சீனாவில் உள்ள இலங்கை மாணவர்கள் நாடு திரும்புகின்றனர்

சீனாவில் உள்ள இலங்கை மாணவர்கள் நாடு திரும்புகின்றனர்
  • விமானச் சீட்டுகளுக்கு 50 வீத விலைக் கழிவு….
  •  வருகைத் தரும் மாணவர்களுக்கு தொடர்ச்சியான மருத்துவ பரிசோதனை….
  •  தேசிய சுகாதார செயலணி இன்று கூடுகின்றது…
  •  அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன…
  •  சீனவிலிருந்து வருகைத் தரும் விமானப் பயணிகளுக்கு தனியான வழி…

சீனாவிலுள்ள இலங்கை மாணவர்கள் நாட்டுக்கு திரும்பி வருகின்றனர். டியன்ஜினிலிருந்து 21 மாணவர்கள் இன்று பிற்பகல் இலங்கைக்கு தமது பயணத்தை ஆரம்பித்துள்ளதாக இலங்கையில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது. மாணவர்களை அழைத்துவரும் நடவடிக்கையினை ஜனாதிபதி அலுவலகம், வெளிவிவகார அமைச்சு, சுகாதார அமைச்சு, சீனாவில் உள்ள இலங்கை தூதரகம், ஸ்ரீ லங்கன் விமான சேவை இணைந்து தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றன.

சிச்சுஆன் உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களிலிருந்து விமான நிலையம் வரை பஸ் வண்டிகளின் மூலம் மாணவர்கள் அழைத்து வரப்படுகின்றனர். தெனினின் உள்ள 30 மாணவர்களும் இவர்களுடன் இணைந்து கொள்ளவுள்ளனர். வூஹான் மாகாணத்திற்கு உள்வருதல் மற்றும் வெளியேறுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை இன்னும் நீக்கப்படவில்லை. அங்குள்ள மாணவர்களை அழைத்து வருவது தொடர்பாக சீன அரசாங்கத்துடன் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஸ்ரீ லங்கன் விமான சேவை மாணவர்களுக்கு விமானச் சீட்டுக்கு விசேட கழிவினை வழங்கியுள்ளது. அவசர தொலைபேசி இலக்கத்தினூடாக ஸ்ரீ லங்கன் விமான சேவையுடன் தொடர்பினை மேற்கொண்டு மிக விரைவாக இந்த வசதியினை பெற்றுக்கொள்ள முடியும். கடன் அட்டை மூலம் கட்டணத்தை செலுத்தும்போது மூன்றாந்தரப்பு அட்டையினையும் பயன்படுத்துவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் பற்றிய அனைத்து தகவல்களும் திரட்டப்பட்டுள்ளன. ஜனாதிபதி அவர்களின் பணிப்புரையின்பேரில் சுகாதார அமைச்சு விசேட நிபுணர்களைக்கொண்ட செயலணியொன்றை நியமித்துள்ளது. சுகாதார அமைச்சர் பவித்ரா வண்ணியாரச்சியின் தலைமையிலான இக்குழு இன்று கூடவுள்ளது. இதன்போது அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து பல்வேறு தீர்மானங்கள் மேற்கொள்ளவுள்ளன.

உருவாகியிருக்கும் இந்த நிலைமைக்கு முகங்கொடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. மாணவர்களுடன் தொடர்ச்சியாக தகவல்கள் பரிமாறப்பட்டு வருகின்றன. எனவே பெற்றோர்கள் குழப்பமடைய வேண்டியதில்லை. தற்போது இலங்கைக்கு வருகை தந்துள்ள மாணவர்களை தொடர்ச்சியாக பரிசோதனைக்குட்படுத்துமாறும் அவ்வப்போது உடல் நிலைமைகளை கண்காணித்து சுகாதார நிலைமைகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

வைரஸ் தொற்றுடைய ஒருவரிடமிருந்து நோய் நிலைமை வெளிப்படுவதற்கு 20 நாட்கள் எடுப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அக்குறிப்பிட்ட காலப் பகுதியில் முகமூடியை அணிந்துகொள்ளுமாறும் நாட்டுக்கு வருகைத் தரும் அனைத்து மாணவர்களிடமும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

சீனாவிலிருந்து வருகைத் தரும் அனைத்து விமானப் பயணிகளுக்கும் வெளிச் செல்வதற்கான தனியான வழியை ஏற்படுத்துவதற்கு சிவில் விமான சேவை அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. எவரேனும் ஒருவர் காய்ச்சல் அறிகுறிகள் இருப்பதாக கண்டறியப்பட்டால் உடனடியாக ஐடிஎச் வைத்தியசாலைக்கு அனுப்பிவைப்பதற்கு அம்புலன்ஸ் உட்பட ஏனைய வசதிகள் தயார் நிலையில் உள்ளது.

Share This Post