உழைப்பின் மகிமையை பாதுகாக்கும், திறன் கொண்ட சமூகமொன்றை உருவாக்கும் கல்வி முறை ஏற்படுத்தப்படும் –   ஜனாதிபதி

உழைப்பின் மகிமையை பாதுகாக்கும், திறன் கொண்ட சமூகமொன்றை உருவாக்கும் கல்வி முறை ஏற்படுத்தப்படும் –   ஜனாதிபதி
  • பி.சி.ஐ வளாக பட்டப் பதிவுகள் ஆரம்பம் …

“புதிய இயல்பு நிலையின்” கீழ் உழைப்பின் மகிமையை பாதுகாக்கும் மற்றும் திறன்கள் நிறைந்த ஒரு சமூகத்தை உருவாக்கக் கூடிய கல்வி முறை அறிமுகப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

விரைவான அபிவிருத்திக்காகவும், குறுகிய காலத்தில் எதிர்பார்க்கப்படும் பொருளாதார இலக்குகளை அடையவும் தேசிய கல்வி கொள்கை ஏற்கனவே வகுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

இன்று (15) பிற்பகல் நீர்கொழும்பில் உள்ள 16வது பெனடிக்ட் கத்தோலிக்க உயர் கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற பட்டப்படிப்புகளை பதிவு செய்வதற்கான ஆரம்ப விழாவில் கலந்துகொண்டு ஜனாதிபதி அவர்கள் இதனை தெரிவித்தார்.

21 ஆம் நூற்றாண்டின் சிரேஷ்ட அறிஞர்களில் ஒருவரான திருத் தந்தை புனித 16வது பெனடிக்ட் ஆண்டகைக்கு கௌரவம் செலுத்தும் வகையில் பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் எண்ணக்கருவின் அடிப்படையில் பி.சி.ஐ உயர்கல்வி நிறுவனம் 2015 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. பி.சி.ஐ நிறுவனம் மினுவங்கொட வீதி, போலவலானவில் உள்ள இலங்கை ஆசிரியர் பயிற்சி கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளில் 17,200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆங்கிலம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழிற்கல்வி பாடநெறிகளை இங்கு பயின்றுள்ளனர்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்பு வழங்கும் நிறுவனமாக மாறிய பின்னர் ஆங்கில மொழி மூல நடுத்தர வணிக முகாமைத்துவ கௌரவ பட்டம் (Bachelor of Business Management (BSc.) Hons) மற்றும் தகவல் தொழில்நுட்ப இளங்கலை (Bachelor of Information Technology (BSc.) Hons) பட்டம் பெறுவதற்கான வாய்ப்பு மாணவர்களுக்கு கிடைக்கும்.

பல்கலைக்கழக கல்வியின் தரத்தை சிறந்த தரத்திற்கு உயர்த்துவதற்கு அதிக முன்னுரிமை அளிப்பதே தனது நோக்கம் என்று ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். அனைத்து பல்கலைக்கழகங்களையும் “ஸ்மார்ட் பல்கலைக்கழகங்களாக” மாற்றுவதன் அவசியத்தையும், தொழில்நுட்ப அறிவு நிறைந்த எதிர்கால தலைமுறையை உருவாக்குவதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.

பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் வழிகாட்டுதலின் கீழ் தொழில்நுட்ப அறிவையும் சிறந்த விழுமியங்களையும் சரியான சிந்தனையையும் கொண்ட ஒரு தலைமுறையை எதிர்காலத்திற்கு வழங்கி பி.சி.ஐ வளாகம் அடைந்துள்ள முன்னேற்றத்தை ஜனாதிபதி அவர்கள் பாராட்டினார்.

“வர்த்தக மற்றும் தகவல் தொழில்நுட்பத்தின் ஊடாக எதிர்காலத்தை நோக்கி” என்ற தலைப்பில் பேராசிரியர் அஜந்த தர்மசிறி சிறப்புரையாற்றினார். பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் அவர்கள் பி.சி.ஐ வளாகத்தின் எதிர்கால பயணம் குறித்து தனது உரையில் விளக்கினார்.

முதல் தொகுதி பட்டப்படிப்பு மாணவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சில மாணவர்களுக்கு ஜனாதிபதி அவர்கள் பதிவுக் கடிதங்களை வழங்கினார்.

பி.சி.ஐ வளாகத்திற்கு ஜனாதிபதி அவர்கள் வழங்கிய அனுசரணையை பாராட்டி பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் அவர்கள் ஜனாதிபதி அவர்களுக்கு நினைவுப் பரிசொன்றை வழங்கினார்.

விழா நிகழ்வுகளை தொடர்ந்து, ஜனாதிபதி அவர்கள், பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் கல்வி அமைச்சர் ஆகியோர் மூன்று சந்தன மரக்கன்றுகளை நிறுவன வளாகத்தில் நட்டனர்.

நிர்மாணிக்கப்பட்டு வரும் பி.சி.ஐ வளாகத்தை ஜனாதிபதி அவர்களும் அதிதிகளும் பார்வையிட்டனர்.

கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் மேல் மாகாண ஆளுநர் முன்னாள் விமானப்படைத் தளபதி, மார்ஷல் ஒப் த எயார்போர்ஸ் ரொஷான் குணதிலக, இராஜாங்க அமைச்சர்களான சுதர்ஷனி பெர்னாண்டோபுல்லே, நிமல் லான்சா, கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா மற்றும் பி.சி.ஐ வளாக பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

 

 

Share This Post