அரிசி மற்றும் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்ட ஏனைய அத்தியாவசிய பொருட்கள் மீது அதிகபட்ச சில்லறை விலையை அமுல்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி உறுதி…

இந்த பண்டிகை காலப்பகுதியில் அரிசி மற்றும் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்ட ஏனைய அத்தியாவசிய பொருட்கள் மீது பிரகடனப்படுத்தப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை அமுல்படுத்தி, சந்தைக்கான இடையறாத விநியோகத்தை உறுதிசெய்வதற்கு உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அண்மையில் இவ் அதிகார சபை அரிசியின் அதிகபட்ச சில்லறை விலையாக கிலோ ஒன்றிற்கு 98 ரூபாவாக வர்த்தமானி மூலம் அறிவித்தல் விடுத்திருந்தது. பிரதான விநியோகஸ்தர்களுடன் கலந்துரையாடியும் நாட்டின் களஞ்சிய நிலைமைகளை உறுதிப்படுத்திக் கொண்டதன் பின்னருமே அமைச்சரவை இந்த தீர்மானத்திற்கு வந்துள்ளது.

பாரிய அரிசி ஆலைகளை வைத்திருப்பவர்கள் இந்த விலையை அவர்களது அரிசி பைக்கற்றுகளில் குறிப்பிட்டு தங்களது சில்லறை விநியோக வலயமைப்பு குறித்த அரிசியை அந்த விலைக்கே விற்பதனை உறுதிசெய்வதற்கு உடன்பட்டுள்ளனர். எவ்வாறானபோதும் பல்வேறு இடங்களில் இது நடைமுறையாவதில்லை என முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. எனவே சந்தை விநியோக நிலைமைகளை பரிசோதிப்பதற்காக ஒரு குழுவை அனுப்பி களஞ்சியப்படுத்தப்பட்டிருப்பதையும் அரிசி விநியோக நிலையங்களிலிருந்து நாளாந்தம் சந்தைக்கு விநியோகிக்கப்படும் அரிசி தொடர்பாகவும் கண்டறிவதற்கு நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபை புறக்கோட்டை மற்றும் ஏனைய பெரிய சந்தைகளில் அரிசி விநியோகம் குறித்து கண்டறிவதற்காக உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

மேலும் அரிசி ஆலைகளை வைத்திருப்பவர்களும் வர்த்தகர்களும் அரிசி தொழிற்துறையை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் மேற்கொண்டுவரும் முயற்சிகளை பாராட்டுவதுடன்,  தேவையற்ற அரிசி இறக்குமதி அல்லது சந்தை நடவடிக்கைகளில் அரசாங்கத்தின் ஏனைய தலையீடுகளுக்கு வழிவகுக்காது சந்தையின் விநியோக நிலைமைகளை உறுதி செய்வதும் அவர்களுடைய பொறுப்பாகும். 2019/2020 பெரும்போக பயிர்செய்கைக் காலம் ஆரம்பித்துள்ள நிலையில் 2020 ஜனவரி பிற்பகுதியில் அறுவடை எதிர்பார்க்கப்படுகின்றது. விவசாயிகள் தங்களது விவசாயத்தை விரிவுபடுத்துவதற்கு அதிகபட்ச வசதிகள் வழங்கப்படும் அதேநேரம், இந்த பண்டிகை காலப்பகுதியில் நுகர்வோர் கட்டுப்படியான விலைகளில் அரிசிகளை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். விநியோக பற்றாக்குறைகள் குறித்து பயப்படுவதற்கில்லை.

கோதுமை மா இறக்குமதியின் மீது விதிக்கப்பட்டிருந்த கட்டுபாடுகளை சந்தையின் போட்டித்தன்மையை ஊக்குவித்து, கோதுமை மா கட்டுப்படியான விலையில் கிடைப்பதற்கேற்ற வகையில் அரசாங்கம் தளர்த்தியுள்ளது. இது குறிப்பாக இந்த பண்டிகை காலப்பகுதியில் நகர்ப்புறங்களில் உள்ளவர்களுக்கும் பெருந்தோட்டத்துறை சமூகத்திற்கும் உதவும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதிகரித்த வாழ்க்கைச் செலவை குறைக்கும் நோக்குடனும் நாட்டில் விநியோக நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கு வர்த்தக நட்புறவுடைய சூழலொன்றை உருவாக்கும் நோக்குடனும் அரசாங்கம் இரண்டு சதவீத தேசத்தை கட்டியெழுப்பும் வரி மற்றும் ஏனைய பல்வேறு மறைமுகமான வரிகளையும் நீக்கி, வற் வரியை 15 வீதத்திலிருந்து 08 வீதமாக ஏற்கனவே குறைத்துள்ளது. பொருளாதார சேவைக்கட்டண நீக்கம் மற்றும் இலங்கை மத்திய வங்கியினால் அறிவிக்கப்பட்டுள்ள சலுகைகளிலிருந்து அரிசி ஆலைகளை வைத்திருப்பவர்களும் வர்த்தகர்களும் பயனடைவர். எவ்வாறானபோதும் சில பொருட்களின் விலைகள் திருப்தியான வகையில் குறைவடையவில்லை என அவதானிக்கப்பட்டுள்ளது. அனைத்து வகையான உணவுப் பொருட்கள், அழகு சாதனப் பொருட்கள், கட்டிடப் பொருட்கள் மற்றும் ஏனைய பல பொருட்களின் விலைகள் குறைக்கப்பட வேண்டும். எனவே இத்தகைய பொருட்களை விநியோகிப்பதில் ஈடுபட்டுள்ள அனைத்து துறையினருக்கும் இந்த நன்மைகளை நுகர்வோருக்கு வழங்குவதற்கும் வழமையான அடிப்படையில் வினைத்திறனான முறையில் சந்தைக்கான தொடர்பாடலை மேற்கொள்ளவும் நுகர்வோர் விவகார அதிகார சபை கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Share This Post