உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த அறிக்கையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவுக்கு விரிவான பொறுப்பு …

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த அறிக்கையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவுக்கு விரிவான பொறுப்பு …

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராய்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் நியமித்த ஆறு பேர் கொண்ட குழுவுக்கு விரிவான பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இத்தகையதொரு பாரிய அளவிலான தேசிய பேரழிவு மீண்டும் நிகழாமல் தடுப்பதற்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளதன் பிரகாரம் பாராளுமன்றம், நீதித்துறை, சட்டமா அதிபர் திணைக்களம், பாதுகாப்புப் படைகள், அரச புலனாய்வு சேவைகள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் உட்பட ஒட்டுமொத்த செயன்முறையை அடையாளம் காணுதல் மற்றும் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தல் அதில் பிரதான இடம் வகிக்கின்றது. இந்த பரிந்துரைகளை வெற்றிகரமாக செயற்படுத்த தனியொரு நிறுவனத்தினால் முடியாது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக  விசாரணை செய்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு கடந்த அரசாங்கத்தினால் 2019 இல் நியமிக்கப்பட்டது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தேசிய பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை, பொருளாதாரம், மத நல்லிணக்கம் மற்றும் சமூக வாழ்க்கை ஆகியவற்றில் பேரழிவு தரக்கூடிய பாதிப்பை ஏற்படுத்திய ஒரு சம்பவம் என தற்போதைய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இதற்கு அடிப்படையான பின்னணி நாட்டின் சுதந்திரம் மற்றும் ஸ்திரத்தன்மைக்கு தீங்கு விளைவித்து வெளித் தலையீட்டிற்கும் வாய்ப்புகளை ஏற்படுத்தும். இலங்கை தேசத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் பொருளாதார சுபீட்சம் ஆகியவற்றை உறுதி செய்வதற்கு இதுபோன்ற தீவிரவாத வன்முறைகள் மீண்டும் இடம்பெறுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும். இதற்கு மத தீவிரவாதம் மற்றும் அதனுடன் தொடர்புடைய பயங்கரவாத வன்முறை, இனங்களுக்கிடையில் குரோதத்தை வளர்க்கும் கருத்துக்கள் மற்றும் அத்தகைய குழுக்களுக்கு கிடைக்கும் வெளிநாட்டு நிதியுதவி ஆகியவற்றை முழுமையாக நிறுத்த வேண்டும்.

இந்த பரந்த நோக்கங்களை அடைய ஒவ்வொரு அரச நிறுவனமும் அதிகாரிகளும் என்ன செய்ய வேண்டும் மற்றும் ஒவ்வொரு பணிக்கும் வழங்கப்பட வேண்டிய முன்னுரிமை என்பவற்றை ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அடையாளம் கண்டுள்ளது. பரிந்துரைக்கப்பட்ட நடவடிக்கைகளை எடுக்க தற்போதுள்ள நிர்வாக கட்டமைப்பு போதுமானதாக இல்லாவிட்டால், நிர்வாக பொறிமுறையில் தேவையான மாற்றங்களை செய்ய வேண்டும். ஜனாதிபதி அவர்கள் நியமித்த பாராளுமன்றக் குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பு, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையின் உள்ளடக்கங்களை ஆராய்ந்து, இதுபோன்ற பேரழிவு மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கும் இலங்கையின் நீடித்த சமாதானம், பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதிசெய்வதற்கும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய விதம் குறித்து அறிக்கையிடுவதாகும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளின்படி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான வழக்கு மற்றும் விசாரணை ஏற்றுக்கொள்ளப்பட்ட நீதி முறைமைக்கு ஏற்ப நடைபெறும். அதில் பாராளுமன்றக் குழு தலையிடும் என்று எதிர்பார்க்கப்படவில்லை. விசாரணை ஆணைக்குழு அறிக்கைக்கு புதிதாக பரிந்துரைகளை சேர்ப்பதுவும் இந்த குழுவின் பொறுப்பல்ல. உண்மை இவ்வாறிருக்கும் போது, பாராளுமன்றக் குழுவின் பொறுப்பு குறித்து தவறான கருத்தை சமூகமயமாக்க சிலர் முயற்சிக்கின்றனர்.

 

ஆறு பேர் கொண்ட குழுவின் உறுப்பினர்கள் அவர்களின் அரசியல் முதிர்ச்சி, அனுபவம் மற்றும் பல்வேறு துறைகளில் உயர் அறிவு ஆகியவற்றின் அடிப்படையிலேயே தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

Share This Post