ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் இந்திய விஜயம் இரு நாடுகளுக்குமிடையிலான வரலாற்று ரீதியான உறவில் புதியதோர் திருப்புமுனை என இந்திய ஜனாதிபதி தெரிவிப்பு​

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் இந்திய விஜயம் இரு நாடுகளுக்குமிடையிலான வரலாற்று ரீதியான உறவில் புதியதோர் திருப்புமுனை என இந்திய ஜனாதிபதி தெரிவிப்பு​

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தனது முதலாவது வெளிநாட்டு விஜயமாக இந்தியாவுக்கு வருகை தந்தமை எமது இரு நாடுகளுக்குமிடையிலான வரலாற்று ரீதியான உறவில் புதியதோர் திருப்பத்தை குறிப்பதாக உள்ளது என இந்திய ஜனாதிபதி தெரிவித்தார்.

ராஷ்டிர பவனில் நேற்று (29) இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட இராப்போசன விருந்தின் போதே இந்திய ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் அவர்கள் இதனை தெரிவித்தார்.

இரு நாடுகளுக்குமிடையிலான நீண்ட கால நட்புறவு தெற்காசிய பிராந்தியத்தின் எதிர்கால பயணத்திற்கு சக்தியாக விளங்கும் என்றும் இந்திய ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இலங்கையின் எதிர்கால பயணத்திற்காக தயாரித்துள்ள கொள்கைப் பிரகடனம் நாட்டின் அனைத்து துறைகளினதும் துரிதமான முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என தான் நம்புவதாகவும் இந்திய ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் குறிப்பிட்டார்.

இங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வரலாற்று ரீதியான உறவுகளை மேலும் பலப்படுத்தி, வர்த்தக, பொருளாதார, சமூக உறவுகளை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

இரு நாடுகளினதும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான தேவை குறித்தும் தலைவர்கள் கலந்துரையாடினர்.

இந்த நிகழ்வில் இந்திய அரசாங்கத்தின் அமைச்சர்களும் இலங்கை தூதுக்குழுவினரும் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இன்று பிற்பகல் இலங்கை உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் அதிகாரிகளை சந்திக்கவுள்ளதுடன், பிற்பகல் பாரதீய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர் ராம் மாதவ் அவர்களையும் சந்திக்கவுள்ளார்.

 

 

 

 

 

 

 

Share This Post