாகும்.

உலக சாரணர் இயக்கமும் இதே போன்ற நிறுவனங்களும், இந்த எதிர்காலச் சவால்களை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளத் தேவையான திறன்களை இளைஞர்களுக்கு அளிக்க வேண்டும்.

அந்த அமைப்புகள், இளைஞர்களை உலகளவில் சிந்திக்க ஊக்குவித்து, இந்தப் பிரச்சினைகளில் உலகளாவிய நடவடிக்கையை எடுக்க, அவர்களைத் தயார்படுத்த வேண்டும்.

இந்தச் சூழலில், உலகளாவிய கல​சார ஜம்போரியின் ஊடாக, நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து, பதினைந்தாயிரம் சாரணர்கள் ஒன்றுசேர்வது உண்மையில் பாராட்டத்தக்கது.

பல்வேறு தேசிய மொழிகள், ஆடைகள், உணவுகள், கலைப்படைப்புகள் மற்றும் வரலாறுகளைப் பிரதிபலிக்கும் பல்வேறுபட்ட உலகளாவிய கலாசாரங்களைக் காட்சிப்படுத்துவதன் மூலம், அது பரந்துபட்ட புவியியல் மற்றும் கலாசார இடைவெளிகளை இணைப்பதற்குத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும்.

இது, உலகின் பல்வேறு பிராந்தியங்களில் உள்ள சிக்கல்கள் மற்றும் வாய்ப்புகளைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள பங்கேற்பாளர்களுக்கு உதவும்.

அவை தொடர்பான எதிர்கால உலகளாவிய நடவடிக்கையின் அடித்தளத்தை அமைப்பதற்கும் இது உதவக்கூடும்.

இந்த மூன்று நாட்களில், அனைத்துப் பங்கேற்பாளர்களும் இந்த மன்றத்தை முழுமையாகப் பயன்படுத்துவார்கள் என்று நான் நம்புகிறேன், இது நம் உலகத்தை உள்ளடக்கிய மற்றும் வடிவமைக்கும் பல்​வேறு கலாசாரங்கள் மற்றும் பாரம்பரியங்களைப் பற்றியும் ஒவ்வொருவர் பற்றியும், ஒவ்வொருவரில் இருந்தும் அறிந்துகொள்ள உதவுகிறது.

அவர்கள் அமைக்கும் இணைப்புப் பாலங்களும் மேற்கொள்ளும் தொடர்புகளும், அவர்களை உண்மையான உலகளாவிய குடிமக்களாக, எதிர்காலத்தில் நிலைநிறுத்தும் என்று நான் நம்புகிறேன்.

இலங்கையின் தலைமை சாரணர் என்ற முறையில், “கலாசார ரீதியாக ஒரே சாரணர் உலகம்” என்ற இந்த மெய்நிகர் உலகளாவிய கலாசார ஜம்போரியை ஆரம்பித்து வைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

Share This Post