முன்மொழியப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டத்தில் இரத்தினபுரி நகருக்கு புதுத் தோற்றம் – ஜனாதிபதி இரத்தினபுரியில் தெரிவிப்பு

முன்மொழியப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டத்தில் இரத்தினபுரி நகருக்கு புதுத் தோற்றம் – ஜனாதிபதி இரத்தினபுரியில் தெரிவிப்பு

முன்மொழியப்பட்டுள்ள இரத்தினபுரி நகர அபிவிருத்தித்திட்டத்தின் மூலம் நகருக்கு ஒரு புதுத் தோற்றம் கிடைக்குமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். இரத்தினபுரி நகர மத்தியில் ஒரு முழுமையான பஸ் தரிப்பு நிலையமும் அதன் கீழ் நிர்மாணிக்கப்படும்.

பொதுஜன முன்னணியில் இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் வெற்றியை உறுதிசெய்யும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இரத்தினபுரி மாவட்டத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு, இன்று (19) பிற்பகல் இரத்தினபுரி சீவலி விளையாட்டரங்கிற்கு அருகில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் டப்ளியு.டி.ஜே.செனவிரத்ன மற்றும் ரஞ்சித் பண்டார ஆகியோர் இதனை ஏற்பாடு செய்திருந்தனர்.

கொழும்பு – இரத்தினபுரியை இணைக்கும் அதிவேகப் பாதை நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கிளிமலே வைத்தியசாலையை புனர்நிர்மாணம் செய்து தருமாறு மக்கள் முன்வைத்த கோரிக்கையினை அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

பிரேமலால் ஜயசேகர நிவித்திகல பஸ் நிலையத்திற்கு முன்னால் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பிலும் ஜனாதிபதி அவர்கள் பங்குபற்றினார். அவிசாவலையிலிருந்து ஓப்பநாயக்க வரையிலான புகையிரத பாதைக்கு சொந்தமான காணிகளில் வதியும் சுமார் 35,000 பேருக்கு சட்ட ரீதியான உறுதிகள் இல்லாமை பற்றியும் ஜனாதிபதி அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கும் பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுபவர்களுக்கும் கடுமையான தண்டனைகளை வழங்குமாறு கோரிய மக்கள், பாதுகாப்பான நாட்டை கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி அவர்கள் முன்னெடுத்துவரும் நிகழ்ச்சித்திட்டத்திற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக தெரிவித்தனர்.

அமைச்சர் பவித்ரா வன்னயாரச்சி மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் எஹெலியகொட பிரதேச செயலாளர் அலுவலகத்திற்கு அருகிலும் ஜனக்க வக்கும்புர கலவான அயகம சந்தைக்கு முன்னாலும் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்புகளிலும் பங்குபற்றிய ஜனாதிபதி அவர்கள், வருகை தந்திருந்த மக்களுடன் சுமூகமாக கலந்துரையாடினார்.

சுரங்க கைத்தொழிலாளர்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி அவர்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இத்துறையின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கியவாறு அனுமதிப் பத்திரங்களை வழங்குவதை ஒரு நிறுவனத்தின் ஊடாக மேற்கொள்வதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்வதற்கு ஜனாதிபதி அவர்கள் இணக்கம் தெரிவித்தார்.

Share This Post